ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவு என்ன அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தும்?

Webdunia
வெள்ளி, 3 மார்ச் 2023 (09:28 IST)
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்றிருக்கிறது. இது அரசியல் ரீதியல் தாக்கத்தை ஏற்படுத்துமா?
 
நடந்து முடிந்திருக்கும் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறார். அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசு 49,981 வாக்குகளைப் பெற்றிருக்கும் நிலையில், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 1,10,556 வாக்குகளைப் பெற்றிருக்கிறார். வாக்கு வித்தியாசம் மட்டும் 66,575ஆக இருக்கிறது. கடந்த முறை, தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியின் சார்பில் வெற்றிபெற்ற திருமகன் ஈ.வெ.ரா. வாங்கிய மொத்த வாக்குகளே 67,300தான் என்பதைப் பார்க்கும்போது இது மிகப் பெரிய வாக்கு வித்தியாசமாகும்.
 
இந்தத் தேர்தல் முடிவுகள் ஒவ்வொரு கட்சியிலும் ஒவ்வொருவிதமான ஒவ்வொருவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும். தி.மு.கவைப் பொறுத்தவரை, இதற்கு முன்பெப்போதும் இல்லாதவகையில் ஒரு இடைத்தேர்தலை சந்தித்து, தமிழ்நாட்டுத் தேர்தல் களத்தில் தனது ஆதிக்கம் தொடர்ந்து நீடிக்கிறது என்பதை காட்ட முயன்றிருக்கிறது.
 
ஆனால், இடைத்தேர்தலில் இம்மாதிரி மிகப் பெரிய வெற்றிபெறுவது தி.மு.கவுக்கு புதிதல்ல. அது ஒருபோதும் ஆளும் கட்சி மீதான நல்லெண்ணத்தைப் பிரதிபலிப்பதாகவும் இருந்ததில்லை.
 
2009ஆம் ஆண்டில், மதுரை திருமங்கலம் தொகுதியின் அப்போதைய சட்டமன்ற உறுப்பினர் வீர இளவரசு இறந்துவிட இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த இடைத் தேர்தலில் தி.மு.கவின் சார்பில் லதா அதியமான் நிறுத்தப்பட்டார். அவரை எதிர்த்து அ.தி.மு.கவின் எம். முத்துராமலிங்கம் போட்டியிட்டார்.
 
இந்தத் தேர்தலில் தென் மண்டல அமைப்புச் செயலாளராக இருந்த மு.க. அழகிரியின் தலைமையில் தேர்தலை எதிர்கொண்டது தி.மு.க. இதில் கிட்டத்தட்ட 39,000 வாக்கு வித்தியாசத்தில் தி.மு.க. வெற்றிபெற்றது. 'திருமங்கலம் ஃபார்முலா' என்ற சொல்லாடலே இந்தத் தேர்தலை ஒட்டி உருவானது. ஆனால், 2011ல் நடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் எம். முத்துராமலிங்கமே வெற்றிபெற்றார். ஒரு கொண்டாட்டத்திற்கான தருணத்திற்கு வேண்டுமானால், இந்தத் தேர்தல் தி.மு.கவுக்கு பலனளித்திருக்கலாம்.
அ.தி.மு.கவைப் பொறுத்தவரை, தேர்தல் தோல்வி எதிர்பார்க்கப்பட்டதுதான் என்றாலும் பல பாடங்களை மிகக் கடினமான முறையில் கற்றுக்கொண்டிருக்கிறது. தேர்தல் முடிவுகள் வெளிவந்த தினத்தன்று தொலைக்காட்சி விவாதங்களில் அ.தி.மு.க. சார்பில் பேசிய பலரும் தங்களுக்குப் போதுமான கால அவகாசம் இல்லை என்று குறிப்பிட்டனர்.
 
அந்த வாதத்தில் ஓரளவுக்கு உண்மை இருந்தது. தேர்தல் அறிவித்ததும் தி.மு.க., நா.த.க., ஏன் தே.மு.தி.க.கூட தேர்தலுக்கு வேட்பாளர்களை அறிவித்து தேர்தலுக்குத் தயாரான நிலையில், அ.தி.மு.கவில் எடப்பாடி தரப்பும் ஓ. பன்னீர்செல்வம் தரப்பும் ஆளுக்கொரு வேட்பாளர்களை அறிவித்து தொண்டர்களை குழப்பத்தில் வைத்திருந்தனர். பா.ஜ.கவும் தனது ஆதரவு ஒன்றுபட்ட அ.தி.மு.கவுக்குத்தான் என்றுகூறி இன்னும் திகைக்க வைத்தது. தேர்தலில் வேட்புமனு தாக்கல் முடிவதற்கு ஒரு நாள் முன்புதான் எல்லாக் களேபரங்களும் முடிவுக்கு வந்து தென்னரசு வேட்பாளராக மனுத்தாக்கல் செய்தார்.
 
