“ஐந்து வயதில், 15 வயதுக்கான பாலுணர்வு பெற்றிருந்தேன்”

திங்கள், 18 மார்ச் 2019 (12:03 IST)
உடலின் அந்தரங்க இடங்களில் முடி வளர தொடங்கியபோது, பேட்ரிக் பர்லேவுக்கு இரண்டு வயதுதான்.
 
குறைந்தது பத்து வயதில் வயதுக்குவர தொடங்குகிறபோதுதான், ஒருவரது உடலின் அந்தரங்க பகுதிகளில் முடி வளர தொடங்கும்.
 
ஆனால், இந்த பையனின் குடும்பத்தினர் அதனை அசாதாரணமான நிலைமை என்று கண்டுகொள்ளவில்லை.
 
பேட்ரிக்கும், அவரது குடும்ப உறுப்பினர்களில் சிலரும் அரியதொரு குடும்ப பாரம்பரிய குறைபாடான மரபணு திரிபால் தூண்டப்படுகின்ற வயதுக்குவரும் முன்னரே முதிர்ச்சியடையும் நிலையை பெற்றுள்ளனர்.
 
அரிதான மரபணு திரிபு
 
பேட்ரிக்கின் இந்த நிலைமை டெஸ்டோடாக்சிகோசிஸ் என்று அறியப்படுகிறது. இத்தகைய நிலைமை, ஆணின் மிக முக்கிய பாலியல் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோனை சுரப்பதற்கு சரியான நேரம் இதுவென விரைகளை நம்ப செய்கிறது.

 
வயதுக்கு வருகிறபோது மற்றும் வளரிளம் வயதோடு தொடர்புடைய மாற்றங்களை இந்த டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன்தான் உடலில் உருவாக்குகிறது.
 
இத்தகைய அரிதான மரபணு திரிபு கொண்டவர்கள் உலகில் எத்தனை பேர் உள்ளனர் என்று மருத்துவர்களுக்கும் தெரியாது. உலக அளவில் ஆயிரம் பேர் இருக்கலாம் என்று ஒரு மதிப்பீடு உள்ளது.
 
பர்லே குடும்பத்தில் தலைமுறை தலைமுறையாக மரபணுவில் டொஸ்டோடாக்சிகோசிஸ் கடத்தப்பட்டு வருகிறது.
 
பேட்ரிக் ஏழு வயது ஆனதைபோல தோன்றினார்.
முன்னதாகவே வயதுக்கு வந்துவிட்டதால், மூன்று வயதான பேட்ரிக் ஏழு வயதினருக்கு ஒத்த எடையையும், உயரத்தையும் கொண்டிருந்தார்.
"நான் சமூகத்திற்கு அப்பாற்பட்டவர் என்ற உயரிய மனநிலையே எனது முதல் எண்ணம்" என்று பிபிசி உலக சேவையின் "அவுட்லுக்" வானொலி நிகழ்ச்சியில் லாஸ் ஏஞ்சலீஸில் வாழும் 34 வயதான நடிகரும், எழுத்தாளருமான பேட்ரிக் தெரிவித்தார்.
 
"இதுவொரு உடலின் அந்தரங்க பகுதிகளில் முடி வளர்வது பற்றிய விடயமட்டுமல்ல. உடலில் மாற்றங்கள் ஏற்படுவதையும் உள்ளடக்கியதாகும். நான் பொருந்தாதவன் என இது என்னை அடையாளப்படுத்தியது" என்று அவர் மேலும் கூறினார்.
 
குழப்பம் உருவாகுதல்
பேட்ரிக் நியூ யார்க்கில் வாழ்ந்தார். விளையாட்டு மைதானங்கள், நீச்சல் குளங்கள் மற்றும் குழந்தைகளின் பல்வேறுபட்ட நிகழ்வுகளில் பேட்ரிக் கலந்து கொள்வது குழப்பங்களை உருவாக்கியது.
இது தொடர்பாக அவரிடம் பல மோசமான நினைவுகள் உள்ளன.
 
