பும்ரா போட்ட நோ பாலை வைத்து விளம்பரம் ; ஜெய்ப்பூர் போலீஸ் அடாவடி

Webdunia
சனி, 24 ஜூன் 2017 (14:05 IST)
இந்திய கிரிக்கெட் வீரர் ஜஸ்பிரிட் பும்ரா வீசிய நோ பாலை,  போக்குவரத்து விதிமுறைகளை குறித்த ஒரு விளம்பரத்திற்கு ஜெய்ப்பூர் போலீஸ் பயன்படுத்தியுள்ள விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


 

 
சமீபத்தில் நடந்து முடிந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியில், பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வி அடைந்தது. அந்த ஆட்டத்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா போட்ட  ‘நோ பால்’ ஒருவகையில் பாகிஸ்தான் வெற்றி பெற காரணமாக அமைந்தது. 
 
ஜஸ்பிரீத் போட்ட ஒரு பாலில், பாகிஸ்தான் அதிரடி ஆட்டக்காரர் பகார் சமான் அடித்த பந்து கேட்ச் பிடிக்கப்பட்டது. ஆனால், ஜஸ்பிரீத் போட்டது ‘நோ பால்’ என்பதால் அது பாகிஸ்தானுக்கு சாதகமாக அமைந்தது. அதன்பின் சமான் ஏராளமான ரன்கள் எடுத்து பாகிஸ்தானுக்கு வெற்றியை பெற காரணமாக இருந்தார்.
 
இந்நிலையில், ஜஸ்பிரிட் போட்ட நோ பாலை, புகைப்படமாக வைத்து, போக்குவரத்து விதிமுறைகளை மதியுங்கள், சிக்னல் நிறுத்தத்தில், சாலையில் உள்ள கோட்டை தாண்டி செல்லாதீர்கள். அப்படி சென்றால் ஆபத்து என்பதை விளக்கவே, ஜஸ்பிரித் போட்ட நோ பால் புகைப்படத்தை பயன்படுத்தியிருந்தனர்.
 
இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விளம்பரத்தைக் கண்ட ஜஸ்பிரித் தனது டிவிட்டர் பக்கத்தில் “நல்ல வேலை செய்துள்ளீர்கள் ஜெய்ப்பூர் போலீஸ். நாட்டுக்காக தங்களது உண்மையான உழைப்பை கொடுப்பவர்களுக்கு இதுதான் நீங்கள் கொடுக்கும் மரியாதை” என ஒரு டிவிட்டிலும் “ ஆனால், கவலைப் படாதீர்கள். உங்கள் வேலையில் நீங்கள் செய்துள்ள தவறு பற்றி நான் கிண்டலடிக்க மாட்டேன். மனிதர்கள் தவறு செய்வது சகஜம்தான்” என நக்கலாகவும் ஒரு டிவிட் செய்துள்ளார்.


 

 
இதைத்தொடர்ந்து அவருக்கு பதிலளித்துள்ள ஜெய்ப்பூர் போலீஸ் “உங்களின் செண்டிமெண்டையோ அல்லது பல லட்சக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களின் செண்டிமெண்டையோ காயப்படுத்துவது எங்கள் நோக்கமில்லை” என ஒரு டிவிட் செய்துள்ளனர். 
 
அடுத்த கட்டுரையில்