கொரோனாவால் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்படும் சிறார்கள் - கள தகவல்
திங்கள், 31 மே 2021 (11:21 IST)
"எங்கள் பெற்றோர் இறந்த பிறகு, யாருமே அவர்களைத் தொட விரும்பவில்லை. எனவே நான் என் தாயின் சவக்குழியைத் தோண்டி அவரை புதைக்க வேண்டியிருந்தது. இதையெல்லாம் நான் தனியாகச் செய்தேன்."
ஒரு காணொளி அழைப்பில், சோனி குமாரி தனது கடந்த கால அனுபவத்தை என்னிடம் கூறினார். கோவிட் பாதுகாப்பு உடை (பிபிஇ கிட்) அணிந்து, வீட்டின் அருகே உள்ள சிறிய நிலத்தில் எப்படி தனது தாயை புதைத்தார் என்பதை விளக்கினார்.
அவரின் இந்தக்கடினமான தருணத்தை ஒரு உள்ளூர் பத்திரிகையாளர் தனது புகைப்படத்தில் சிறைப்பிடித்துள்ளார்.
"யாரும் உதவ வரவில்லை"
சோனிக்கு அந்த நாளின் ஒவ்வொரு கணமும் நினைவில் இருக்கிறது. அவரது தந்தை கோவிட் காரணமாக இறந்துவிட்டார். மேலும் அவரது தாயின் உடல்நிலை மோசமடைந்ததால், தனது தம்பியையும் சகோதரியையும் வீட்டிலேயே விட்டுவிட்டு ஆம்புலன்சில் தனது தாயை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டியிருந்தது.
பீகாரின் தொலைதூர கிராமமான மதுலதாவிலிருந்து மூன்று மணி நேரம் பயணம் செய்த அவர் மாதேபுரா மருத்துவமனையை அடைந்தார். ஆனால் தாயின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.
அவர் தனது தாயின் உடலுடன் கிராமத்திற்குத் திரும்பியபோது,அந்த மூன்று ஆதரவற்ற பிள்ளைகளுக்கும் உதவ யாருமே முன்வரவில்லை.
சோனி அந்த நேரத்தை நினைவு கூர்ந்தார். "எங்கள் உலகமே இருண்டு போய்விட்டது. எல்லோருமே எங்களை தனியாக விட்டுவிட்டார்கள். என் பெற்றோர் அனைவருக்கும் நிறைய உதவி செய்தார்கள். ஆனால் எங்களுக்கு தேவைப்படும்போது யாருமே அதை நினைத்துப்பார்க்கவில்லை."
கொரோனா வைரஸின் இந்த இரண்டாவது அலையில் இந்தியாவில் பலி எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. மேலும் சோனி போன்ற ஆதரவற்ற குழந்தைகளின் எண்ணிக்கையும் கூடி வருகிறது. அத்தகைய குழந்தைகளுக்கு என்ன வழி?
"சாப்பிட ஏதாவது இருக்கிறதா என்று கூட யாரும் கேட்கவில்லை"
18 வயதான சோனி மிகவும் அமைதியானவர். தனது சுயக்கட்டுப்பாட்டை இழக்காமல் என்னிடம் பேசுகிறார். ஆனால் முககவசத்திற்கு பின்னால் இருந்து வரும் அவரது மெல்லிய குரலால், அவர் கண்களில் தெரியும் வலியை மறைக்க முடியவில்லை.
பின்னால் இருந்து எட்டிப்பார்க்கும் அவரது சகோதரர் (12 வயது) மற்றும் சகோதரியை (14 வயது) என்னால் ஒரு கணத்திற்கு பார்க்க முடிகிறது.
"தனியாக விடப்படுவது மிகப் பெரிய வலி. அம்மா கடைசியாக தயாரித்த உணவுதான் நாங்கள் வீட்டில் சாப்பிட்ட கடைசி உணவு. அவர் இறந்த பிறகு சாப்பிட ஏதாவது இருக்கிறதா என்று கூட யாரும் எங்களிடம் கேட்கவில்லை. எங்கள் கொரோனா வைரஸ் சோதனை அறிக்கை நெகட்டிவாக வரும் வரை யாருமே இங்கு வரவில்லை," என்கிறார் அவர்.
