கள்ளக்குறிச்சி பள்ளிக் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் யார், எங்கிருந்து வந்தனர்? #GroundReport

Webdunia
திங்கள், 18 ஜூலை 2022 (12:38 IST)
கள்ளக்குறிச்சியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஒருவர் மரணமடைந்ததையடுத்து ஞாயிற்றுக் கிழமையன்று நடந்த கலவரத்தில் பள்ளிக்கூடச் சொத்துகள் சூறையாடப்பட்டிருக்கின்றன. காவல்துறை மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. கலவரத்தை நடத்தியது யார், அவர்கள் எப்படி ஒருங்கிணைக்கப்பட்டனர்?

கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம், செல்வி தம்பதியின் மகள் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே கனியாமூர் என்ற இடத்தில் உள்ள தனியார் பள்ளிக்கூடம் ஒன்றில் 12ஆம் வகுப்புப் படித்துவந்தார்.

கடந்த 13ஆம் தேதி காலையில் அந்தப் பெண் இறந்து விட்டதாக பெற்றோருக்கு தகவல் வந்தது. அவரது மகள் பள்ளிக்கூடத்தின் மாடியிலிருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக மாணவியின் தாயாரிடம் பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர். அந்தப் பள்ளிக்கூடத்தில் ஆறாம் வகுப்பிலிருந்து படித்துவந்த மாணவி, கடந்த ஜூலை 1ஆம் தேதிதான் பள்ளிக்கூட விடுதியில் சேர்க்கப்பட்டதாக அவரது தாயார் செல்வி ஊடகங்களிடம் தெரிவித்தார்.

இந்த நிலையில்தான் கடந்த ஜூலை 13ஆம் தேதி அதிகாலை சுமார் 5 மணியளவில், அவரது சடலம் பள்ளி வளாகத்தில் கண்டெடுக்கப்பட்டது.

இதையடுத்து, சின்ன சேலம் காவல் துறையினர் மாணவி மரணம் தொடர்பாக குற்றவியல் நடைமுறைச் சட்டம் 174 பிரிவின் கீழ் (சந்தேக மரணம்) வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்யத் தொடங்கினர்.

தனது மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாக மாணவியின் தாயார் செல்வி குற்றம்சாட்டினார். இதற்குப் பிறகு பெற்றோரும் அவரைச் சார்ந்தவர்களும் சிறுமியின் உடலை வாங்க மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். பிரேதப் பரிசோதனை அறிக்கையின் ஒரு பகுதி வெளியான நிலையில், நேற்று மாணவியின் பெற்றோர் கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில்தான் ஞாயிற்றுக்கிழமையன்று மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டுத் துவங்கியதாக சொல்லப்படும் போராட்டம் பெரும் வன்முறையில் முடிவடைந்தது.

போராட்டம் துவங்கியது எப்படி?

ஞாயிற்றுக் கிழமையன்று காலை. சம்பவம் நடந்த பள்ளிக்கூடத்தின் முன்பு பாதுகாப்பிற்காக சுமார் 40 காவலர்கள் நின்றுகொண்டிருந்தனர். காலை சுமார் 9 மணியளவில் இரு சக்கர வாகனங்களிலும் சிறிய சரக்கு வாகனங்களிலும் சிறிது சிறிதாக இளைஞர்கள் அந்தப் பகுதியில் கூட ஆரம்பித்தனர். சுமார் 500 இளைஞர்கள் வரை திரண்ட நிலையில், இறந்த மாணவிக்கு நீதி கோரி கோஷங்களை இட்டதோடு, பள்ளிக்கூடத்திற்கு முன்பாகவே சாலை மறியலில் அமர்ந்தனர். காவல்துறை அவர்களை அகற்றியதால், சாலையின் எதிர்ப்புறம் சென்று அமர்ந்து போக்குவரத்தைத் தடைசெய்தனர்.

அங்கிருந்தும் காவலர்கள் அவர்களை அகற்ற முற்பட்டபோது மெல்ல மெல்ல தள்ளுமுள்ளு ஏற்பட ஆரம்பித்தது. ஒரு கட்டத்தில் போராட்டக்காரர்கள் காவல்துறையினர் மீது கல்வீசித் தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர். அந்த நேரத்தில் பெரிய எண்ணிக்கையில் காவல்துறையினர் அங்கு இல்லாததால், மாவட்ட நிர்வாகத்திற்குத் தகவல் அளிக்கப்பட்டு பக்கத்து மாவட்டங்களிலிருந்து சேமக் காவல் படையினரை வரழைக்கும் பணிகள் துவங்கின.

