ஈரக்குமிழ் வெப்பநிலை என்றால் என்ன? ஏன் கவலைக் கொள்ள வேண்டும்?

Webdunia
வெள்ளி, 20 மே 2022 (14:05 IST)
தெற்காசியாவின் பல்வேறு நாடுகளில் தீவிர வெப்ப அலை வீசிக் கொண்டிருக்கிறது. கடந்த ஞாயிறன்று டெல்லியில் 50 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. அதேபோல, பாகிஸ்தானிலும் வெப்பம் சுட்டெரிக்கிறது.
 
வரும் காலங்களில் இந்தியாவின் வட மேற்கு பகுதிகளில் வெப்பநிலை புதிய உச்சத்தை அடையும் என, வானிலை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், இந்த 50 டிகிரி செல்சியஸ் என்பதன் தீவிரம் வேறுபடும். அதாவது, வெப்பநிலை என்பது எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. வெறும் வெப்பம் மட்டுமே அதிகமாக இருந்து காற்றில் ஈரப்பதம் குறைவாக இருந்தால் வெப்பத்தின் தாக்கம் குறைவாக இருக்கும். இதற்கு எடுத்துக்காட்டாக கனடா போன்ற நாடுகளை கூறலாம்.
 
ஆனால், வெப்பம் அதிகமாக இருப்பதோடு காற்றில் ஈரப்பதமும் அதிகமாக இருந்தால் அது அதிக ஆபத்தானது. இதையே 'வெட் பல்ப் டெம்ப்ரேச்சர்' (Wet - Bulb temperature) என்று ஆங்கிலத்தில் சொல்கின்றனர். தமிழில் இதை ஈரக்குமிழ் வெப்பநிலை என்று சொல்கின்றனர். இந்த ஈரக்குமிழ் வெப்பநிலை குறித்து விரிவாக பார்ப்போம்.
 
'வெட் பல்ப்' எனப்படும் ஈரக்குமிழ் வெப்பநிலை என்றால் என்ன?
அனைவரும் டெம்பரேச்சர் என்ற வார்த்தையை கேள்விப்பட்டிருப்பீர்கள். அதாவது, வெப்பநிலை என்று அர்த்தம். இதை தெர்மாமீட்டர் கொண்டு அளக்கலாம். ஆனால், இந்த ஈரக்குமிழ் வெப்பநிலை என்பது வெப்பம் மற்றும் காற்றின் ஈரப்பதம் என இரண்டும் சேர்ந்தது.
 
இதை எப்படி அளக்க முடியும்?
இதை எளிதாக நாம் அளக்க முடியும். அதாவது, ஒரு பல்ப் தெர்மாமீட்டரை எடுத்துக் கொள்ள வேண்டும். அதை பருத்தியால் சுற்றிக் கொள்ள வேண்டும். பின் அதன் மீது நீரை தெளிக்க வேண்டும். அது ஈரமாகும்.
 
இதன்மூலம் நீர் ஆவியானதுடன் என்ன வெப்பநிலை உள்ளது என்பதை காட்டும். ஆவியாகும் நீர் வெப்ப ஆற்றலை தன்னுடன் எடுத்துக் கொண்டு தெர்மாமீட்டரை குளிர்ச்சியாக்கும். அப்போது 'ஈரக்குமிழ் வெப்பநிலை' பதிவாகும்.
 
இதை கவனிக்க வேண்டியது ஏன் முக்கியம்?
பொதுவாக, மனிதர்களுக்கு வியர்வை வந்தால் அவர்களின் வெப்பம் தணியும். சருமத்தின் வழியே வரும் வியர்வை உடலின் வெப்பத்தைக் குறைக்கிறது. அதேபோல, வியர்வை ஆவியாகும்போது வெப்பத்தை தன்னுடன் எடுத்துச் செல்கிறது. அதாவது, வெப்பத்தைக் குறைக்கிறது.
 
அதிக வெப்பம் நிறைந்த இடத்தில் இந்த செயல்முறைதான் நடைபெறும். ஆனால், காற்றில் ஈரப்பதம் இருந்தால் இந்த செயல்முறை மந்தமாக இருக்கும். அதாவது, காற்றில் ஏற்கெனவே ஈரப்பதம் இருந்தால் வியர்வை மெதுவான வேகத்தில்தான் ஆவியாகும். எனவே, நமது உடல் வெப்பமும் குறையாது. இது அதிகமாகும்போது, அதாவது, நமக்கு வியர்வையும் வரவில்லை, வெப்பமும் அதிகமாக உள்ளது என்றால் அது உயிரிழப்புகளுக்குக்கூட வித்திடும்.
 
