குமரிக் கடல் பகுதியை நெருங்கும் புதிய புயல் - எப்போது கரையை கடக்கும்?

Webdunia
செவ்வாய், 1 டிசம்பர் 2020 (15:06 IST)
தற்போது தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று டிசம்பர் 2ஆம் தேதி மாலையோ, இரவோ இலங்கையைக் கடந்து குமரிக் கடல் பகுதியை வந்தடையுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
நேற்று வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கன்னியாகுமரிக்கு கிழக்கு - தென்கிழக்கே சுமார் 900 கிலோமீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது.
 
இது நாளை (டிசம்பர் 2ஆம் தேதி) காலை புயலாக வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து மாலை அல்லது இரவில் இலங்கையை கடந்து மன்னார் வளைகுடா வழியாக குமரி கடல் பகுதிக்கு நகரக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
"இந்தப் புயல் உருவான பிறகுதான் அதற்கான பெயர் தெரிவிக்கப்படும்" என தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்தார். இதன் காரணமாக இன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் ஏனைய மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
டிசம்பர் 2ஆம் தேதியன்று தென்காசி, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய அதி கன மழையும், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், மதுரை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், திருவள்ளூர், காஞ்சிபுரம், நாமக்கல், கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
 
ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, சிவகங்கை, மாவட்டங்களில் சூறாவளி காற்று மணிக்கு மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
 
டிசம்பர் 3ஆம் தேதியன்று தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய அதி கன மழையும், சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
 
ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் சூறாவளி காற்று மணிக்கு மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
 
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தூத்துக்குடி துறைமுகத்தில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.
 
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டி, வேதாரண்யம் ஆகிய இடங்களில் தலா நான்கு சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. மயிலாடுதுறையில் 3 செ.மீ. மழையும் நாகப்பட்டினம், குடவாசல் பகுதிகளில் தலா 2 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்