’நான் பதில் சொல்ல விரும்பவில்லை’ - ரவிசாஸ்திரி கருத்துக்கு கங்குலி பதிலடி

Webdunia
திங்கள், 27 ஜூன் 2016 (16:10 IST)
நேர்காணலின் போது கங்குலி அங்கு இல்லை என்ற ரவிசாஸ்திரியின் குற்றச்சாட்டுக்கு தான் பதில் சொல்ல விரும்பவில்லை என்று கங்குலி பதிலடி கொடுத்துள்ளார்.
 

 
சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, விவிஎஸ். லட்சுமணன் ஆகிய மூவரின் ஆலோசனையை ஏற்று முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் அனில் கும்ப்ளே இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக தேர்ந்தெடுக்கப்படுவதாகவும், கும்ப்ளே ஓராண்டு இப்பதவியில் நீடிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்ட. இந்த பந்தயத்தில் ரவி சாஸ்திரியும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
 
இதுகுறித்து ஆங்கில நாளிதழுக்கு அளித்த நேர்காணலில் ரவி சாஸ்திரி கூறும்போது, ”நான் உண்மையில் கடுமையாக ஏமாற்றமடைந்துள்ளேன். ஏனெனில் கடந்த 18 மாதங்களாக கடுமையாக உழைத்தோம். நான் நேர்மையாக, கடினமாக உழைத்தேன். வீரர்களும் அருமையானவர்கள்.
 
இந்த காலக்கட்டங்களில் நீதிமன்றத்திலும் ஊடகங்களிலும் பிசிசிஐ-மீது கடும் விமர்சனங்கள், தாக்குதல்கள் எழுந்தன. ஆனால் கிரிக்கெட் பிரகாசித்தது. இந்திய அணி விளையாடும் விதத்தை பார்ப்பதற்காக மக்கள் ஆவலுடன் கூடினர்.
 
ஸ்கைப் மூலம் லஷ்மண், சஞ்சய் ஜக்தாலே, சச்சின் ஆகியோர் என்னிடம் அருமையான கேள்விகளைக் கேட்டனர். நேர்காணல் அபாரமாக அமைந்தது. அனைத்து வடிவங்களுக்கும் எனது திட்டம் என்ன? வேகப்பந்து வீச்சாளர்களை நாம் எப்படி கையாள வேண்டும் என்ற கேள்விகளை எழுப்பினர்.
 
நான் எனது திட்டங்களைக் கூறினேன். சவுரவ் கங்குலி எனது நேர்காணலின் போது இல்லை" என்று குறிப்பிட்டு இருந்தார்.
 
இதனால் கங்குலி ஏன் நேர்காணலில் கலந்துகொள்ளவில்லை என்ற கேள்வி எழுந்து வருகிறது. இந்நிலையில் ரவி சாஸ்திரி கருத்துக்கு பதில் சொல்ல விரும்பவில்லை என்று கங்குலி கூறியுள்ளார்.
 
இதுகுறித்து கங்குலி கூறுகையில் ‘‘தலைமை பயிற்சியாளருக்கான நேர்காணல் முற்றிலும் ரகசியமானது. ரவி சாஸ்திரி கருத்துக்கள் பற்றி பதில் கூற நான் விரும்பவில்லை. நீங்கள் ஆலோசனைக் குழுவில் உள்ள மற்ற உறுப்பினர்களிடம்தான் கேட்டு இருக்க வேண்டும்’’ என்றார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்