துபேவுக்கு பதில் ராணாவா?... அதிருப்தியை பதிவு செய்த இங்கிலாந்து கேப்டன் பட்லர்!

vinoth

சனி, 1 பிப்ரவரி 2025 (09:17 IST)
நேற்று நடந்த இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றாலும் ஒரு சர்ச்சை எழுந்துள்ளது. இந்த போட்டியில் ஷிவம் துபே பேட் செய்யும் போது 20 ஆவது ஓவரில் பந்து அவர் ஹெல்மெட்டில் தாக்கியதால் அவருக்கு கன்கஷன் சோதனை நடத்தப்பட்டது. அதன் பின்னர் கன்கஷன் மாற்று வீரராக அவருக்குப் பதில் ஹர்ஷித் ராணா ஆட்டத்தில் இணைந்தார்.

அவரின் முதல் டி 20 போட்டியாக அமைந்த இந்த இன்னிங்ஸில் மூன்று விக்கெட்களை வீழ்த்தி வெற்றிக்குக் காரணமாக அமைந்தார். இதில்தான் தற்போது சர்ச்சைக் கிளம்பியுள்ளது. ஒரு வீரருக்குக் கன்கஷன் ஏற்பட்டு அவருக்குப் பதில் மாற்று வீரரை இறக்கினால் அவருக்கு சமமான மாற்றுவீரரைதான் இறக்க வேண்டும் என்பது ஐசிசி விதி. ஆனால் துபேவுக்கு எந்தவிதத்திலும் சமமானவர்களாக இல்லாத ஹர்ஷித் ராணாவை இறக்கியது சரியல்ல எனக் கருத்துகள் எழுந்தன.

இந்நிலையில் இதுபற்றி இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் அதிருப்தியைத் தெரிவித்துள்ளார். அதில் ‘நான் இதை முதலில் கேட்டபோதே ஆட்சேபம் தெரிவித்தேன். ஆனால் போட்டி நடுவர் இதை ஏற்றுக்கொண்டதாக சொன்னதால் என்னால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. துபே 150 கிமீ வேகத்தில் பந்துவீசியவரும் இல்லை, ராணா பேட்டிங்கில் பங்களிப்பை செய்தவரும் இல்லை. இதனால் இருவரும் சமமான வீரர்கள் இல்லை. இது சம்மந்தமாக நாங்கள் போட்டி நடுவரிடம் விளக்கம் கேட்கவுள்ளோம். அடுத்த போட்டியின் டாஸின் போது நானும் 12 வீரர்களோடு விளையாடப் போகிறேன் என சொல்லலாம் என நினைக்கிறேன்”எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்