தனிமை மற்றும் நோய் பயத்தால் மக்கள் அருகில் வராமல் இருப்பது போன்றவை கொரோனோ வைரஸ் தொற்று காரணமாக பெற்றோரை இழந்த குழந்தைகள் சந்திக்கும் பெரிய சவால்களில் ஒன்று.
இதுபோன்ற சூழலில் இருக்கும் குழந்தைகளுக்கு உதவி கிடைக்கிறது என மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
ஆதரவை இழந்த குழந்தைகளுக்கு உதவி வழங்குதல்
ஏப்ரல் 1 முதல் மே 25 க்கு இடைப்பட்ட காலகட்டத்தில், நாடு முழுவதிலும் இருந்து இதுபோன்ற 577 நிகழ்வுகள் குறித்து தனக்கு தகவல் கிடைத்துள்ளதாக இரானி ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.
இந்த எண்கள் உண்மையான நிகழ்வுகளை விட மிகக் குறைவாக இருக்கலாம். பல சம்பவங்கள் பற்றிய தகவல்கள் அரசை அடைவதே இல்லை.
கொரோனா வைரஸின் இந்த சகாப்தத்தில் அத்தகைய குழந்தைகளுக்கு உதவி மற்றும் தத்தெடுப்பு முறையீடுகள் முதல்முறையாக இணையம் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் செய்யப்படுகின்றன.
வாட்ஸ்ஆப் மற்றும் ட்விட்டரில் பகிரப்படும் இந்த முறையீடுகளில், குழந்தையின் பெயர், வயது மற்றும் தொலைபேசி எண் ஆகியவை கொடுக்கப்படுகின்றன.
ட்விட்டரில் வெளியிடப்பட்ட ஒரு முறையீட்டில், "இரண்டு வயது பெண் குழந்தை மற்றும் இரண்டு வயது ஆண் குழந்தையின் பெற்றோர் கோவிட் காரணமாக இறந்துவிட்டார்கள். இந்தக்குழந்தைகளுக்கு நல்ல பெற்றோர் கிடைக்கும் பொருட்டு தயவு செய்து இந்தச்செய்தியை மேலும் பகிருங்கள்." என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுபோன்ற செய்திகளை பகிர்வதை இந்திய அரசு தடைசெய்துள்ளதால் நாங்கள் இந்த ட்வீட்டை அச்சிடவில்லை.
இத்தகைய ஒரு செய்தி மேதா மீனல் மற்றும் ஹரிசங்கரை சென்றடைந்தது.
"ஆக்சிஜன், ஐ.சி.யு போன்றவற்றுக்கு ஏராளமான முறையீடுகள் வந்தவண்ணம் இருந்தன. ஆனால் ஒரு பதினான்கு வயது சிறுமி தனது பெற்றோர் இருவரையும் கொரோனாவில் இழந்துவிட்டாள், அவளும் கோவிட் பாசிட்டிவ். அவள் வீட்டில் தனியாக இருக்கிறாள். யாருக்குமே என்ன செய்வது என்று தெரியவில்லை என்ற இடுகையை சமூக ஊடகத்தில் பார்த்தபோது நான் அதிர்ச்சி அடைந்தேன்," என மேதா கூறுகிறார்.
தத்தெடுப்பு சட்டம்
இந்த பெண்ணை தத்தெடுக்கலாம் என்று மேதா நினைத்தார். ஆனால் இந்திய சட்டம் இதை அனுமதிக்காது என ஹரி விளக்கினார்.
சட்டத்தின்படி, ஒரு குழந்தை ஆதரவற்றதாக மாறினால், அந்த தகவல்கள் தேசிய 'ஹெல்ப்லைன்' மற்றும் சைல்ட் லைனுக்கு வழங்கப்பட வேண்டும்.
சைல்ட்லைன் அதிகாரிகள் இந்த தகவலை குழந்தைகள் நலக்குழுவுக்கு அளிப்பார்கள், அதை உறுதிப்படுத்திய பின்னர், குழந்தையின் தேவைகளை அவர்கள் மதிப்பிடுவார்கள்.
குழந்தை தனது உறவினர்களின் பராமரிப்பில் இருக்க வேண்டுமா அல்லது பராமரிப்பு இல்லத்தில் இருக்கவேண்டுமா என்பதை இந்தக்குழு தீர்மானிக்கும்.
