இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் திடீரென கடந்த ஏப்ரல் மாதம் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது இன்றளவும் விவாதப் பொருளாக உள்ளது. தற்போது 36 வயதாகும் அவர் ஓய்வு முடிவை அறிவித்த போது ரசிகர்களுக்கு அதிர்ச்சியான ஒன்றாக அமைந்தது. ஏற்கனவே அவர் டி 20 போட்டிகளில் இருந்தும் கடந்த ஆண்டு ஓய்வை அறிவித்துவிட்டதால் தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார்.
ஆனால் விரைவில் நடக்கவுள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரோடு அவர் ஒருநாள் போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவிக்கலாம் என சொல்லப்படுகிறது. ஏனென்றால் அவரை உள்ளூர் போட்டிகளில் விளையாட சொல்லி பிசிசிஐ அழுத்தம் கொடுப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் தொடர்ந்து போட்டிகளில் விளையாடினால்தான் உடல்தகுதி இருக்கும் என அவர் மீது விமர்சனங்களும் வைக்கப்படுகின்றன.
இந்நிலையில் கோலியின் ஃபிட்னெஸ் குறித்துப் பேசியுள்ள முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் “கோலியின் ஃபிட்னெஸ் பற்றி எதுவும் பேசாதீர்கள். ஏனென்றால் ஃபிட்னெஸின் குருவே அவர்தான். அவரின் வழியைதான் அனைவரும் பின்பற்றுகிறார்கள். உலகின் சிறந்த ஃபிட்னெஸ் உள்ள கிரிக்கெட் வீரர் அவர்தான். அவர் இன்னும் நீண்ட நாட்கள் விளையாடவேண்டும். அவர் கிரிக்கெட்டுக்குக் கொடுக்க வேண்டியது இன்னும் நிறைய உள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அவரின் ஆட்டத்தைக் காண ஆர்வமாக உள்ளேன்” எனக் கூறியுள்ளார்.