விடுதலை படத்தில் விஜய் சேதுபதி கதாபாத்திரமாக வரும் பெருமாள் வாத்தியார் யார்?

Webdunia
புதன், 5 ஏப்ரல் 2023 (21:55 IST)
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படம் வெளியானதில் இருந்து அதில் விஜய் சேதுபதி நடித்திருந்த 'பெருமாள் வாத்தியார்' என்ற கதாபாத்திரம் நிஜ வாழ்க்கையில் யார் என்ற கேள்வியை முன்வைத்து பலரும் சமூக ஊடகங்களில் விவாதித்து வருகின்றனர்.
 
அத்தகைய விவாதங்களில் அதிகமாக உச்சரிக்கப்படும் பெயர் புலவர் கலியபெருமாள். யார் இந்த கலியபெருமாள்? அவருக்கும் தமிழ்தேசிய போராட்டத்திற்கும் என்ன தொடர்பு?
 
அரசியல் களத்தில் நுழைந்த கலியபெருமாள்
 
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகேயுள்ள சௌந்திர சோழபுரம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கலியபெருமாள். தமிழில் பட்டம் பெற்ற இவர், அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி என்ற ஊரில் உள்ள பள்ளியில் தமிழாசிரியராக 1960 காலக்கட்டங்களில் பணியாற்றி வந்தார்.
 
தமிழில் புலமை பெற்றதன் காரணமாக இவர் பணியாற்றிய பள்ளியில் இருந்தவர்கள் 'புலவர்' என்ற பட்டத்தை வழங்கியதால், புலவர் கலியபெருமாள் என்று இவர் அழைக்கப்பட்டார்.
 
புலவர் கலியபெருமாள் வாழ்ந்த பகுதியில் நிலவி வந்த சாதிக் கொடுமைகளை கண்டு, தொடக்கத்தில் பெரியாரின் அரசியலில் ஆர்வம் கொண்டு, திராவிடர் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.
 
பின்பு இடதுசாரி தத்துவத்தில் ஏற்பட்ட நாட்டம் காரணமாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து கடலூர், அரியலூர் பகுதியில் அரசியல் பணிகளில் ஈடுபட்டு வந்தார் புலவர் கலியபெருமாள்.
 
சிபிஎம் கட்சியுடன் கருத்து ரீதியாக பிளவுபட்டு அதிலிருந்து வெளியேறி, இந்தியாவில் சாரு மஜூம்தாரால் புதிதாக தொடங்கப்பட்ட, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) என்ற கட்சியில் புலவர் கலியபெருமாள் 1969ஆம் ஆண்டு இணைந்தார்.
 
அந்தக் கட்சியின் சார்பாக தமிழ்நாட்டில் அமைப்பை எழுப்பிய 10 பேரில் புலவர் கலியபெருமாளும் ஒருவராக இருந்தார், என பிபிசியிடம் பேசிய முன்னாள் நக்சல்பாரி அமைப்பைச் சேர்ந்தவரும் எழுத்தாளருமான பாரதிநாதன் தெரிவித்தார்.
 
'வசந்தத்தின் இடிமுழக்கம்' என்ற சாரு மஜூம்தாரின் அறைகூவலை ஏற்று தமிழ்நாட்டிலிருந்து புலவர் கலியபெருமாள், கோவை ஈஸ்வரம், எல்.அப்பு, தியாகு என பலர் இந்த கட்சியில் இணைந்து அரசியல் களம் கண்டனர்.
 
 
"இது வெறும் படமல்ல, தமிழ் ரசிகர்களின் கனத்த உணர்வு" - விடுதலை படத்தை பாராட்டும் சீமான், திருமாவளவன்
 
புலவர் கலியபெருமாளின் கல்லறை
 
புலவர் கலியபெருமாள் திராவிடர் கழகத்தில் இருந்த போது, சிபிஎம் கட்சியின் உறுப்பினராக இருந்த போதும், நக்சல்பாரி அமைப்பில் சேர்ந்த பிறகும் பல்வேறு மக்கள் திரள் போராட்டங்களை முன்னெடுத்து இருக்கிறார்.
 