"எனக்கு நான்கு வயதானபோது, நீச்சல் கற்றுக்கொள்ளும் வேளையில், எனது அம்மா, பெண்கள் உடை மாற்றும் அறைக்கு என்னை அழைத்து சென்றார். நான் மிகவும் பெரிதாக இருந்ததால் என்னை பார்த்தவுடன், ஒரு பெண் கத்த தொடங்கிவிட்டார்" என்று பேட்ரிக் நினைவுகூர்கிறார்.
இத்தகைய நிகழ்வுகளின்போது, எனது நிலைமையை அம்மா விளக்க முயன்றார். ஆனால், புரிந்து கொள்ளாத எதிர்மறையான நிலைமைதான் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
 
"இது எனக்கும், அம்மாவுக்கும் மிகவும் கடினமாக இருந்தது. மன ரீதியாக பெரும் அழுத்தம் கொடுப்பதாக இருந்தது" என்கிறார் பேட்ரிக்.
 
பேட்ரிக் மூன்று வயதானபோது, அவரது உடலில் இருந்த டெஸ்டோஸ்டிரோன் நிலைகள் 14 வயதினருக்கு இருப்பதற்கு ஒத்ததாக இருந்தன. பதின்ம வயதினரைபோல தோன்றிய அவர் குழந்தையைபோல நடந்து கொண்டார்.
"ஒரு வகை அரிய விலங்கைபோல, மக்கள் என்னை பார்த்தார்கள்" என்கிறார் பேட்ரிக்.
 
கினி சோதனை பன்றி
 
மரபணு திரிபு ஆய்வு எல்லாவற்றிலும் பேட்ரிக்கை அவரது தாய் தன்னார்வத்துடன் உட்படுத்தினார்.
தனது உடலிலுள்ள டெஸ்டோஸ்டிரோனின் பாதிப்புக்களை தடுப்பதற்கான இலவச சிகிச்சைக்காக ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மருத்துவமனையில் பல இரவுகளை பேட்ரிக் கழித்தார்.
 
"மருத்துவர்கள் என்னை சூழ்ந்திருப்பார்கள். எனது வயதை முடிவு செய்கின்ற முக்கிய மாறிலிகளில் ஒன்றான விரைகளை அளவிடுதல் உள்பட எல்லா வகையான முக்கிய பரிசோதனைகளையும் அவர்கள் செய்தார்கள்" என்று அவர் விளக்கினார்.
 
"ஆனால், எனக்கு ஆறு அல்லது ஏழு வயதானபோது, இதற்கு நான் பழகிவிட்டேன். நான் வேறுபட்டவனாக தெளிவாக தெரிந்ததால், அவ்வாறு இனம்காணப்படுவது இயல்பாகவே தோன்றியது" என்கிறார் பேட்ரிக்.
 
நரம்பு வழி உள்பட பல மருத்துவ சிகிச்சைகளையும் அவர் மேற்கொண்டார்.
 
மோசமான பையன்
 
"நீண்டகாலமாக ஒவ்வோர் இரவும், எனது காலில் நான் ஊசி போட்டுக்கொள்ள வேண்டியிருந்தது. எனது நண்பரின் வீட்டில் நான் தூங்கிவிட்டால், எனது அம்மா அங்கு வந்து ஊசிப்போட்டுவிட்டு செல்வார்" என்று பேட்ரிக் விளக்கினார்.
 
ஆனால், இந்த நிலைமை பள்ளியில் பேட்ரிக்குக்கு கஷ்டங்களை கொடுத்தது. பெரிதாகவும், முடியுடனும், சண்டைக்கு தயாரானவரைபோலவும் பேட்ரிக் தோற்றமளித்தார். தன்னை கேலி செய்வதில் இருந்து தற்காத்து கொள்ள ஓரளவு இது உதவியது.
 
"நான் மோசமான பையன் என முத்திரை குத்தப்பட்டேன். யாரும் விரும்பாததைப்போல மோசமான குழந்தையாக நான் இருக்க விரும்பவில்லை என்பதால் விரக்தியாகவே இருந்தது" என்று பேட்ரிக் நினைவுகூர்ந்தார்.
 
ஒன்பதாவது வயதில் புகைப்பிடிக்க தொடங்கிய பேட்ரிக், அதனை அடுத்து மரிஜூனா புகைக்க ஆரம்பித்தார்.
 
அவரது 11வது வயதில் சிகிச்சையை நிறுத்துவதற்கு மருத்துவர்கள் முடிவு செய்தபோது, நிலைமை மிகவும் மோசமாகியது.
 
