இந்தியா 321 ரன்கள் குவிப்பு –விராட் கோலி 157 நாட் அவுட்

Webdunia
புதன், 24 அக்டோபர் 2018 (17:29 IST)
இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2 வது ஒருநாள் கிரிக்கெட்டின் முதல் இன்னிங்ஸில் இந்தியா அணி விராட் கோலியின் அபார சதத்தால் 321 ரன்கள் சேர்த்துள்ளது.

5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் அக்டோபர் 21 ந்தேதி கவுகாத்தியில் நடைபெற்ற இந்தியா -  வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான  முதல் போட்டியில் இந்தியா  அபாரமாக விளையாடி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.

அதையடுத்து 2-வது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோஹித் ஷர்மா 4 ரன்களிலும் ஷிகார் தவான் 29 ரன்களிலும் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். ஆனால் அதன் பின் ஜோடி கோலி மற்றும் அம்பாத்தி ராயுடு இணை சீராக விளையாடி ரன்குவிப்பில் ஈடுபட்டது. சிறப்பாக விளையாடிய அம்பாத்தி ராயுடு 73 ரன்களில் ஆவுட் ஆகி வெளியேறினார்.

இதற்கிடையில் விராட் கோலி 81 ரன்களைக் கடந்த போது ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 10000 கடந்த 13 வது வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார். மேலும் குறைந்த இன்னிங்ஸ்களில் 10000 ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையையும் சச்சினிடம் இருந்து கைப்பற்றினார்.

ராயுடுவின் விக்கெட்டுக்குப் பிறகு வந்த தோனி 20 ரன்களிலும் ரிஷப் பாண்ட் 17 ரன்களிலும், ஜடேஜா 13 ரன்களிலும்  வெளியேறி ஏமாற்றம் அளித்தாலும் நிலைத்து நின்று விளையாடிய் கோலி தனது 37 சதத்தைப் பூர்த்திச் செய்தார்.

சதத்திற்குப் பின் ருத்ரதாண்டவம் ஆடிய கோலி பவுண்டரிக்கும் சிக்ஸர்களுக்கும் பந்துகளை விரட்டினார். இதனால் ஐம்பது ஓவர்கள் முடிவில் இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்கள் என்ற வலுவான ஸ்கோரை எட்டியது. இறுதி வரை ஆட்டமிழக்காத விராட் கோலி 129 பந்துகளில் 157 ரன்கள் சேர்த்தார். அதில் 13 பவுண்டரிகளும் 4 சிக்ஸர்களும் அடங்கும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்