எச்.ஐ.வி தொற்றில் இருந்து குணமடைந்ததாக கருதப்படும் உலகின் முதல் பெண்

Webdunia
வியாழன், 17 பிப்ரவரி 2022 (15:32 IST)
அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர், உலகிலேயே எச்.ஐ.வி தொற்று நோயிலிருந்து குணமடைந்த முதல் பெண்ணாக கருதப்படுகிறார். மேலும், இந்த தொற்றில் இருந்து குணமடைந்த மூன்றாவது நபராகவும் அவர் நம்பப்படுகிறார்.
 
இவர் ரத்த புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்றுவந்தார். அப்போது, எய்ட்ஸ் நோயை உண்டாக்கும் எச்.ஐ.வி. வைரசுக்கு, இயற்கையாக எதிர்ப்புத்திறன் கொண்ட ஒருவரிடமிருந்து தொப்புள்கொடி ரத்த ஸ்டெம் செல் கொடை பெற்றார். 14 மாதங்களாக அவருக்கு எச்.ஐ.வி.க்கு எதிரான தொடர் சிகிச்சையான ஆன்டி ரெட்ரோவைரல் தெரபி தேவைப்படவில்லை.
 
ஆனால், தொப்புள் கொடி ரத்தக் கொடை சிகிச்சை எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டுள்ள பெரும்பாலானவர்களுக்கு ஏற்புடையதாக இருப்பது கடினம் என்றும், இது மிகவும் ஆபத்தான சிகிச்சை முறை எனவும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.
 
டென்வர் நகரில் செவ்வாய்க்கிழமையன்று நடந்த மருத்துவ மாநாட்டில் இப்பெண் நோயாளி பற்றிய விவரங்கள் சமர்ப்பிக்கப்பட்டது. எச்.ஐ.வி நோய்க்கு செயல்படும் தீர்வாக இந்த சிகிச்சை முறை பயன்படுத்தப்பட்டது இதுவே முதல்முறை.
 
அந்த பெண் தனது புற்றுநோய் சிகிச்சைக்காக, தொப்புள் கொடி ரத்த மாற்று சிகிச்சை பெற்றுள்ளார். இதனால் ஹெச்.ஐ.வி நோய்க்கு சிகிச்சையாக உள்ள ஆன்டிரெட்ரோவைரல் தெரபி அவருக்கு தேவைப்படவில்லை.
 
இந்த கண்டுபிடிப்பு, அமெரிக்காவில் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டவர்களில், தீவிரமான நோய்களுக்கும், புற்றுநோய்க்கும் ஒரே விதமான ரத்த மாற்று அறுவை சிகிச்சையை பெற்றவர்கள் குறித்து நடந்த ஆய்வின் ஒரு பகுதியாகும்.
 
சிகிச்சைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட செல்கள், ஒரு குறிப்பிட்ட மரபணு திரிபுகளைக் கொண்டுள்ளன. அவை எச்.ஐ.வி நோயால் பாதிப்பு அடையாவை என்பதே இதன் பொருள். இதனை பெறுபவர்களின் நோய் எதிர்ப்புதிறனின் அமைப்பு, எச்.ஐ.விக்கு எதிரான எதிர்ப்பு சக்தியை உருவாக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
 
இப்பெண்ணுக்கான சிகிச்சை தொப்புள் கொடியின் இரத்தத்தை கொண்டு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு முன் மற்ற இரண்டு நோயாளிகளின் விஷயத்தில் நடந்தவை எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சையின் ஒரு பகுதியாக நோயாளிகள் தண்டணு சிகிச்சையை பெற்றுள்ளனர்.
 
இவர்களுக்கு பயன்படுத்தப்பட்ட முதிர்ந்த தண்டணுக்களை (Adult stem cell) காட்டிலும் தொப்புள் கொடி ரத்தம் மிகவும் பரவலாகக் கிடைக்கிறது. மேலும் இதனை அளிப்பவர்களுக்கும் பெறுபவர்களுக்கும் இடையே நெருங்கிய பொருத்தம் இருக்க வேண்டிய தேவையில்லை.
 
