பயிற்சியாளரை மட்டும் சார்ந்திருக்கக் கூடாது… இளம் வீரர்களுக்கு அஸ்வின் எச்சரிக்கை!

vinoth
வியாழன், 22 ஆகஸ்ட் 2024 (07:48 IST)
தற்போது டெஸ்ட் விளையாடி வரும் பவுலர்களில் தனிச்சிறப்பு வாய்ந்தவர் அஸ்வின். 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 516 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார். இந்தியா சார்பாக டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் அனில் கும்ப்ளேவுக்குப் பிறகு இரண்டாவது இடத்தில் உள்ளார் அஸ்வின்.

இவர் சமீபகாலமாக ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளில் விளையாட அழைக்கப்படுவதில்லை. ஆனால் இளம் வீரர்களுக்கு தன்னுடைய யுடியூப் சேனலின் மூலமாக பல ஆலோசனைகளை வழங்கி வருகிறார். அதுபோல பல மூத்த வீரர்களை நேர்காணல் செய்து அவர்களது அனுபவங்களை வெளிக்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் அவர் பேசும்போது இளம் வீரர்கள் முழுக்க முழுக்க, பயிற்சியாளர்களை மட்டுமே நம்பி இருக்கக் கூடாது எனக் கூறியுள்ளார். மேலும் “நவீன கால கிரிக்கெட்டில் எனக்குப் பிடிக்காத விஷயம் என்னவென்றால், ஒரு கிரிக்கெட் வீரருக்கு ஒரு உத்தி பயன் தருகிறது, என்றால் அதையே எல்லா வீரர்களையும் பின்பற்ற சொல்லுவதுதான். ஒரு வீரருக்கு பயிற்சியாளர் முக்கியம்தான், ஆனால் அவரையே முழுவதுமாக சார்ந்திருப்பது, அவ்வீரரின் முழுமையான திறனை வெளிக்கொண்டு வராது. உங்கள் விளையாட்டு சம்மந்தமாக நீங்கள் விழிப்புணர்வோடு இல்லையென்றால், நீங்களே உங்களுக்குக் கற்றுத்தர முடியவில்லை என்றால் நீங்கள் எப்போதுமே மற்றவர்களை சார்ந்துதான் இருக்கவேண்டும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்