அழகிப் போட்டியில் கலந்து கொண்ட மனைவி, இடமாற்றம் செய்யப்பட்ட ரஷ்ய பாதிரியார்

Webdunia
புதன், 17 ஏப்ரல் 2019 (20:43 IST)
ரஷ்யாவில் உரால்ஸ் பிராந்தியத்தில், தவக்காலத்தின் போது நடந்த உள்ளூர் அழகிப் போட்டியில் பங்கேற்ற பெண்ணின் கணவரான பழமைவாத பாதிரியார் தொலைதூர கிராமத்துக்கு பணி மாற்றம் செய்யப்பட்டார்.
மக்னிடோகோர்ஸ்க் நகரில் அழகு நிலையம் நடத்தி வரும் ஓக்ஸனா ஜோட்டோவா என்பவர் மிஸ் சென்சுவாலிட்டி பட்டம் வென்றிருக்கிறார். அவர் பாதிரியார் ஒருவரின் மனைவி என்ற தகவலை ரஷ்ய சமூக செய்தி தளமான pikabu மூலம் பெயர் வெளியிடாத நபர் வெளியிட்டார். அதைத் தொடர்ந்து அவருக்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்தன.
 
இதன் தீவிரத்தை அறிந்த மறைமாவட்ட நிர்வாகத்தினர், மக்னிடோகோர்ஸ்க் கதீட்ரல் தேவாலயத்தின் பொறுப்பில் இருந்து பாதிரியார் செர்ஜெய் ஜோட்டோவ்-ஐ நீக்கிவிட்டனர்.
 
மக்னிடோகோர்ஸ்க் நகரில் இருந்து சுமார் 65 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள , வெறும் 4000 பேர் மட்டுமே வாழும் பெர்ஷம்பெனுவாஜ் என்ற கிராமத்தில்தான் அவர் இனிமேல் பணியாற்ற முடியும்.
 
1814 ஆம் ஆண்டில் பெரெ-சாம்பியனாய்ஸ் போரில் நெப்போலியனை எதிர்த்து போரிட்ட கோஸ்ஸாக்ஸ் -ஐ கவுரவிக்கும் வகையில் அந்தக் கிராமத்துக்கு பெயரிடப் பட்டுள்ளது.
 
பங்குத் தந்தை செர்ஜெயின் மனைவியின் வாதத்தை மக்னிடோகோர்ஸ்க் மறை மாவட்ட நிர்வாகம் ஏற்கவில்லை. ``பாதிரியார் ஒருவரின் மனைவி தன்னை வெளிக்காட்டிக் கொள்வது பெரிய பாவகரமான செயல்'' என்று மறைமாவட்ட நீதிமன்றத்தின் தலைவரான ஆர்ச் பிஷப் பியோடர் சப்ரிக்கின் அறிவிக்கை செய்துள்ளார்.
 
``அவருடைய மனைவி தவறுக்கு வருந்தும் வரையில், செர்ஜெய் ஜோட்டோவ்-க்கு மறுவாழ்வு அளிக்க முடியாது'' என்று அவர் உத்தரவில் தெரிவித்துள்ளார்.
 
``தனது குடும்பத்தையே கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியவில்லை என்றால், அவர் என்ன மாதிரியான பாதிரியாராக இருப்பார்?'' என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ``தன்னுடைய திருச்சபையை அவர் எப்படி கட்டுப்படுத்துவார்?'' என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
 
பெயர் குறிப்பிடாமல் வெளியான பதிவில் அந்தப் பெண்மணி ``மூர்க்கனத்தனமாக நடந்து கொண்டிருப்பது'' இது முதல் முறை அல்ல என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
 
ஒரு முறை விடுமுறைக்காக கடற்கரைக்குச் சென்ற போது திருமதி ஜோட்டோவா நீச்சல் உடையில் இருந்த புகைப்படங்களை பதிவிட்டார் என்றும், அதுபற்றி கூறியதும் அவற்றை நீக்கிவிட்டார் என்றும் மக்னிடோகோர்ஸ்க் பங்குத் தந்தை லெவ் பாக்லிட்ஸ்கி தெரிவித்துள்ளார்.
 
அந்தச் செயல் ``சந்தேகத்துக்கு இடமின்றி ஏற்கத்தக்கதல்ல'' என்று அவர் கூறியுள்ளார். ஜோட்டோவ்-ன் பதிவு ``உணர்வுகளுக்கு திரும்பி வருவதற்கான தற்காலிக நடவடிக்கை'' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தாம் தவறு செய்துவிட்டதாக செர்ஜெய் ஒப்புக்கொண்டுள்ளார். அந்தப் பதிவு ``கருணையான தண்டனைக்குரியது'' என்றும் கூறியுள்ளார்.
 
ஆனால், சமூக வலைதளத்தில் தமது மனைவி பற்றி அவதூறான கருத்துகள் வந்ததாக அவர் புகார் கூறியுள்ளார். இந்தத் தகவலை ஆன்லைனில் பரப்பியவர்கள் மீது அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
 
பல செய்தித் தளங்களிலும், ஆன்லைன் தளங்களிலும் இடம் பெற்றதன் மூலம் இந்தச் செய்தி ரஷ்யா முழுக்க பரபரப்பாகிவிட்டது. பாதிரியார் மற்றும் அவருடைய மனைவி குறித்து சிலருக்கு திருப்தி இல்லை. ``பாதிரியார்களின் மனைவியர் குறித்து இவ்வளவு தான் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. பாதிரியார்களைப் பற்றியும் கூட. அவர்கள் ஒரு விஷயத்தை போதிக்கிறார்கள். வேறொன்றை பின்பற்றுகிறார்கள்'' என்று ஒருவர் கடுமையாக விளாசியிருக்கிறார்.
 
ஆனால் தேவாலய நிர்வாகத்தின் முடிவுக்கு பலர் கண்டனம் தெரிவித்திருப்பதுடன், பாதிரியார் தம்பதிக்கு ஆதரவும் தெரிவித்துள்ளனர்.
 
``அந்தப் பெண்மணி தன் வாழ்க்கையை ஏன் அனுபவிக்கக் கூடாது? பாதிரியார்கள் பாவங்களில் இருந்து அப்பாற்பட்டவர்கள் என்று நம்பும் மக்கள் உண்மையில் இன்னும் இருக்கிறார்களா? நல்லதொரு வேலையில் இருக்கும் சாமானியர் தான் அவர்கள்'' என்று pikabu பதிவில் கூறப்பட்டுள்ள கருத்தை பலரும் லைக் செய்திருக்கிறார்கள்.
 
``நான் எதையாவது கவனிக்கவில்லையா, என்ன பிரச்சனை?'' என்று வேறொருவர் கேள்வி எழுப்பியுள்ளார். ``பாதிரியாருக்கு அழகான மனைவி இருக்கக் கூடாது என்று பைபிளில் எங்கே கூறப்பட்டுள்ளது?'' என்று அவர் கேட்டிருக்கிறார்.

 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்