ஆனால் கொரோனாவுக்கு முன் இந்த தத்தெடுப்பு நடைமுறை பல சவால்களை எதிர்கொண்டுள்ளது.
நாட்டில் உள்ள மொத்த குழந்தை பராமரிப்பு மையங்களில் 20 சதவிகிதம் மட்டுமே, தத்தெடுப்பு செயல்முறையைத் தொடங்குவதற்கு முன்பு குழந்தையின் குடும்பத்தைத் தேடி தொடர்புகொள்ள முயற்சிக்கிறது என 2018 ஆம் ஆண்டின் அரசு தணிக்கையில் தெரியவந்துள்ளது.
தத்தெடுப்புக்கான வேண்டுகோள்கள் இணையத்தில் வரத் தொடங்கிய பிறகு, அரசு இதற்கு எதிராக முன்னணி செய்தித்தாள்களில் விளம்பரம் செய்யத் தொடங்கியது.
"இந்த சமூக ஊடக பதிவுகள் சட்டவிரோதமானவை"
தத்தெடுப்பு என்ற போர்வையில் இந்த முறையீடுகள் மூலமாக குழந்தைகள் கடத்தப்படும் ஆபத்து குறித்தும் குழந்தை உரிமை அமைப்புகள் எச்சரித்துள்ளன.
குழந்தை பராமரிப்பு இல்லங்களை நடத்தி வரும் , குழந்தை உரிமைகளுக்காக பல தசாப்தங்களாகப் பணியாற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனமான 'பச்பன் பச்சாவ்' இயக்கத்தின் நிர்வாக இயக்குநராக தனஞ்சய் திங்கல் உள்ளார்.
"சமூக ஊடகங்களில் வரும் இந்தப்பதிவுகள் சட்டவிரோதமானவை மற்றும் கடத்தல் என்ற வரையறையின் கீழ் வருகின்றன. நீங்கள் ஒரு குழந்தையை இந்த வழியில் தத்தெடுக்க முடியாது. இதனால் குழந்தை கடத்தப்படும் ஆபத்து உள்ளது" என அவர் கூறினார்.
கோவிட்டின் புதிய சவாலோடு கூடவே, கூலி, பாலியல் சுரண்டல் அல்லது கட்டாய திருமணத்திற்காக குழந்தைகளை கடத்துவது இந்தியாவில் ஒரு முக்கிய பிரச்சினையாக உள்ளது.
நாட்டின் தேசிய குற்ற பதிவு பணியகத்தின் 2019 தரவுகளின்படி, அந்த ஆண்டில் 70,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் காணாமல் போயுள்ளனர். அதாவது, ஒவ்வொரு எட்டு நிமிடங்களுக்கும் ஒரு குழந்தை காணாமல் போயுள்ளது.
இத்தகைய கடத்தலை தடுக்க கடுமையான சட்டங்கள் ; சமூக நலத்துறை, காவல்துறை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு இடையே ஒருங்கிணைப்பு போன்ற பல நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது.
சில கடத்தல்காரர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அதிகாரம், பணம் மற்றும் தேவையின் சக்கரத்தை உடைப்பது கடினம். பெரும்பாலான கடத்தல்காரர்கள் அபராதத்தை செலுத்திவிட்டு விடுதலை பெற்றுவிடுகிறார்கள்.
ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவி
அத்தகைய ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவுவதற்கான சிறந்த வழி, அவர்களின் கல்விச்செலவிற்காக குழந்தைகள் பராமரிப்பு இல்லத்திற்கு நன்கொடை தருவதுதான் என்று மேதாவும் ஹரியும் முடிவு செய்தனர்.
தங்கள் ஆன்லைன் பிரச்சாரத்தின் மூலம் இதுவரை இருபது லட்சம் ரூபாய்க்கு மேல் அவர்கள் திரட்டியுள்ளனர்.
"முன்பின் தெரியாதவர்கள் கூட மனமுவந்து உதவி செய்துள்ளனர். ஒரு தாய் ஒரு லட்சம் ரூபாய் வழங்கினார். ஏனெனில் அவரும், அவரது கணவரும் மருத்துவமனையில் கோவிட்டை எதிர்த்து போராடிக் கொண்டிருந்தபோது, அவர்களது குழந்தை வீட்டில் தனியாக இருந்தது," என மேதா குறிப்பிட்டார்.