 
 
இதற்குப் பிறகு, அ.தி.மு.கவின் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்தது என்றாலும் ஆரம்பத்தில் இருந்த குழப்பத்தால் ஏற்பட்ட பின்னடைவிலிருந்து அந்தக் கட்சி மீளவே இல்லை. வாக்குப்பதிவிற்கு சில நாட்களுக்கு முன்பாக, எடப்பாடி கே. பழனிச்சாமி தரப்பே உண்மையான அ.தி.மு.க. என்ற வகையில் நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டாலும்கூட, அந்த உற்சாகம் களத்தில் பெரிதாக எடுபடவில்லை. தேர்தல் களத்தில் தி.மு.க. கையாண்ட எல்லா அம்சங்களையும் அ.தி.மு.கவும் அதற்கு ஒரு படி குறைவான நிலையில் கையாண்டது. இருந்தபோதும் கடந்த தேர்தலோடு ஒப்பிட்டால் பெரும் பின்னடைவையே சந்தித்திருக்கிறது.
எடப்பாடி கே. பழனிச்சாமி தலைமையில் தொடர்ந்து தேர்தல் தோல்விகளை சந்தித்துவருவதும் அக்கட்சியினருக்கு உற்சாகமூட்டுவதாக இருக்காது. இதற்கு முன்பாக, 2017ல் நடந்த ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் ஆளும் கட்சியாக இருந்த அ.தி.மு.கவை சுயேச்சையாக நின்ற டிடிவி தினகரன் தோற்கடித்தார். 2004ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆளும் கட்சி ஒரு இடைத்தேர்தலில் தோற்றது அப்போதுதான்.
 
இதற்குப் பிறகு, 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல், 2019ல் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல், 2021ல் நடந்த சட்டமன்ற பொதுத் தேர்தல், 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் என எடப்பாடி கே. பழனிச்சாமி தலைமையில் தொடர்ந்து தோல்விகளையே அ.தி.மு.க. சந்தித்து வருகிறது.
ஆனால், அ.தி.மு.க. தொண்டர்கள், நிர்வாகிகளைப் பொறுத்தவரை, வலுவாக எடப்பாடி கே. பழனிச்சாமியின் பின்னால் நிற்கிறார்கள் என்பதால் கட்சிக்குள் அவரது நிலைக்கு பெரிய பாதிப்பில்லை. ஆனால், பொதுமக்களிடம் அவர் ஒரு வலுவான தலைவரா என்ற கேள்வியை இந்தத் தேர்தல் தோல்விகள் ஏற்படுத்தும். 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வரும்போது, கூட்டணி பேரங்களிலும் பிரசாரங்களிலும் இந்த தோல்விகள் மன ரீதியாக ஒரு உறுத்தலாகவே இருக்கும்.
 
 
 
இந்தத் தேர்தலில் மிகப் பெரிய அதிர்ச்சி என்றால், அது நாம் தமிழர் கட்சிக்கும் தே.மு.தி.கவிற்கும்தான். கடந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரான கோமதி 11,629 வாக்குகளைப் பெற்றார். இது பதிவான வாக்குகளில் 7.65 சதவீதம். ஆனால், இந்த முறை நாம் தமிழர் கட்சி 10,804 வாக்குகளையே பெற்றிருக்கிறது. இது கடந்த முறை பெற்ற வாக்குகளைவிட 800 வாக்குகள் குறைவு என்பதோடு, வாக்கு சதவீதமும் குறைந்துள்ளது. கடந்த முறை, 7.65 சதவீத வாக்குகளைப் பெற்ற கட்சி, இந்த முறை பதிவான வாக்குகளில் 5 சதவீத வாக்குகளையே பெற்றிருக்கிறது.
 
தேர்தல் பிரச்சாரத்தின்போது, முதலியார்கள், அருந்ததியர்கள் குறித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியது. சமூக ரீதியிலும் மொழிரீதியிலும் வாக்காளர்களைப் பிரித்து, வாக்குகளைச் சேகரிக்க முயல்கிறாரா என்ற கேள்விகளையும் எழுப்பியது.
 