சர்வதேச எய்ட்ஸ் சொசைட்டியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஷரோன் லெவின், இந்த நோயாளிக்கு பயன்படுத்தப்பட்ட மாற்று சிகிச்சை முறை எச்.ஐ.வி உடன் வாழும் பெரும்பாலான மக்களுக்கு சாத்தியமான சிகிச்சையாக இருக்காது என்று குறிப்பிட்டுள்ளார்.
 
ஆனால், இது "எச்.ஐ.வியைக் குணப்படுத்தும் சிகிச்சை சாத்தியம் என்பதை உறுதிப்படுத்துகிறது என்றும், எச்.ஐ.வி சிகிச்சைக்கான சாத்தியமான உத்தியாக மரபணு சிகிச்சை இருப்பதை மேலும் வலுப்படுத்துகிறது எனவும் அவர் மேலும் கூறுகிறார்.
 
மிக சமீபமாக நடத்தப்பட்ட இந்த பகுப்பாய்வின் கண்டுபிடிப்புகள் மதிப்பாய்வு செய்யப்பட்ட இதழில் இன்னும் வெளியிடப்படவில்லை. இதனால், இதுகுறிந்த பரவலான அறிவியல் புரிதல் சற்று குறைவாகவே உள்ளது.
 
ஜேம்ஸ் கல்லகர் சுகாதாரம் மற்றும் அறிவியல் செய்தியாளர், பிபிசி, எச்.ஐ.வி நோயிலிருந்து மீண்டவர்களின் கதைகள் அனைத்தும் அபாரமானவை; கொண்டாட்டத்திற்கு காரணமானவை. இதனை குணப்படுத்த இயலும் என்று அவர்கள் நிரூபிக்கின்றனர்.
 
ஆனால், எச்.ஐ.வி நோயுடன் வாழும் 37 மில்லியன் மக்களுக்கான தீர்வை நெருங்கக்கூடியதாக இந்த அணுகுமுறை இருக்காது. அவர்களுள் பெரும்பாலும் சகாராவுக்கு கீழுள்ள ஆப்ரிக்கப் பகுதியில் வாழ்கின்றனர்.
 
2007ஆம் ஆண்டு, டிமொதி ராய் பிரவுன் எச்.ஐ.வி பாதிப்பில் இருந்து 'குணமடைந்த' முதல் நபரானப்போது, தண்டணு மாற்று சிகிச்சை விவரிக்கப்பட்டது. அவருக்கு எச்.ஐ.வி நோய்க்கு இயற்கையான எதிர்ப்பு சக்தியுள்ள ஒருவரிடம் இருந்து பெற்ற தண்டணுவைக் கொண்டு சிகிச்சை செய்யப்பட்டது.
 
அன்றிலிருந்து, இந்த முறை இரண்டு முறை மட்டுமே பயன்படுத்தப்பட்டது. ஒன்று, அடம் காஸ்டில்லேஜோ என்பவருக்கு அளிக்கப்பட்டது; பின்னர் இந்த நியூ யார்க் நோயாளிக்கு அளிக்கப்பட்டுள்ளது.
 
இம்மூவருக்கும் புற்றுநோய் இருந்ததால், அவர்களின் உயிரைக் காக்க தண்டணு மாற்று சிகிச்சை தேவைப்பட்டது. அவர்களின் எச்.ஐ.வி நோயைக் குணப்படுத்துவது முதன்மையான குறிக்கோளாக இருக்கவில்லை. மேலும் , எச்.ஐ.வி. உள்ள அனைவருக்கும் இந்த சிகிச்சை அளிப்பது மிகவும் ஆபத்தானது.
 
ஆன்டி-ரெட்ரோவைரல் சிகிச்சையானது எச்.ஐ.வி உள்ளவர்களுக்கு சராசரி ஆயுட்காலத்தை அளிக்கிறது என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள். இந்த நோயைக் குணப்படுத்துவதற்கு தடுப்பூசிகள் அல்லது உடலில் இருந்து வைரஸை வெளியேற்றக்கூடிய மருந்துகளில் கவனம் செலுத்துவதே நமது முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்