எண்ணெய் வளம் வறுமையில் உழலும் கயனா நாட்டிற்கு சாபமாக அமையபோகிறதா?

Webdunia
வியாழன், 9 மே 2019 (21:24 IST)
தென்னமெரிக்காவில் வறுமையில் உழன்று இருந்த ஒரு தேசத்தில் அபரிமிதமான எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சில ஆண்டுகளில் இந்த நாடு பொருளாதாரரீதியாக மேன்மை அடையும். புதிய உச்சங்களை தொடும். ஆனால், அந்த எண்ணெய் வளம் கயானா மக்கள் அனைவரது வாழ்விலும் வசந்தம் வீச செய்யுமா? அல்லது எண்ணெய் வளமே சாபமாக அமையுமா?
கடந்த நவம்பர் மாதம் கயானாவுக்கான அமெரிக்க தூதர் பெர்ரி ஹாலோவே, "இது எவ்வளவு பெரிய விஷயமென பல மக்களுக்கு புரியவில்லை," என்றார்.
 
மேலும் அவர், "2020ஆம் ஆண்டுக்குள் அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 300 சதவீதம் முதல் 1000 சதவீதம் வரை உயரும். இது மிகப்பெரிய விஷயம். நீங்கள் இந்த துருவத்தில் சக்திவாய்ந்த நாடாக மாறுவீர்கள்," என்றார்.
 
இந்த நாட்டிற்கு சொந்தமான அட்லாண்டிற்கு பெருங்கடலில் 5.5 பில்லியன் பேரல் அளவில் கச்சா எண்ணெய் இருப்பதை எக்ஸான்மொபைல் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.
 
கண்டுபிடிக்கப்பட்ட இந்த வளமானது 7,50,000 மக்கள் தொகை கொண்ட இந்த நாட்டிற்கு மிகப்பெரிய விஷயம்தன். ஆனால், இது சாபமாக மாறவும் கூடும்.
 
'எண்ணெய் சாபம்'
பணம் வரவேற்கப்பட வேண்டியதுதான். பிரிட்டனின் காலனி நாடாக இருந்த கயானா, லத்தீன் அமெரிக்காவில் ஆங்கிலம் பேசும் ஒரே நாடு. இங்கு வேலையில்லா திண்டாட்டம் உச்சத்தில் இருக்கிறது. இதன் காரணமாக வறுமையும் உச்சத்தில் இருக்கிறது.
 
 
எண்ணெய்யினால் வரும் பொருளாதார வளர்ச்சி நல்லதுதான். ஆனால், வரலாறு இது தொடர்பாக ஒரு எச்சரிக்கையையும் விடுக்கிறது.
 
இதற்கு முன்பு எண்ணெய் வளம் கண்டுப்பிடிக்கப்பட்ட வளரும் நாடுகளில், ஊழல் அதிகரித்திருக்கிறது. இது பிறர் எண்ணெய் வளத்தை அபகரிக்க, திருட காரணமாக அமைந்திருக்கிறது. அதாவது ஒரு நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட எண்ணெய் வளம் அந்நாட்டு மக்களின் வளர்ச்சிக்கு உதவாமல் போயிருக்கிறது. இதுதான் 'எண்ணெய் சாபம்' எனப்படுகிறது.
 
முறைகேடு
சர்வதேச ஊழல் தடுப்பு அரசுசாரா அமைப்பிபான டிரான்ஸ்பரன்சி இண்டெர்நேஷனலின் கயானா கிளையின் தலைவர் ட்ராய் தாமஸ், கயானாவில் "ஊழல் மலிந்து கிடக்கிறது" என்கிறார்.
 
 
எண்ணெய் சாபம் குறித்து தாம் கவலை கொள்வதாக கூறுகிறார் அவர்.
 
அந்த நாட்டில் கடந்த சில மாதங்களாக நிலவும் அரசியல் நெருக்கடியானது எண்ணெய் சாபத்தின் அறிகுறி என்கிறார்.
 
கூட்டணி அரசு கடந்த டிசம்பரில் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியுற்ற பின், தேர்தலை சந்திக்காமல், இதனை நீதிமன்றத்திற்கு எடுத்து சென்றுள்ளது.
 
இதன் காரணமாக அங்கு போராட்டங்கள் வெடித்தன.
 
அரசாங்கம் அரசமைப்பு சட்டத்தை மதிக்க வேண்டும் என்கிறார் ஒரு போராட்டகாரர்.
 
முன்பைவிட மோசமாக
கயானா சூழலியல் பாதுகாப்பு முகமையின் புதிய தலைவர் வின்செண்ட் ஆடம்ஸ், "இது போன்ற அனுபவத்தை பிற நாடுகளிலும் பார்த்து இருக்கிறோம்". இவர் அமெரிக்க ஆற்றல் துறையில் மூன்று தசாப்தமாக பணியாற்றி இருக்கிறார்.
 
"எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்ட சில நாடுகள், எண்ணெய் வளம் கண்டு பிடிப்பதற்கு முன் இருந்ததைவிட மோசமாகி இருக்கிறது" என்கிறார்.
 
இந்த எண்ணெய் சாபத்திலிருந்து தப்பிக்க ஒரே வழி கல்விதான். கல்வி, கல்வி, கல்வி மட்டும்தான் அடித்தளம். ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு சிறந்த முதலீடு கல்விதான் என்கிறார் ஆடம்ஸ்.
 
எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதன் தொழில்நுட்பம் குறித்து ஆய்வு செய்ய போதுமான கல்வி வசதி இல்லை.
 
கயானா பல்கலைக்கழகத்தின் கல்வி புலத் தலைவர் எலெனா ட்ரிம், "பெட்ரோலியம் பொறியியல் படிப்புக்கான ஆய்வகங்கள் இங்கு இல்லை" என்கிறார்.
 
எங்களுக்கு அதிகமான சம்பளம் இல்லை. இங்கு பணிபுரிய விரும்புபவர்களிடம் எங்கள் சம்பளத்தை கூறினால் யாரும் இங்கு பணிக்கு வர மாட்டார்கள் என்கிறார்.
 
கயானா எண்ணெய் நிறுவனம் தொடக்க காலத்திலேயே பணிக்கு ஆட்களை எடுக்க தொடங்கிவிட்டது. இப்போது, வேறு துறையில் பொறியியல் படித்தவர்களை பணிக்கு எடுத்து கொண்டிருக்கிறது.
 
கடந்த ஆண்டு பத்து பேருக்கு வேலை கொடுத்திருக்கிறது. இந்தாண்டு இருபது பேரை பணிக்கு கேட்டிருக்கிறது.
 
அவநம்பிக்கை
எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பாக பெரிய நம்பிக்கை எல்லாம் கயானாவின் தலைநகரமான ஜார்ஜ்டவுன் அருகே இருக்கும் ஏழ்மையான பகுதியான சோஃபியாவில் வசிப்பவர்களிடம் இல்லை.
 
"நகர மக்கள் தொகையில் ஏறத்தாழ 10 சதவீத மக்கள் இங்கே வசிக்கிறார்கள். ஆனால், நகர வளத்தில் பத்து சதவீதம் கூட எங்களுக்காக செலவிடப்படுவதில்லை" என்கிறார் அண்ட பகுதியை சேர்ந்த கோலின் மார்க்ஸ்.
 
எண்ணெய் வளம் மூலமாக பொருளாதாரம் வளர்ந்தாலும், அது சரிசமமாக பகிர்ந்தளிக்கப்படும என்ற சந்தேகம் மக்களிடையே நிலவுவதை இதன் மூலமாக உணரலாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்