ஆனால், பள்ளி முன்பாகக் கூடிய இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போனது. சுமார் ஆயிரம் பேர் அந்தப் பகுதியில் திரண்ட நிலையில், அவர்கள் காவல்துறையினர் மீது கல்வீசும் வேகம் அதிகரித்தது. விழுப்புரம் சரக டிஐஜி பாண்டியன் கண்ணீர் புகை குண்டுகளை சுட்ட நிலையில், அவர் மீதும் கல்வீச்சுத் தாக்கல் நடந்தது. அதில் அவர் காயமடைந்தார். விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா, சேலம் மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் உள்ளிட்ட சுமார் 70 காவல்துறையினருக்கு காயம் ஏற்பட்டது.

காவல்துறையினரை மீறி பள்ளிக்கூடத்திற்குள் புகுந்த கூட்டம், ஒவ்வொரு பகுதியாக முன்னேறி தாக்குதல் நடத்தியது. முதலில் சென்றவர்கள் வாசலில் இருந்த சிசிடிவி கேமராக்களை நொறுக்கினர். அந்த பள்ளியின் ஒவ்வொரு அறையிலும் இருந்த பொருட்கள் சூறையாடப்பட்டன. பிறகு பள்ளி வளாகத்திற்குள் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைக்க ஆரம்பித்தனர்.

இருசக்கர வாகனங்கள் கொளுத்தப்பட்ட நிலையில், மைதானத்தில் நிறுத்தப்பட்டிருந்த சுமார் பத்துக்கும் மேற்பட்ட பேருந்துகளின் மீது போராட்டக்காரர்களின் கவனம் திரும்பியது. அங்கேயிருந்த டிராக்டர்களை ஓட்டிவந்து அந்தப் பேருந்துகளை சேதப்படுத்திய அவர்கள், முடிவாக அவற்றுக்கும் தீ வைத்தனர்.

பள்ளிக்கூடத்தை நோக்கி வந்த தீயணைப்பு வாகனங்கள், காவல்துறையினரை மீட்பதற்காக வந்த ஆம்புலன்ஸ்கள் ஆகியவற்றை பள்ளிக்கூடம் அருகில் செல்ல போராட்டக்கரார்கள் அனுமதிக்கவில்லை. பிறகு ஒரு வழியாக இந்த வாகனங்கள் பள்ளிக்கூடத்தை நெருங்கின. வேறு மாவட்டங்களில் இருந்த வந்த காவலர்கள் மெல்ல மெல்ல அப்பகுதியில் வந்து இறங்கினாலும், பள்ளிக்கூடத்தை முழுமையாகச் சூறையாடிவிட்டே போராட்டக்காரர்கள் கலைந்தனர்.

இதற்குள் வேறு சிலர், பள்ளிக்கூடத்திற்குள் புகுந்து சேதமடைந்த பொருட்கள், எஞ்சிய மேஜை நாற்காலிகள் ஆகியவற்றை தங்களது இரு சக்கர வாகனங்களிலும் பிற வாகனங்களிலும் ஏற்றிச்சென்றனர்.

பிற்பகல் சுமார் 2 மணியளவில் காவல்துறை நிலைமையை ஒரு வழியாக கட்டுக்குள் கொண்டுவந்தது. ஆனால், அதற்கள் பள்ளிக்கூடம் முழுமையாக சேதப்படுத்தப்பட்டிருந்தது.

போராட்டக்காரர்கள் ஒருங்கிணைக்கப்பட்டது எப்படி? யார் இவர்கள்?

பள்ளிக்கூட தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் பெரும்பாலும் 20 முதல் 30 வயதுக்குட்பட்டவர்களாகவே இருந்தனர். 18 வயதுக்கு கீழே உள்ள சிறுவர்கள் சிலரும்கூட அந்தக் கூட்டத்தில் காணப்பட்டனர். இவர்கள் எங்கிருந்து வந்தனர் என்பதில் தெளிவில்லை. ஆனால், பெரும்பாலானவர்கள் அக்கம்பக்கத்துப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதை இந்தக் கலவரத்தை நேரில் பார்த்த உள்ளூர்க்காரர்கள் சொல்கிறார்கள்.

நேற்றைய சம்பவத்தைப் பார்த்த அனைவருக்கும் எழக்கூடிய ஒரு கேள்வி, இந்தப் போராட்டக்காரர்கள் எப்படி ஒருங்கிணைக்கப்பட்டனர், அவர்கள் இந்த அளவுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட தகவல் எப்படி காவல்துறைக்குத் தெரியாமல் போனது என்பதுதான்.

கடந்த இரண்டு நாட்களாகவே உயிரிழந்த மாணவிக்கு நீதி வேண்டும் என்று கூறும் ஹாஷ்டாக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வந்தது.

