சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு முன்பாக இந்திய அணி ஆஸ்திரேலியா சென்று பார்டர்- கவாஸ்கர் தொடரில் விளையாடியது. அதில் 3-1 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்தது. அந்த தொடரில் மோசமாக விளையாடினார் ரோஹித் ஷர்மா. இதனால் அவர் இனிமேல் டெஸ்ட் போட்டிகளுக்கான அணியில் இடம்பெற மாட்டார் எனவும், டெஸ்ட் கேப்டன்சி அவரிடம் இருந்து பும்ராவுக்கு கைமாற்றப்படும் எனவும் தகவல் பரவியது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
இந்நிலையில் டெல்லியில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கம்பீர் கோலி மற்றும் ரோஹித் ஆகியோரின் எதிர்காலம் குறித்துப் பேசியுள்ளார். அதில் “அணிக்குப் பிளேயிங் லெவன் வீரர்களைத் தேர்வு செய்வது மட்டும்தான் பயிற்சியாளரின் வேலை. அணிக்கு வீரர்களைத் தேர்வு செய்வது இல்லை. விராட் கோலியும், ரோஹித் ஷர்மாவும் சிறப்பாக விளையாடும் வரை அவர்கள் அணியின் அங்கமாக இருப்பார்கள். வீரர்கள் ஓய்வு பெறும் முடிவை எடுப்பது அவர்களின் தனிப்பட்ட விருப்பம். சிறப்பாக செயல்பட்டா நீங்கள் 40, 45 வயது வரைக் கூட ஜாலியாக விளையாட முடியும். உங்களை யார் தடுக்க முடியும்?” எனக் கூறியுள்ளார்.