“அவரை ரொம்பக் கொண்டாட வேண்டாம்…பவுலர்கள் உஷார் ஆகிவிட்டார்கள்” –சூர்யவன்ஷி குறித்து கவாஸ்கர்!

vinoth

வெள்ளி, 2 மே 2025 (07:29 IST)
சில தினங்களுக்கு முன்னர் நடந்த  நடந்த ஐபிஎல் போட்டி இந்த சீசனின் மறக்க முடியாதப் போட்டியாக ரசிகர்களுக்கு அமைந்தது. குஜராத் அணிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைச் சேர்ந்த வைபவ் சூர்யவன்ஷி 35 பந்துகளில் சதமடித்து உலகக் கிரிக்கெட்டை தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். அவரது இந்த இன்னிங்ஸில் 11 சிக்ஸர்களும் 7 பவுண்டரிகளும் அடக்கம். ஐபிஎல் கிரிக்கெட்டில் கிறிஸ் கெய்லுக்குப் பிறகு குறைந்த பந்துகளில் சதமடித்த வீரர் என்ற பெருமையை சூர்யவன்ஷி பெற்றுள்ளார்.

இதன் காரணமாக கடந்த சில தினங்களாக அவர் கிரிக்கெட் உலகில் பேசுபொருளாகியுள்ளார். அவரை ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் கொண்டாடி வருகின்றனர். இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் அவரைப் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கைப் பல மடங்கு அதிகமாகியுள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சுனில் கவாஸ்கர் சூர்யவன்ஷி குறித்து ஒரு முக்கியமானக் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதில் “சூர்யவன்ஷி தன்னை நிரூபித்துதான் ஐபிஎல் தொடருக்குள் வந்துள்ளார். அதனால் அவரின் பேட்டிங் மேலும் மேலும் சிறப்படைய வேண்டும். அதனால் அவரை ரொம்ப தூக்கிவைத்துக் கொண்டாட வேண்டாம். அவர் ஒரு அதிரடி வீரர் என்ற பெயரைப் பெற்று விட்டதால் அனைத்துப் போட்டிகளிலும் அந்த பெயரைக் காப்பாற்ற வேண்டும் என நினைக்கக் கூடாது, பவுலர்கள் அவர் முதல் பந்தில் இருந்தே சிக்ஸர் அடிக்க முயல்வார் என்று தெரிந்து கொண்டதால் அதற்கேற்ற மாதிரிதான் வீசுவார்கள். அவரை உடனடியாக வீழ்த்த வேண்டும் என்று நினைக்க ஆரம்பித்துள்ளார்கள்.” எனக் கூறியுள்ளார். கவாஸ்கர் சொன்னது போல மும்பை அணிக்கு எதிரானப் போட்டியில் சூர்வன்ஷி இரண்டு பந்துகள் மட்டுமே எதிர்கொண்டு ரன்கள் எதுவும் சேர்க்காமல் தன் விக்கெட்டை இழந்தார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்