வட ஆற்காடு, தென் ஆற்காடு மாவட்டங்களில் இந்தி எதிர்ப்பு, சாதி ஒழிப்பு, கூலி உயர்வுப் போராட்டங்களை புலவர் கலியபெருமாள் முன்னெடுத்துள்ளார் என்று பாரதிநாதன் கூறுகிறார்.
 
நக்சல்பாரி அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்ட பிறகு, அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள், கடலூர், அரியலூர் மாவட்ட விவசாயிகள், விவசாயக் கூலிகளுடன் பல அமைப்புகளை எழுப்பி, வீரியமான போராட்டங்களை புலவர் கலியபெருமாள் நடத்தினார்.
 
"பெண்ணாடம் பகுதியில் உள்ள தனியார் சர்க்கரை ஆலையில் பணியாற்றும் பணியாளர்களுக்காக புலவர் நடத்திய போராட்டத்தில், தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். ஆலைக்கு எதிராக தொழிலாளர்களை வழிநடத்தும் புலவரைக் கொலை செய்ய வேண்டும் என ஆலை நிர்வாகம் திட்டமிட்டு பல முயற்சிகளை செய்தது. ஆனால் அதை நிறைவேறவில்லை. அதையடுத்து 1970 காலகட்டத்திலேயே 20 லட்சம் ரூபாயை எடுத்துக் கொண்டு போய் புலவர் கலியபெருமாளின் வீட்டில் கொடுத்தது ஆலை நிர்வாகம். புலவரின் மனைவி அந்த பணத்தை தூக்கி வீசியெறிந்தார். இப்படியான மக்கள் போராட்டங்களை புலவர் கலியபெருமாள் முன்னெடுத்தார்," என்று வீரப்பனின் கூட்டாளியான முகில் தெரிவித்தார்.
 
நக்சல்பாரி கட்சியின் உறுப்பினராக இருந்ததால், அரியலூர், கடலூர் மாவட்டங்களில் உள்ள முந்திரிக் காடுகளில் தலைமறைவாகவே புலவர் கலியபெருமாள் இருந்தார்.
 
"இரவு நேரங்களில் சாதாரண நபரை போல சைக்கிளில் வந்து, ஆதரவாளர்களிடம் போராட்டங்களை அடுத்த கட்டத்திற்கு எப்படி எடுத்துச் செல்வது என துண்டுச்சீட்டை எங்காவது ஒரு இடத்தில் வைத்து விட்டு சென்று விடுவார். இப்படித்தான் இவரின் தகவல்கள் வட ஆற்காடு, தென் ஆற்காடு மாவட்டங்களில் உள்ள மற்ற நபர்களுக்கு கொண்டு செல்லப்பட்டது" என்று பாரதிநாதன் கூறினார்.
 
உழவர் கூலிப்பிரச்சனை, நிலப்பிரபுத்துவ ரவுடிகள் கட்ட பஞ்சாயத்துகள், சாதி ஒழிப்பு பிரச்சாரம், தனிக் குவளை எதிர்த்து டீக்கடைகள் முன்பு நடத்திய போராட்டம், முந்திரிக் காடு பிரச்னை என பல போராட்டங்களை அதிகார அமைப்புக்கு எதிராக புலவர் கலியபெருமாள் முன்னெடுத்து வந்தார்.
 
நிலப்பிரபுகளுக்கு சொந்தமான நிலங்களில் புலவர் கலியபெருமாள் தலைமையிலான நிலமற்ற விவசாயிகள் இரவு நேரங்களில் களத்தில் இறங்கி அறுவடையைக் கைப்பற்றி ஏழை எளிய மக்களுக்கு விநியோகித்த, கட்டாய அறுவடை இயக்கம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தது.
 
 
இடதுசாரி அரசியலை தீவிரமாக முன்னெடுத்து வந்த புலவர் கலியபெருமாள், பல இளைஞர்களை அரசியல் களத்திற்கு அழைத்து வந்தார்.
 
கலியபெருமாளுடன் கோவை பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த தமிழரசன், அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் அமைப்பைச் சேர்ந்த கணேசன், தொழிலாளர்கள் அமைப்பைச் சேர்ந்த சர்ச்சில், உழவர், இளைஞர் அமைப்பைச் சேர்ந்த காணிப்பன் ஆகியோர் உடன் நின்று அரசியலில் இயங்கினர்.
 