"ஆதரவற்ற குழந்தைகளின் தேவைகள் எவ்வாறு பூர்த்தி செய்யப்படும் என்பதை என்னால் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை என அந்த தாய் கூறினார்" என மேதா தெரிவித்தார்.
ஆதரவற்ற குழந்தைகளை பராமரிப்பு இல்லங்களில் வைப்பது முதல் வழி அல்ல
குழந்தைகள் ஆதரவை இழந்துவிடும்போது , அவர்களை குழந்தை பராமரிப்பு இல்லங்களில் விடுவது முதல் நடவடிக்கை அல்ல.
குழந்தையை அதன் உறவினர்களிடம் கொடுக்க முதல் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என டெல்லியில் உள்ள குழந்தைகள் நலக் குழுவின் தலைவர் வருண் பதக் தெரிவித்தார்.
"குடும்ப அமைப்பு முற்றிலுமாக உடைந்துபோன நிலையில், குடும்ப அமைப்பு அல்லது எந்தவொரு ஆதரவு முறையும் இல்லாத போது அரசு முன்வந்து பொறுப்பேற்கிறது. பின்னர் அவர்களை பராமரிப்பு இல்லங்களில் சேர்கிறது. குழந்தைக்கு வயது மிகவும் குறைவாக இருந்தால். மத்திய தத்தெடுப்பு ஆணையத்தின் கீழ், குழந்தையை தத்து கொடுப்பதற்கான செயல்முறை தொடங்கப்படுகிறது," என அவர் மேலும் கூறினார்.
குழந்தை உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் போது கூட, குழந்தைக்கு ஆலோசனை, நிதி உதவி மற்றும் பின்தொடர்தல் போன்றவற்றை இந்தக்குழு செய்யும் என வருண் பதக் தெரிவித்தார்.
கொரோனா வைரஸால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான சிறப்பு நிதிஉதவியை பல மாநில அரசுகள் அறிவித்துள்ளன.
எதிர்காலத்திற்கான பொறுப்பை தனது தோள்களில் சுமக்க விரும்பும் சோனி
சோனி குமாரி மற்றும் அவரது உடன்பிறப்புகளுக்கு இப்போது அரசிடமிருந்து பணம் மற்றும் ரேஷன் உதவிகள் கிடைத்துள்ளது. சில சமூக சேவையாளர்களும் அவருக்கு உதவியுள்ளனர்.
இந்த மூவருக்கும் நீண்ட வாழ்க்கை காத்திருக்கிறது.ஆனால் சம்பாதிக்க வழி ஏதும் தற்போது இவர்களிடம் இல்லை.
"நாங்கள் ஒவ்வொரு நாளும் எங்கள் பெற்றோரை நினைவில் கொள்கிறோம், அவர்கள் எங்களுக்காக எத்தனையோ கனவுகளைக் கண்டார்கள். வீட்டில் பணப்பற்றக்குறை நிலவிய போதிலும், அவர்கள் எங்கள் விருப்பங்களுக்கு முன்னுரிமை கொடுத்திருக்கிறார்கள்," என சோனி கூறுகிறார்.
சோனியின் பாட்டி இப்போது அவருடன் வசிக்கிறார். தனது உடன்பிறந்த சகோதர சகோதரிகளின் பொறுப்பு தன்னுடையது என சோனி தெரிவிக்கிறார்.
"இறுதியில் நாங்கள் மட்டுமே இருப்போம், நாங்கள் ஒருவரை ஒருவர் கவனித்துக் கொள்ள வேண்டும்." என்கிறார் அவர்.
இந்த நேரத்தில் கிடைத்துள்ள நிதி உதவியை தங்கள் எதிர்காலத்திற்காக சரியாகப் பயன்படுத்த முடியும் என சோனி நம்புகிறார்.
இவரது தந்தை கிராமத்தின் உள்ளூர் மருத்துவராக இருந்தார். சகோதர சகோதரிகளில் ஒருவர் தங்கள் தந்தையின் அடிச்சுவட்டை பின்பற்ற வேண்டும் என சோனி விரும்புகிறார்.