7 ஆண்டுகளுக்குப் பிறகு ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட்!

vinoth

புதன், 15 ஜனவரி 2025 (13:30 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடந்து முடிந்த பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலியா 3-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரை இழந்துள்ளது. இந்த தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோலி மற்றும் கேப்டன் ரோஹித் ஷர்மா ஆகியோர் சரியாக விளையாடாததே தோல்விக்கு முக்கியக் காரணமாக சொல்லப்படுகிறது.

இதன் காரணமாக அனைத்து வீரர்களும் ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என்ற கருத்துகள் எழுந்துள்ளன. இதையடுத்து கேப்டன் ரோஹித் ஷர்மா தன்னுடைய ஃபார்மை மீட்டெடுக்க மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை ரஞ்சி அணியோடு அவர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் 7 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ரஞ்சிக் கிரிக்கெட்டில் விளையாடவுள்ளார். அவர் வரும் 23 ஆம் தேதி நடக்கவுள்ள சௌராஷ்டிரா அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணிக்காக விளையாடவுள்ளார். இதே போல ஜெய்ஸ்வால் மற்றும் ஷுப்மன் கில் ஆகியோரும் தாங்கள் ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் விளையாட தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்