பெரும்பாலும், திரை நட்சத்திரங்களை முகப்புப் படமாகக் கொண்ட டிவிட்டர் ஐடிகளே இந்த ஹாஷ்டாகின் கீழ் பதிவுகளை வெளியிட்டனர். கலவரம் வெடித்த பிறகு, அந்த ஹாஷ்டாகுடன் கலவரக் காட்சிகளை இந்த டிவிட்டர் ஐடிகள் தொடர்ந்து இப்போதும் வெளியிட்டு வருகின்றன.

இந்த ஹாஷ்டாகுடன் பதிவுகளை வெளியிட்ட ஒன்றிரண்டு ஐடிகளில், ஞாயிற்றுக் கிழமை போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. மாணவிக்கு நீதி வேண்டும் என்பது போன்ற தலைப்பிலான போஸ்டர்களை இந்த ஐடிகள் பகிர்ந்திருந்தன. ஆனால், அப்படிப் பகிர்ந்த ஐடிகளுக்கு பெரிய அளவில் பின்தொடர்பவர்கள் இல்லை. ஆகவே, ட்விட்டர் மூலம் போராட்டம் ஒருங்கிணைக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

அப்படியிருந்தும் ஞாயிற்றுக்கிழமையன்று பெரிய அளவில் இளைஞர்கள் திரண்டதற்கு வாட்ஸப் குழுக்கள் மூலம் பரப்பப்பட்ட அழைப்புகளே காரணமாக இருக்கலாம் என அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.

ஆனால், இம்மாதிரி ஆட்கள் ஒருங்கிணைக்கப்படுவதை காவல்துறையோ, உளவுத் துறையோ எப்படி அறியாமல் போனது என்ற கேள்விக்கு இதுவரை விடைகிடைக்கவில்லை. ஞாயிற்றுக்கிழமை காலையில் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தும்கூட, பெரும் எண்ணிக்கையிலான காவலர்கள் அங்கு நிறுத்தப்படாதது ஏன் என்ற கேள்வியும் இருக்கிறது. அந்தப் பள்ளிக்கூடத்தை நோக்கி சாரைசாரையாக வாகனங்களில் போராட்டக்காரர்கள் வர எப்படி அனுமதிக்கப்பட்டார்கள் என்ற கேள்விக்கும் விடையில்லை.

கலவரமெல்லாம் ஓய்ந்த பிறகு, ஞாயிற்றுக்கிழமையன்று பிற்பகலில் சம்பவம் நடந்த பள்ளிக்கூடத்தை நோக்கி இருசக்கர வாகனங்களில் வந்த இளைஞர்களை நிறுத்திய காவல்துறை, அவர்களது செல்போனில் கலவரக் காட்சிகள் படம்பிடிக்கப்பட்டிருந்தாலோ வாட்சப் ஸ்டேட்டசாக வைக்கப்பட்டிருந்தாலோ, அவர்களை விசாரிக்க ஆரம்பித்தது.

இதற்குப் பிறகு முழு வீச்சிலான கைது நடவடிக்கைகள் துவங்கின. பல இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் வந்து இறங்கி கலவரத்தில் ஈடுபட்டனர் என்பதால், அவர்களது இருசக்கர வாகனங்களின் எண்களை வைத்து தேடப்பட்டு வருகின்றனர். மேலும், ஊடகங்களில் வெளியான காட்சிகளில் இடம் பெற்றவர்களையும் காவல்துறை விரைவில் தேடக்கூடும்.

இந்த கலவரத்தின்போது எந்த அமைப்பின் கொடியோ, அமைப்பு சார்ந்து கோஷங்களோ எழுப்பப்படவில்லை. இளைஞர்களில் பலர் கறுப்புச் சட்டை அணிந்திருந்தார்கள் என்பதைத் தவிர, இந்தக் கூட்டத்தில் இருந்தவர்களிடம் பொதுவான ஒற்றுமை ஏதும் இருக்கவில்லை. எந்த ஒரு ஜாதி அமைப்பும் வெளிப்படையாகப் பங்கேற்றதாகவும் தெரியவில்லை.

மரணமடைந்த சிறுமியின் சடலம் இன்னும் பெற்றோரால் பெற்றுக்கொள்ளப்படாத நிலையில், பிரச்னையின் தீவிரம் நீடிக்கவே செய்கிறது. தற்போது பள்ளிக்கூட நிர்வாகிகள் மூவர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். தனியார் பள்ளிக்கூடங்களைத் திங்கட்கிழமை முதல் மூடுவதற்கு சில அமைப்புகள் அழைப்பு விடுத்திருக்கின்றன.

திங்கட்கிழமைக்குப் பிறகு இந்த விவகாரத்தை அரசு எப்படிக் கையாளப்போகிறது என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்