"இலங்கையில் கின்னஸ் சாதனை படைத்த உலகின் பெரிய ரத்தினக்கல், சந்தையில் விலை மதிப்புக்குறைவானது"

Webdunia
வெள்ளி, 26 மே 2023 (21:30 IST)
இலங்கையில் கிடைத்த உலகிலேயே மிக பெரியதாக அறியப்பட்ட கொத்தணி என கூறப்பட்ட ரத்தினக்கல் கொத்தணி, முன்பு குறிப்பிடப்பட்ட பெறுமதியை விட மதிப்புக் குறைவானது என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
 
இலங்கை நாடாளுமன்றத்தின் கோப் குழுவில் இந்த விடயம் உறுதியாகியுள்ளது.
 
ரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபையின் அதிகாரிகள், கோப் குழு முன்னிலைக்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்திலேயே இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டது.
 
இந்த விடயம் தொடர்பில் ரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபையின் அதிகாரிகள் செயற்பட்ட விதமானது, அதன் நிபுணத்துவத்திற்கு ஏற்புடையது அல்ல என்று கோப் குழுவின் உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்திருந்தார்.
 
வருமான வரித்துறை சோதனை எங்கெல்லாம் நடக்கிறது - அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியது என்ன?
 
''ரத்தினக்கல் கொத்தணி தொடர்பில் கடந்த காலங்களில் அதிகம் பேசப்பட்டது. எனினும், அந்த கல் விற்பனை செய்யப்படாது, மீள கொண்டு வரப்பட்டுள்ளது. இவ்வாறான கொத்தணிகள் அனைத்து இடங்களிலும் காணப்படுவதை நாம் அவதானித்திருக்கின்றோம். ஏன் இவ்வாறான பொய்யை செய்தீர்கள்?" என அநுர பிரியதர்ஷன யாப்பா, ரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபையின் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார்.
 
இந்த கல்லானது 510 கிலோகிராம் எடையுடையது எனவும், அதனை துண்டுகளாக பிரிக்க முடியாது எனவும் அதிகாரிகள் பதிலளித்திருந்தனர். அத்துடன், உலகிலேயே மிக பெரிய ரத்தினக்கல் கொத்தணி என்ற கின்னஸ் சாதனையையும் இந்த கல் பெற்றுக்கொண்டுள்ளது எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
 
இந்த ரத்தினக்கலானது, 10 மில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியானது என முந்தைய சந்தர்ப்பத்தில் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், அதன் உண்மையான பெறுமதி இறுதியில் 10,700 அமெரிக்க டாலர்கள் மட்டுமே என்று தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என கோப் குழுவின் உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.
 
முதலில் 10 மில்லியன் அமெரிக்க டாலர் என பெறுமதியை கணிப்பிட்ட அதிகாரியே, பின்னரான காலத்தில் 10,700 அமெரிக்க டாலர் என பெறுமதியை குறைத்து கணிப்பிடு செய்து, அந்த அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளதாகவும் அநுர பிரியதர்ஷன யாப்பா கூறுகின்றார்.
 
ரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபையின் தலைவர் விராஜ் டி சில்வா, இதன்போது கருத்து வெளியிட்டார்.
 
''உலகிலேயே மிகப் பெரிய ரத்தினக்கல் கொத்தணி என கிண்ணஸ் சாதனையை பெற்றுக்கொண்டுள்ளது. இதனை கண்காட்சியில் வைத்து விற்பனை செய்ய முயற்சித்துள்ளனர். எனினும், விற்பனை செய்துக்கொள்ள முடியவில்லை. அதனை மீள இலங்கைக்கு கொண்டு வந்து, மீள் ஏற்றுமதி செய்ய முயற்சித்துள்ளனர்." என அவர் கூறுகின்றார்.
 
ரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபையின் தலைவர் விராஜ் டி சில்வாவிடம், கோப் குழு உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பா குறுக்கிட்டு கேள்வி எழுப்பினார்.
 
கோப் குழு தலைவர்
''நான் அதை கேட்கவில்லை. ஒரு நபர் இரண்டு விதமான அறிக்கைகளை வெளியிட்டுள்ளார். ஒன்று 10 லட்சம் அமெரிக்க டாலர், மற்றையது 10,700 அமெரிக்க டாலர். எப்படி இவ்வாறான வித்தியாசம் ஏற்படும் என்றே நான் கேட்கின்றேன்" என கேள்வி எழுப்பினார்.
 
அதற்கு பதிலளித்த ரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபையின் தலைவர் விராஜ் டி சில்வா, ''இரண்டாவது முறை இதன் பெறுமதியை கணிப்பீடு செய்ய நாம் குழுவொன்றை நியமித்தோம்." என கூறினார்.
 
இதன் உண்மையான பெறுமதி என்ன என கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் ரஞ்ஜத் பண்டார, அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார்.
 
''உண்மையிலேயே தொல்பொருள் பெறுமதி மாத்திரமே உள்ளது. ஏனென்றால், அதனை பட்டை தீட்ட முடியாது." என அதிகாரியொருவர் பதிலளித்தார்.
 
பொதுமக்களை தவறான வழிக்கு கொண்டு சென்று கிண்ணஸ் சாதனை பெறுவதில் பயனில்லை என கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் ரஞ்ஜத் பண்டார தெரிவித்தார்.
 
''பொதுமக்களை தவறான வழிக்கு கொண்டு சென்று, இவர்கள் கிண்ணஸ் சாதனை பெற்றுக்கொண்டார்கள் என்பதும், தற்போது தொல்பொருள் பெறுமதி மாத்திரமே இருக்கின்றது என கூறுவதும் உங்களை போன்ற தொழில் வல்லுநர்களுக்கு பொருத்தமற்றது என நினைக்கின்றேன்".
 
ரத்தினக்கல் கிடைத்தமைக்கான பின்னணி
 
ரத்தினபுரி மாவட்டத்தின் கஹவத்தை பகுதியிலிருந்து இந்த ரத்தினக்கல் 2021ம் ஆண்டு கிடைக்கப் பெற்றது.
 
இவ்வாறு எடுக்கப்பட்ட ரத்தினக்கல் கொத்தணி, துபாய்க்கு முதலில் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து ஸ்விட்சர்லாந்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
 
எனினும், இந்த கல்லை விற்பனை செய்ய முடியாத நிலைமை காரணமாக, குறித்த ரத்தினக்கல் கொத்தணி மீண்டும் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
 
இவ்வாறான நிலையிலேயே குறித்த கல், ஏற்கனவே கூறப்பட்டளவு பெறுமதி அற்றது என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்