கொரோனா அலைகளால் சிறார்களுக்கு அதிக பாதிப்பா?

புதன், 9 ஜூன் 2021 (14:31 IST)
கொரோனா வைரஸ் எதிர்கால அலைகளால் சிறார்களுக்கு அதிக பாதிப்பு நேரும் என்பதற்கான தரவுகள் ஏதுமில்லை என்று அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவன (எய்ம்ஸ்) இயக்குநர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.
 
கொரோனா நிலவரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா பெருந்தொற்று சிறார்களிடையே கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்ற தவறான தகவல் பரவி வருவதாக கூறினார்.
 
ஆனால், இந்தியாவிலும் சரி, உலக அளவிலும் சரி அத்தகைய பாதிப்பு இருக்கும் என்பதற்கான தரவுகள் ஏதும் தங்களிடம் இல்லை என்று அவர் குறிப்பிட்டார். கொரோனா இரண்டாம் அலையின்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 60 முதல் 70 சதவீத சிறார்கள்
 
ஏற்கெனவே இணை நோய் பாதிப்புடன் இருந்தவர்கள் என்றும் மருத்துவர் ரந்தீப் குலேரியா கூறினார். லேசான காய்ச்சல் பாதிப்புடன் இருந்த சிறார்கள், ஏற்கெனவே ஆரோக்கியமாக இருந்ததால் அவர்கள் விரைவாக குணமடைந்தனர் என்று அவர் தெரிவித்தார்.
 
பெருந்தொற்று காலத்தில் பல கட்ட அலைகள் தோன்றி மறைவது இயல்புதான் என்றும் 1918இல் ஏற்பட்ட ஸ்பேனிஷ் ஃப்ளூ, பன்றிக்காய்ச்சல் போன்றவை சில உதாரணங்கள் என்று அவர் கூறினார். 1918இல் ஸ்பேனிஷ் ஃப்ளூ பரவியதுதான் மிகப்பெரிய பெருந்தொற்றாக அறியப்படுகிறது.
 
அதன் தாக்கமாக சிறிய அளவில் மூன்றாவது அலை தோன்றியது என்றும் ரந்தீப் குலேரியா கூறினார். எங்கெல்லாம் நெரிசலான மக்கள்தொகை காணப்படுகிறதோ அங்கெல்லாம் பல கட்ட அலைகள் தோன்றுவது இயல்பாக நடக்கக்கூடியது.
 
அந்த மக்கள்தொகையில் பெரும்பாலானோர் தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்தை எடுத்துக் கொண்டால் அவர்கள் வைரஸை எதிர்க்கும் ஆற்றலை கொண்டவர்களாகின்றனர். பிறகு அந்த வைரஸ் பெருந்தொற்று வெறும் தொற்றாகும். அது காலநடையில் மழைக்காலம் மற்றும் குளிர்காலங்களில் நேரக்கூடிய பருவகால தொற்றாகலாம்.
 
வைரஸ் புதிய வகையாக மாறும்போது புதிய அலைகள் தோன்றலாம். அவ்வாறு உருப்பெறும் புதிய திரிபுகள் அதிக பாதிப்பை தரக்கூடியவையாகலாம். அப்படி நடந்தால் அது மிகப்பெரிய அளவில் வைரஸ் பரவலுக்கு காரணமாகலாம் என்று ரந்தீப் குலேரியா விளக்கினார்.
 
இதுபோன்ற நிலை தற்போது வரக்கூடாது என்பதால்தான் கொரோனா சமூக இடைவெளி, சிகிச்சை நடைமுறைகளை தவறாமல் பின்பற்றுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது என்று அவர் கூறினார். ஒவ்வொரு முறை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும்போதெல்லாம் மக்களிடையே அச்சம் ஏற்படுகிறது.
 
கொரோனா பரவல் தணியும்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் வேளையில், மக்கள் இனி தங்களுக்கு ஒன்றும் நேராது என்று நினைத்து கொரோனா சமூக இடைவெளி வழிகாட்டுதல்களை பின்பற்றத்தவறுகிறார்கள். இதுதான் வைரஸ் மீண்டும் பரவ முக்கிய காரணமாகிறது. அதுதான் மற்றொரு அலைக்கான காரணியாகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
 
கொரோனா தொடர் அலைகளை நிறுத்த வேண்டுமானால், கொரோனா பாதுகாப்பு வழிகாட்டுதல்களை நாம் தவறாமல் தீவிரமாக பின்பற்ற வேண்டும். தடுப்பூசி போட்டுக் கொள்ளும் மக்களின் எண்ணிக்கை எந்த அளவுக்கு அதிகரிக்கிறதோ அந்த அளவுக்கு கொரோனா வைரஸுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியை மக்கள் பெறுகிறார்கள். அப்படி செய்தால் மட்டுமே வைரஸை தடுக்க முடியும். கொரோனாவை விரட்ட இதுதான் வழி என்றும் மருத்துவர் ரந்தீப் குலேரியா தெரிவித்தார்.
 
இந்த செய்தியாளர் சந்திப்பின்போது உடனிருந்த இந்திய சுகாதாரத்துறை இணைச்செயலாளர் லவ் அகர்வால், "இதற்கு முன்பு இருந்த தினசரி கொரோனா புதிய பாதிப்புகளுடன் ஒப்பிடும்போது தற்போது கிட்டத்தட்ட 79 சதவீத அளவுக்கு பாதிப்பு அளவு குறைந்து விட்டது," என்று கூறினார். கடந்த ஒரு மாதத்தில் 322 மாவட்டங்களில் புதிய பரவல் 33 சதவீதம் குறைந்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்