உதயநிதி தமிழ்நாடு அமைச்சரவையில் இடம்பெறுவாரா?

Webdunia
வியாழன், 2 டிசம்பர் 2021 (16:36 IST)
`தமிழ்நாடு அமைச்சரவையில் உதயநிதி இடம்பெற வேண்டும்' என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியிருக்கிறார்.

 
` 234 தொகுதிகளுக்கும் சேவை செய்வதற்கான திறமை உதயநிதிக்கு உள்ளது என்பதெல்லாம் மிகைப்படுத்தி சொல்லப்படுவது' என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தி.மு.க ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்தபோது, ` இளைஞரணி செயலாளராக இருக்கும் உதயநிதி அமைச்சரவையில் இடம்பெறுவாரா?' என்ற கேள்வி எழுந்தது. ஆனால், `இது தேவையற்ற விமர்சனங்களை ஏற்படுத்தும்' என்பதால் அமைச்சரவையில் உதயநிதிக்கு இடம் கொடுக்கப்படவில்லை.
 
இதன்பிறகு, தனது தொகுதியான சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி பகுதியில் ஏராளமான நலத்திட்ட உதவிகளை உதயநிதி மேற்கொண்டு வந்தார். `தமிழ்நாட்டில் உள்ள மற்ற தொகுதிகளைவிட உதயநிதி தொகுதிக்கு மட்டும் ஏன் இவ்வளவு உதவிகள் சென்று சேர்கின்றன?' என்ற சர்ச்சையும் எழுந்தது. இருப்பினும், கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் பலரும் சேப்பாக்கம் தொகுதியில் முகாமிட்டு நலத்திட்ட உதவிகளை செய்து வந்தனர்.
இந்நிலையில், `அமைச்சரவையில் உதயநிதி இடம் பெற வேண்டும்' என முதல் குரலாக ஒலித்திருக்கிறார், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற அன்பில் மகேஷ், ` 234 தொகுதிகளிலும் சொந்தம் கொண்டாடும் அளவுக்கு உதயநிதி உயர் பொறுப்புக்கு வர வேண்டும்' எனப் பேசினார்.
 
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்பில் மகேஷ், ` அமைச்சர் பொறுப்புக்கு உதயநிதி வந்தால் தமிழ்நாட்டுக்கே பயனுள்ள வகையில் இருப்பார். அவரை சின்ன வயதில் இருந்தே பார்த்து வருகிறேன். மக்களுக்காக உழைப்பது என வந்த பிறகு அடுத்தடுத்த கட்டத்துக்குப் போனால் என்ன? என்னுடைய விருப்பத்தை தெரியப்படுத்தியுள்ளேன். அவர் அமைச்சர் பதவிக்கு வர வேண்டும் என ஆசைப்படுகிறோம்' என்றார்.
 
இதையடுத்து, ``உதயநிதியை அமைச்சராக்கும் முயற்சி நடக்கிறதா?'' என தி.மு.க நிர்வாகிகள் தரப்பில் விசாரித்தோம். ''நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிந்த பிறகு அதற்கான பணிகள் வேகம் எடுக்கலாம். இப்போதே அதற்கான பேச்சை அன்பில் மகேஷ் உருவாக்க வேண்டிய அவசியம் என்ன என்று தெரியவில்லை. காரணம், உதயநிதிக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்தால் யாரும் எதிர்க்கப் போவதில்லை. உதயநிதியும் அன்பில் மகேஷும் நண்பர்கள் என்பதால் கட்சி ரீதியாக ஒரு பேச்சை தொடங்கி வைத்துள்ளார். இனி ஒவ்வொரு மாவட்டத்திலும் இதே குரல்கள் எதிரொலிக்கத் தொடங்கும்'' என பெயர் வெளியிட விரும்பாத திமுக நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
மேலும், ``அமைச்சர்களை மாற்றாமல் துறைரீதியான மாற்றங்களும் நடக்க உள்ளதாகச் சொல்கின்றனர். குறிப்பாக, நான்கு துறைகளில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என முதலமைச்சர் நினைக்கிறார். காரணம், முதல்வர் எதிர்பார்த்த அளவுக்கு சில துறைகளில் உள்ள அமைச்சர்கள் சரியாக செயல்படவில்லை என்பதுதான். அவர்களுக்கு சிறிய துறைகள் ஒதுக்கப்படலாம். பெரிய துறைகளை சிறப்பாக செயல்படும் நபர்களின் கைகளில் கொடுக்கும் திட்டம் உள்ளது. ஜூனியராக இருந்தாலும் அமைச்சரவையில் உதயநிதியால் சிறப்பாக செயல்பட முடியும் என தலைமை கருதுகிறது'' என்கிறார் அவர்.
 
``அமைச்சரவையில் உதயநிதி இடம்பெறுவாரா?'' என தி.மு.க அமைப்புச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதியிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். ` அமைச்சரவைக்குள் அவர் வருவாரா என்பது குறித்து முதலமைச்சர்தான் தெரிவிக்க வேண்டும். நான் அமைப்புச் செயலாளராக இருக்கிறேன். நான் இதனை முடிவு செய்ய முடியாது. கட்சித் தலைவர்தான் முடிவு செய்ய வேண்டும்'' என்கிறார்.
`அன்பில் மகேஷின் பேச்சை எவ்வாறு எடுத்துக் கொள்வது?'' என மூத்த பத்திரிகையாளர் தி.சிகாமணியிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். ''வாரிசு அரசியலின் வெளிப்பாடாகத்தான் இதைப் பார்க்கிறேன். `234 தொகுதிகளுக்கும் சேவை செய்வதற்கான திறமை உதயநிதிக்கு உள்ளது' என மிகைப்படுத்தி சொல்லப்படுகிறது. அமைச்சராகச் செயல்படுவது என்பது பெரிய விஷயம் அல்ல. ஆனால், அரசியலில் கொஞ்சம்கூட பயிற்சி பெறாமல் இவ்வாறு கூறுவது என்பது சரியல்ல. இவருக்குத்தான் சிறப்புத் திறமை உள்ளது என்பதெல்லாம் துதிபாடும் அரசியலின் தொடர்ச்சியாகத்தான் பார்க்கிறேன்'' என்கிறார்.
 
மேலும், ''கட்சித் தலைவரை திருப்திப்படுத்தும் வகையில் பேசுவது, அவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் நடந்து கொள்வது என்பது தொடர்கிறது. இந்தப் பேச்சு அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன் நிற்கும் என நான் நினைக்கவில்லை. பிற அமைச்சர்களும் இதேபோல் பேசுவார்கள். இதுபோன்ற பேச்சுக்கள் வரவேற்கத்தக்கதல்ல. காரணம், அரசு கவனிக்க வேண்டிய பிரச்னைகள் ஏராளம் உள்ளன'' என்கிறார்.
 
''கருணாநிதி காலகட்டத்தில் ஸ்டாலின் ஆதரவாளர்களை மாவட்ட செயலாளர்களாக நியமிப்பது என அப்போது இருந்தே இது தொடர்ந்து நடக்கிறது. வைகோவுக்கு மாற்றாக ஸ்டாலினை கொண்டு வந்தனர். தற்போது தி.மு.கவில் போட்டி இல்லைதான். அரசியலில் படிப்படியாக முன்னேறி வரலாம். அதைத் தவிர்த்து இப்போதே இதனைப் பேசுவது என்பது துதிபாடும் கலாசாரமாகத்தான் பார்க்க வேண்டியுள்ளது'' என்கிறார் சிகாமணி.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்