குறிப்பாக 1987ஆம் ஆண்டு தமிழரசன் கொல்லப்படும் வரை இருவருக்கும் இடையேயான நெருக்கம் அதிகமாக இருந்தது.
 
சீனப் புரட்சியை பின்பற்றி, இந்தியாவில் சாரு மஜூம்தார் தொடங்கிய நக்சல்பாரி கட்சி என்று அழைக்கப்படும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்), 'அழித்தொழிப்பு செய்ய வேண்டும்' என்ற முழக்கத்தை முன்வைத்தது.
 
இந்த முழக்கத்தை முன்வைத்து, மக்களுக்கு எதிரான செயல்பட்டதாக கூறி பல நிலப்பிரபுகள், தமிழரசன் மற்றும் பலரால் வெட்டிக் கொல்லப்பட்டனர். காவல்துறை மற்றும் அரசுக்கு கட்சியை காட்டிக் கொடுக்கும் நபர்களும் அழித்தொழிப்புக்கு உள்ளாக்கப்பட்டனர்.
 
வெடிகுண்டு விபத்து
 
அழித்தொழிப்பு நடவடிக்கைகள் நடந்து வந்த காலகட்டத்தில், புலவர் கலியபெருமாளுக்கு சொந்தமான தென்னந்தோப்பில் வைத்து தற்காப்புக்காக நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டன.
 
1970ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் புலவரின் தோட்டத்தில் வெடிகுண்டு செய்து வந்த போது, அவை வெடித்து 3 பேர் இறந்தனர். அந்த வெடிவிபத்தில் சர்ச்சில், கணேசன், காணியப்பன் ஆகிய மூவரும் இறந்தனர்.
 
புலவர் கலியபெருமாள், படுகாயம் அடைந்ததோடு தலைமறைவாகி விட்டார். இந்த வெடிவிபத்து வெளியே தெரியாமல் இருக்க, இறந்த மூவரையும் தனது தோட்டத்திலேயே அடக்கம் செய்தார் புலவர் கலியபெருமாள்.
 
சில மாதங்களுக்கு பிறகு பக்கத்து ஊரைச் சேர்ந்த ஒருவர் இந்த விஷயத்தை காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.
 
அந்த தகவலின் அடிப்படையில் புலவர் கலியபெருமாளையும், அவரது குடும்பத்தினரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
 
தூக்கு தண்டனையும், சிறை வாழ்க்கையும்
 
1971ஆம் ஆண்டு வெடிகுண்டு விபத்தில் குடும்பத்துடன் கைது செய்யப்பட்ட புலவர் கலியபெருமாளும், அவரது குடும்பத்தினருக்கும் நீதிமன்றம் தூக்கு தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை விதித்தது.
 
புலவர் கலியபெருமாளுக்கும், அவரது மூத்த மகன் வள்ளுவனுக்கும் நீதிமன்ற விசாரணையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
 
அவர்களுடன் கைது செய்யப்பட்ட புலவரின் இரண்டாவது மகன் சோழ நம்பியார், கலியபெருமாளின் சகோதரர்கள் மாசிலாமணி, ராஜமாணிக்கம், ஆறுமுகம், கலியபெருமாளின் மைத்துனி அனந்தநாயகி ஆகியோருக்கு 1972ஆம் ஆண்டு கடலூர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.
 
இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீட்டில், வள்ளுவனுக்கு விதிக்கப்பட்ட தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
 
புலவர் கலியபெருமாளுக்கு தூக்கு தண்டனையும், மற்றவர்களுக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையையும் உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.
 
"புலவருக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி பல மக்கள் போராட்டங்கள் நடத்தப்பட்டதாகவும், ஜனநாயக அமைப்புகள் சார்பாக கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு, குடியரசு தலைவருக்கு அனுப்பியதன் பேரில் அந்த தண்டனை ஆயுள் தண்டனையாக குறைத்து 1973ஆம் குடியரசுத் தலைவர் உத்தரவை பிறப்பித்தார்," என்று பிபிசியிடம் பேசிய வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்தார்.
 
1971ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்ற புலவர் கலியபெருமாளும், அவரின் குடும்பத்தினரும் பல்வேறு சித்திரவதைகளுக்கு சிறையில் உள்ளாக்கப்பட்டனர் என்று பிபிசியிடம் விவரித்தார் எழுத்தாளர் பாரதிநாதன்.
 
