யாரும் அதற்கு ஒத்துக் கொள்ள மாட்டார்கள்… ஸ்டோக்ஸின் முடிவுக்கு கம்பீர் பதில்!

vinoth

திங்கள், 28 ஜூலை 2025 (10:27 IST)
இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி ‘டெஸ்ட் போட்டிக்கே உரிய அம்சத்தோடு’ நடந்து சமனில் முடிந்துள்ளது. இந்த போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 358 ரன்கள் சேர்க்க, தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி 669 ரன்கள் சேர்த்தது.

அதன் பின்னர் ஆடிய இந்திய அணி ஐந்தாம் நாள் முடிவில் 425 ரன்கள் சேர்த்து 4 விக்கெட்களை இழந்து ஆடியது. இதனால் போட்டி சமனில் முடிந்தது. இதற்கிடையில் போட்டியின் கடைசி மணிநேரத்தில் இன்னும் 15 ஓவர்கள் வீசப்பட இருந்த நிலையில் ஜடேஜாவிடம் வந்து பென் ஸ்டோக்ஸ் போட்டியை இதோடு முடித்துக்கொள்ளலாம் எனக் கேட்டார். ஆனால் அப்போது ஜடேஜா மற்றும் வாஷிங்டன் ஆகிய இருவரும் முறையே 89 மற்றும் 80 ரன்களில் இருந்ததால் சதமடிக்கும் வாய்ப்பைப் பெற்றிருந்தனர். அதனால் போட்டியை முடித்துக் கொள்ள முடியாது என்று சொல்லிவிட்டார். இது சம்மந்தமாக பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜடேஜா ஆகிய இருவருக்கும் இடையே நடந்த ஸ்டம்ப் மைக் உரையாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனால் போட்டி முடிந்ததும் பென் ஸ்டோக்ஸ் தனது அதிருப்தியை வெளிக்காட்டும் விதமாக நடந்துகொண்டார்.

பென் ஸ்டோக்ஸின் முடிவை ஏற்காதது குறித்துப் பேசியுள்ள இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ‘இரண்டு வீரர்கள் சதத்தை நெருங்கும்போது யாரும் போட்டியை முடித்துக் கொள்ள ஒத்துக்கொள்ள மாட்டார்கள். அதிலும் ஒரு வீரர் முதல் முதலாக தன்னுடைய டெஸ்ட் சதத்தை அடிக்க வாய்ப்பிருக்கும் போது அந்த வாய்ப்பை இழக்க முடியாது. இதனால் ஸ்டோக்ஸ் அதிருப்தி அடைந்தால் அடையட்டும்.” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்