ஆனால், பிரச்சார களத்தில் நாம் தமிழர் கட்சியினர் மிக சுறுசுறுப்பாக பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகளுக்கு இணையாக நாம் தமிழர் கட்சியின் பிரச்சாரத்தைப் பார்க்க முடிந்தது. அந்தப் பிரச்சாரத்தைத் தாண்டியும் அக்கட்சிக்கு ஏற்பட்டிருக்கும் பின்னடைவு, கவனிக்கத்தக்கதாக இருக்கிறது.
 
இந்தத் தேர்தலிலேயே மிக மிக மோசமாக பின்னடைவைச் சந்தித்திருக்கும் கட்சி என்றால், அது தே.மு.தி.கதான். 2008ல் இந்தத் தொகுதி உருவாக்கப்பட்டவுடன், 2011ல் நடந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.கவுக்கு இந்தத் தொகுதி ஒதுக்கப்பட்டது. அதில் சந்திரகுமார் நிறுத்தப்பட்டு, அவர் வெற்றியும்பெற்றார். இதற்கடுத்தடுத்த தேர்தல்களில் அந்தக் கட்சிக்கு இந்தத் தொகுதியில் பின்னடைவுதான் ஏற்பட்டது.
 
ஆனால், இந்த முறை இந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதும் மிகுந்த உற்சாகத்துடன் வேட்பாளரை அறிவித்தது தே.மு.தி.க. ஏற்கனவே தங்கள் வசம் இருந்த தொகுதி இது என்பது இதற்கு ஒரு முக்கியக் காரணம். ஆனால், விஜயகாந்தின் உடல்நிலை மிக மோசமாகவே இருந்த நிலையில், பிரேமலதா விஜயகாந்த்தும் அவரது மகன்களுமே பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அவர்கள் பிரச்சாரக் களத்தில் இல்லாதபோது, தேர்தல் பணியாற்ற ஆட்களும் இன்றி, போதுமான நிதியும் இன்றி தவித்தது தே.மு.தி.க.
 
முடிவில் வெறும் 949 வாக்குகளையே அந்தக் கட்சி பெற்றிருக்கிறது. இந்தத் தோல்வி, அந்தக் கட்சியைப் பொறுத்தவரை மிகப் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. ஏற்கனவே 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அந்தக் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து வெறும் 60 தொகுதிகளில் போட்டியிட்டு படுதோல்வியைச் சந்தித்தது. இனிவரவிருக்கும் தேர்தல்களில் அந்தக் கட்சிக்கு எவ்விதமான பேர வலிமையும் இருக்காது என்பதோடு, அக்கட்சியை சேர்க்க பிரதான கட்சிகள் யோசிக்கும் நிலையையும் இந்தத் தோல்வி ஏற்படுத்தியிருக்கிறது.
 
இந்தத் தேர்தல் முடிவு ஒவ்வொரு கட்சிக்கும், தலைவருக்கும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ப்ரியன்.
 
"இந்தத் தேர்தலின் மூலம் மு.க. ஸ்டாலின் தான் ஒரு ஆளுமை என்பதை மறுபடியும் நிரூபித்திருக்கிறார். எடப்பாடியைப் பொறுத்தவரை, அவர் தேர்தல் வெற்றியின் மூலம்தான் அதைச் சாதிக்க முடியும். இந்த முறையும் அவருக்கு அது தவறிப் போயிருக்கிறது.
 
ஆனால், இதற்காக, அ.தி.மு.கவினர் அவரை விட்டு விலகி ஓ. பன்னீர்செல்வம் பக்கம் செல்வார்கள் எனச் சொல்ல முடியாது. நாம் தமிழர் கட்சியைப் பொறுத்தவரை, அக்கட்சி களத்தில் வளர்ந்திருக்கிறது என்பது உண்மைதான். ஆனால், அதை துல்லியமாக எடைபோடுவதற்கான இடம், இந்தத் தொகுதி இல்லை.
 
இரு பெரிய கட்சிகளும் கடுமையாக மோதிய தொகுதியாக இருந்ததால், அக்கட்சியின் உண்மையான வளர்ச்சி தெரியாமல் போய்விட்டது. தே.மு.தி.கவைப் பொறுத்தவரை, அக்கட்சி தமிழ்நாட்டில் தன்னுடைய இருப்பிற்கான நியாயத்தை இழந்துவிட்டது. இந்தச் செய்திகளைத்தான் இந்த இடைத்தேர்தல் சொல்லியிருக்கிறது" என்கிறார் ப்ரியன்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்