""மருத்துவ சிகிச்சையால் கட்டுப்பாட்டில் இருந்து வந்த எல்லா ஹார்மோன்களும், திடீரென மருந்தின்றி விடுவிக்கப்பட்டதால், தனது மோசமான நடத்தைகள் மீண்டும் புத்துயிர் பெற்றன" என்று பேட்ரிக் தெரிவித்தார்.
 
ஆனால், எப்படியானாலும் அவர் பள்ளிக்கு அனுப்பப்பட்டார்.
 
"மதிய வேளையில் எனது சில நண்பர்களிடம் (லைசெர்ஜிக் ஆசிட் டைதலமைடு பற்றி) கூறினேன். எனது அனுபவத்தை மிகைப்படுத்தி தெரிவித்தேன். அதில் ஒருவர் யாராவது ஒருவரின் பானத்தில் (ஆசிட்டை) கலப்பது நல்லது என்று எண்ணினார்" என்று பேட்ரிக் விளக்கினார்.
 
ஆனால், அந்த சிறுமி உண்மையிலேயே உடல் நலமில்லாமல் ஆனபோது, அவர் அதனை ஒப்புக்கொண்டார்.
 
"கைது செய்யப்பட்ட நான், கைகளில் விலங்கிடப்பட்டு பள்ளியில் இருந்து கொண்டு செல்லப்பட்டேன். எனது வாழ்வில் சிந்திக்க தொடங்கிய தருணம் அது" என்கிறார் பேட்ரிக்
 
தந்தையின் பிரச்சனைகள்
 
இதே உடல் நலமின்றி துன்புற்றாலும், பேட்ரிக்கின் தந்தை, இது பற்றி அதிகமாக பேசவில்லை.
 
"அவரது குழந்தை பருவம் மிகவும் துன்பம் நிறைந்ததாக இருந்தது. அவர் ஐந்து வயதாக இருந்தபோது, பத்து வயதுடையவரின் பாலியல் அபிலாஷைகளை அவர் கொண்டிருந்தார். இதனை எவ்வாறு கையாள்வது என்று அவர் என்னிடம் கூறியிருக்க முடியும். ஆனால், சொல்லாமல் விட்டுவிட்டார்" என்று பேட்ரிக் கூறினார்.
 
பதினைந்து வயதை அடைந்தபோதுதான், பேட்ரின் பிற சிறுவர்களைபோல உணர தொடங்கினார். தனது வயதிற்கு ஒத்தவரைபோல தானும் இருக்க முடியும் என்பதையும் பேட்ரிக் உணர்ந்து கொண்டார்.
 
"போதை மருந்து எடுத்து கொண்ட நண்பாகளிடம் இருந்து நான் விலகிவிட்டேன். படிக்கவும், விளையாடவும், தொடங்கினேன். அந்நேரத்தில்தான் பல்கலைக்கழகம் செல்லவும் முடிவெடுத்தேன்" என்கிறார் பேட்ரிக்.
 
தனது வயதுக்கு வந்து துன்புற்ற இந்த கதையை பிந்தைய வாழ்க்கையின்போது, பேச தொடங்கினார். மனைவியோடும், நண்பர்களோடும் பகிர்ந்து கொண்டார்
 
அவ்வாறு செய்தபோது. அவரே ஆச்சரியமடையும் விதமாக, பிறரின் இரக்கத்தையும், இது பற்றி அதிகம் அறிந்து கொள்ளும் பிறரின் ஆர்வத்தையும் அவர் கண்டார்.
 
"எனது வாழ்க்கை கதை இத்தகைய சுகவீனத்திற்கு குணமளிக்கும் மருந்தாக உள்ளதாக ஒருவர் கூறினார்" என்று பேட்ரிக் தெரிவித்தார்.
 
பின்னர், பேட்ரிக் தன்னை ஏற்றுக்கொண்டு தன்னோடு ஒப்பரவு செய்துகொண்டார்.
 
2015ம் ஆண்டு அவரது மனைவி மெரிடித் நெட் என்று அவர்கள் பெயரிட்ட மகனை பெற்றெடுத்தார். இந்த குழந்தைக்கு இத்தகைய எவ்வித மரபணு பிரச்சனையும் இல்லை என்பதை பரிசோதனைகள் காட்டின.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்