குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு ஏற்பட்ட கல்லீரல் பாதிப்பு குடிக்காதவர்களுக்கும் ஏற்படுவது ஏன்?

Webdunia
செவ்வாய், 7 மார்ச் 2023 (14:25 IST)
கொழுப்புக் கல்லீரல் எனப்படும் ஃபேட்டி லிவர் (Fatty Liver) நோயால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முன்பெல்லாம் வயதானவர்கள் மற்றும் மதுப் பழக்கம் உள்ளவர்கள் மட்டுமே இந்த நோயால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது பதின்ம வயதினர் தொடங்கி குழந்தைகள்கூட பாதிக்கப்படுகின்றனர்.

குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினரை அதிகமாகத் தாக்கும் ஃபேட்டி லிவர் நோயை ஆல்கஹால் அல்லாத கொழுப்புக் கல்லீரல் (Non-Alcoholic Fatty Liver) என்று மருத்துவ உலகம் வகைப்படுத்துகிறது.

முந்தைய தசாப்தங்களில் ஃபேட்டி லிவர் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் மது அருந்துபவர்களாகவே இருந்தனர். ஆனால், இந்த தசாப்தத்தில் மதுப் பழக்கம் அல்லாத பலரும் ஃபேட்டி லிவரால் பாதிக்கப்படுகின்றனர். உடலுழைப்பு அதிகம் இல்லாத இன்றைய வாழ்க்கை முறையும், முறையற்ற உணவுப் பழக்கமுமே இதற்குக் காரணம் என்கின்றனர் மருத்துவர்கள்.

இந்தியா உட்பட உலகம் முழுவதும் நாள்பட்ட கல்லீரல் நோய்க்கு நான்-ஆல்ஹகாலிக் ஃபேட்டி லிவர் நோயே முக்கிய காரணம் என்கிறது இந்திய அரசின் மதுப்பழக்கத்தால் ஏற்படாத கொழுப்பு கல்லீரல் நோய்க்கான செயல்பாட்டு வழிகாட்டுதல் அறிக்கை.

இந்தியாவில், நான்-ஆல்ஹகாலிக் ஃபேட்டி லிவர் பாதிப்பு மொத்த மக்கள்தொகையில் 9 முதல் 32 சதவிகிதம்வரை இருப்பதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.

குறிப்பாக, உடல் பருமன் மற்றும் இரண்டாம் வகை நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நான்-ஆல்ஹகாலிக் ஃபேட்டி லிவரால் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

நான்-ஆல்ஹகாலிக் ஃபேட்டி லிவரால் பாதிக்கப்படுபவர்களில் 40-80 சதவிகிதம் பேர் இரண்டாம் வகை நீரிழிவு பாதிக்கப்பட்டவர்கள் என்றும் 30-90 சதவிகிதம் பேர் உடல்பருமனால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்நிலையில், கல்லீரல் சிறப்பு சிகிச்சை நிபுணர் ஜாய் வர்கீஸிடம் பிபிசி தமிழ் பேசியது. ஃபேட்டி லிவர் குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

ஃபேட்டி லிவர் என்றால் என்ன?

பொதுவாக குழந்தைகள் தொடங்கி முதியவர்கள் வரை யாருடைய கல்லீரலிலும் கொழுப்பு இருக்காது. கல்லீரலில் கொழுப்பு படிப்படியாக சேர்ந்து ஆபத்தான கட்டத்தை அடைவதைத்தான் ஃபேட்டி லிவர் என்போம்.

இந்தக் கொழுப்பு கல்லீரல் மேல் படியாது. மாறாக கல்லீரலில் உள்ள திசுக்களுக்குள் படியும். ஒருவருடைய கல்லீரலில் ஐந்து சதவிகிதம்வரை கொழுப்பு இருக்கலாம். அதற்கு மேல் இருந்தால் கல்லீரலின் செயல்பாடும் குறையத் தொடங்கும்.

நான்-ஆல்ஹகாலிக் ஃபேட்டி லிவர் (Non-Alcoholic Fatty Liver) என்றால் என்ன?

இது மதுப்பழக்கம் இல்லாதவர்களுக்கு ஏற்படும் நிலை. உடல் பருமன், நீரிழிவு, ரத்த சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த குறைபாடு, தைராய்டு உடையவர்கள் இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படுவார்கள். ஆனால், இதற்கான தொடக்கம் என்பது முறையற்ற உணவுப் பழக்கமும், மாறிவரும் வாழ்க்கைமுறையும்தான்.

இந்த நோய்க்கான அறிகுறிகள் என்ன?