சிறையில் 13 ஆண்டுகள் இருந்த கலியபெருமாள், தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டார். சிறையில் இருந்த காலகட்டத்தில் அவரது மகன்களை பார்க்க விடாமல், இருவரையும் தனித்தனி சிறைகளில் சில வருடங்கள் அடைத்திருந்தனர், என்று அவர் கூறினார்.
 
சிறையில் புலவர் கலியபெருமாள் இருந்த காலகட்டத்தில் கைது செய்யப்பட்டு அதே சிறைக்கு அழைத்து வரப்பட்டார் தமிழரசன். ஒரே சிறையில் தங்கியிருந்த காலகட்டத்தில், தமிழரசன், புலவர் கலியபெருமாள், முனிராஜ், ராதாகிருஷ்ணன் ஆகியோர் சிறையில் இருந்து தப்ப முயற்சி செய்தனர்.
 
"சிறை மதில் சுவரின் மின்சார வேலியை தனது கைலியை பயன்படுத்தி தாண்டிக் குதிக்கும் போது புலவர் கலியபெருமாளுக்கு காயம் ஏற்படுகிறது. அவரை காப்பாற்ற திரும்பி வந்த தமிழரசனை, புலவரோடு சேர்ந்து காவல் துறை பிடித்து விட்டது. சிறையில் இருந்து தப்ப முயன்றதற்காக இருவரும் கடுமையாக தாக்கப்பட்டனர். இந்த தாக்குதலினால் தமிழரசன் நினைவிழந்து 2 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்," என்று நினைவுகூர்ந்தார் வழக்கறிஞர் புகழேந்தி.
 
 
1971ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட புலவர் கலியபெருமாள், குடும்பத்துடன் 12 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருப்பதை அறிந்த டெல்லியைச் சேர்ந்த பத்திரிகையாளர் கன்சியாம் பர்தேசி, உச்ச நீதிமன்றத்தில் புலவர் கலியபெருமாளையும், அவரது குடும்பத்தினரையும் விடுதலை செய்ய உத்தரவிடுமாறு வழக்குத் தொடர்ந்தார்.
 
கன்சியாம் பர்தேசியின் முயற்சியால், 1983ஆம் ஆண்டு புலவரின் குடும்பத்தை நீண்டகால பரோலில் செல்ல உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
 
சிறையில் இருந்து வெளியே வந்த புலவர் கலியபெருமாள், தமிழரசனுடன் இணைந்து தனித் தமிழ்நாடு என்ற கோரிக்கையை முன்வைத்து தமிழ்தேசிய அரசியல் களத்தில் தடம் பதித்தார்.
 
பிரபாகரனைச் சந்தித்த கலியபெருமாள்
 
சென்னை பாண்டி பஜாரில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அணிக்கும் முகுந்தன் அணிக்கும் மோதல் ஏற்பட்டு பிரபாகரன் கைது செய்யப்பட்டு சென்னை சிறையில் அடைக்கப்பட்டார்.
 
அப்போது சென்னை சிறையில் இருந்த புலவர் கலியபெருமாள், பிரபாகரனோடு சில முறை சந்தித்து பேசியதாக வழக்கறிஞர் புகழேந்தி கூறினார்.
 
இந்த சந்திப்பு குறித்து புலவர் கலியபெருமாள், தனது சுயசரிதை நூலான 'மக்கள் துணையோடு மரணத்தை வென்றேன்' என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 
“பிரபாகரனை எங்கள் அறைக்கு அருகிலேயே அடைத்தார்கள். அவர் தன் பகுதியிலிருந்து பெரும்பாலும் என்னுடன் பேசுவார். என்னை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்போது பிரபாகரன் என்னை இரண்டு முறை வெளியில் சந்தித்து நலம் விசாரித்தார். அதன் பின் பிரபாகரன் விடுதலையாகி சிறையில் இருந்து சென்றுவிட்டார்.“
 
முதுமையின் காரணமாக 2007ஆம் ஆண்டு மே 16ஆம் தேதி புலவர் கலியபெருமாள் இறந்தார். அவரது உடல், சொந்த ஊரான சௌந்திர சோழபுரத்தில், அடக்கம் செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்