இந்திய கிரிக்கெட்டில் புதிய அத்தியாயத்தை எழுதும் வகையில், வெறும் 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி, பிஹார் மாநில ரஞ்சி கோப்பை அணியின் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ரஞ்சி டிராபி 2025-26 தொடரில், அக்டோபர் 15 அன்று அருணாச்சல பிரதேசத்திற்கு எதிரான போட்டியில் இவர் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கினார். பாட்னாவில் நடந்த இப்போட்டியின் முதல் இன்னிங்ஸின் முதல் நான்கு பந்துகளில், இரண்டு பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடித்து வைபவ் மிரட்டினார்.
280.00 என்ற அதிரடி ஸ்ட்ரைக் ரேட்டுடன் வெறும் ஐந்து பந்துகளில் 14 ரன்கள் எடுத்து இவர் ஆட்டமிழந்தாலும், இவர் கொடுத்த தொடக்கம் அணியை வலுப்படுத்தியது. (பிஹார் அணி 28 ஓவர் முடிவில் 167/2 ரன்கள் எடுத்திருந்தது. இதில் அர்னவ் கிஷோர் 52 ரன்களும், ஆயுஷ் லோஹருக்கா 94 ரன்களும் எடுத்திருந்தனர்).
சமஸ்திபூரை சேர்ந்த இடதுகை ஆட்டக்காரரான வைபவ், 2023-24 சீசனில் தனது 12 வயதில் ரஞ்சி டிராபியில் அறிமுகமானார். மேலும், 13 வயதில் ஐபிஎல் ஏலத்தில் ஒப்பந்தமான இளம் வீரர் என்ற சாதனையையும் படைத்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக 35 பந்துகளில் சதம் அடித்து, ஆடவர் டி20 கிரிக்கெட்டில் சதம் அடித்த உலகின் இளைய வீரர் (14) என்ற உலக சாதனையும் இவர் வசமே உள்ளது.