துரதிர்ஷ்டம் என்னவென்றால் தொடக்கத்தில் எந்த அறிகுறியும் தெரியாது. ஒரு சிலருக்கு வலது விலா பகுதியில் சிறிய அளவில் அசௌகரியம் இருக்கும். ஆனால், பாதிப்பு அதிகரிக்கும்போது உடல் சோர்வு ஏற்படும். பெரும்பாலும், அஜீரணக் கோளாறு போன்ற வேறு ஏதேனும் குறைபாட்டிற்கான சிகிச்சைக்காக வருபவர்களை பரிசோதிக்கும்போதுதான் அவர்களுக்கு ஃபேட்டி லிவர் இருப்பது தெரிய வரும்.

ஃபேட்டி லிவர் எவ்வளவு ஆபத்தானது?

ஃபேட்டி லிவர் என்று தெரிந்த பிறகும் முறையான கவனம் கொடுக்கப்படாமல் இருந்தால் சீர்ரோஸிஸ் என்ற முழுமையான பாதிப்படைந்த கட்டத்தை கல்லீரல் அடையும். அதன் பிறகு, கல்லீரல் புற்றுநோய் ஏற்படும்.

இதைவிட நாம் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயம், ஃபேட்டி லிவரால் பாதிக்கப்பட்டால் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பும் அதிகம். கல்லீரல் முறையாக செயல்படாதபோது இதயத்திற்குச் செல்லும் ரத்தக் குழாய்களிலும் கொழுப்பு படிய ஆரம்பித்துவிடும்.

இன்று இளம்வயதினர் பலர் மாரடைப்பு ஏற்பட்டு இறப்பதை நாம் பார்க்கிறோம். அதற்கு ஃபேட்டி லிவரும் முக்கிய காரணம். எனவே ஃபேட்டி லிவர் என்பது உடலில் உள்ள மற்ற உறுப்புகளையும் பாதிக்கக் கூடிய அளவுக்கு ஆபத்தானது என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.

நான்-ஆல்ஹகாலிக் ஃபேட்டி லிவர் இன்று அதிகரித்து வருவதாகச் சொல்லப்படுகிறதே?

அது உண்மைதான். பள்ளி, கல்லூரியில் படிக்கும் இளம்வயதினர்கூட சிகிச்சைக்காக வருகிறார்கள். ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவருக்கு இணையாக நான்-ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவரால் பாதிக்கப்படுபவர்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் சென்னை மாதிரியான நகரங்களில் இன்று 30 சதவிகிதம் பேர் வரை ஃபேட்டி லிவரால் பாதிக்கப்பட்டுள்ளனர். எந்த நகரத்தை எடுத்துக்கொண்டாலும் குறைந்தபட்சம் 10 சதவிகிதம் பேர்வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஃபேட்டி லிவருக்கான சிகிச்சை என்ன?

சில சிகிச்சை முறைகள் உள்ளன. ஆனால், நம் வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கத்தில் செய்யும் மாற்றமே ஃபேட்டி லிவருக்கான சிறந்த சிகிச்சை. அந்த மாற்றங்களைச் செய்தால் இரண்டு ஆண்டுகளில் அதிலிருந்து மீண்டுவிடலாம். இதில் மொத்தம் நான்கு நிலைகள் உள்ளன. முதல் நிலையில் இருப்பவர்கள் எளிதாகக் குணமாகிவிடலாம். எந்த நிலையில் இருந்தாலும் இது முற்றிலும் குணப்படுத்தக்கூடிய நோயே.

வாழ்க்கை முறையில் என்ன மாதிரியான மாற்றங்கள் செய்ய வேண்டும்?

உணவு முறையில் கார்போஹைட்ரேட் அளவைக் குறைக்க வேண்டும். ரத்தத்தில் சர்க்கரை, உப்பு, கொழுப்பு அளவு கட்டுக்குள் இருக்க வேண்டும். தங்களுடைய வயது, பாலினம், செய்யும் வேலையை அடிப்படையாக வைத்து தினசரி தேவையான கலோரி அளவைக் கணக்கிட்டுக் கொள்ள வேண்டும்.

அதற்கேற்ப உணவுப் பழக்கத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். இனிப்பு, கார பலகாரங்கள் போன்ற நொறுக்குத் தீனிகளையும் குளிர்பானங்களையும் குறைக்க வேண்டும்.

அதேபோல தினமும் குறைந்தது 30 நிமிடம் நடைப்பயிற்சி செய்ய வேண்டும். இதை முறையாகப் பின்பற்றினாலே இரண்டு ஆண்டுகளில் அதிலிருந்து முழுமையாக விடுபடலாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்