எந்த அளவு வெப்பநிலை ஆபத்தானது?
 
ஆய்வுகளின்படி, 35 டிகிரி செல்சியஸுக்கும் மேல் ஈரக்குமிழ் வெப்பநிலை இருந்தால் மனித உடலில் இருக்கும் வெப்பம் வெளியேறாது. எனவே, இந்த வெப்பநிலையில் குளிர்சாதன வசதி இல்லையென்றால், சில மணிநேரங்களில் உயிரிழக்க நேரிடும்.
 
அதாவது, உடல் ஆரோக்கியமான, அதிக தண்ணீருடன், நிழலில் கனமான துணிகள் ஏதும் இன்றி ஓய்வில் இருக்கும் மனிதருக்கும் இந்த வெப்பநிலை ஆபத்தானதுதான். பொதுவான வெப்பநிலையைக் காட்டிலும் இந்த ஈரக்குமிழ் வெப்பநிலை குறைந்த அளவில்தான் பதிவாகும். அதேபோல, அரிதாகவே 35 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்துள்ளது. ஆனால், இந்த நிலை நீடிக்கும் என்று சொல்ல முடியாது.
 
புவி வெப்பமயமாதலுக்கும் இதற்கும் என்ன தொடர்பு?
காற்று அதிக வெப்பமாக இருந்தால் அதில் அதிக ஈரப்பதம் இருக்கும். எனவே, உலக அளவில் வெப்பநிலை அதிகரித்தால், அதிக ஈரப்பதம் உருவாகும். இதனால் ஈரக்குமிழ் வெப்பநிலை அதிகரிக்கும்.
 
'சயின்ஸ் அட்வான்ஸஸ்' என்ற சஞ்சிகையில் வெளியான புதிய ஆய்வு ஒன்றில், தெற்காசியா மற்றும் பெர்சியன் வளைகுடா பகுதிகளில் ஏற்கெனவே கடந்த 40 ஆண்டுகளில் இந்த ஈரக்குமிழ் வெப்பநிலை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
 
அதேபோல, இது உலகின் பிற பகுதிகளுக்கும் வேகமாக பரவும் ஆபத்தும் உள்ளது. புவி வெப்பமயமாதலை தடுக்க தகுந்த நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்றால் இந்த நிலையை நீண்ட நாட்களுக்கு எதிர்கொள்ள நேரிடும்.
 
இதனை நாம் ஏன் தெரிந்துகொள்ள வேண்டும்?
இந்த ஈரக்குமிழ் வெப்பநிலையை நாம் அளந்து வைத்துக் கொள்வதன் மூலம் எந்தெந்த பகுதியில் எல்லாம் வாழ முடியாத சூழல் ஏற்படுகிறது என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம். அங்கிருந்து அரசாங்கங்கள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
 
"விரிவாக சொல்ல வேண்டும் என்றால், சில பகுதிகளில் அடுத்த பத்து ஆண்டுகளில் இந்த ஈரக்குமிழ் வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸை அடையும் என தெரியவந்தால், அதற்கான எச்சரிக்கை அமைப்புகளை அரசாங்கம் நிறுவ வேண்டும். பள்ளியின் நேரத்தை மாற்றலாம். வெப்பத்தை தணிக்கும் திட்டங்களை வகுக்கலாம்," என இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் காலநிலை மாற்றம் குறித்த ஆய்வு இயக்குநர் அஞ்சல் பிரகாஷ் தெரிவிக்கிறார்.
 
தற்போதைய நிலைமை மேலும் மோசமாகுமா?
தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் வீசும் வெப்ப அலை பெரும் கவலைக்குரிய ஒன்றாகவுள்ளது. "பாகிஸ்தானில் வெளியே சென்றால் நெருப்பால் சூழப்பட்டதுபோல மக்கள் உணருவதை கூறும் கதைகளை நான் படித்து வருகிறேன்," என்கிறார் அஞ்சல் பிரகாஷ். இதுவரை 2010ஆம் ஆண்டில் பதிவான வெப்ப அலையை போல வெப்பம் பதிவாகவில்லை. ஆனால், வரக்கூடிய நாட்களில் அது நடக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.
 
வேர்ல்ட் மெட்யோராலாஜிக்கல் ஆர்கனிசேஷன் என்ற ஐநாவின் புவியியல் சார்ந்த அமைப்பு மே 18ஆம் தேதி வெளியிட்ட தி ஸ்டேட் ஆஃப் க்ளைமட் ரிபோர்ட் என்ற அறிக்கையில் காலநிலை மாற்றத்தை சுட்டிக் காட்டும் நான்கு முக்கிய அம்சங்கள் 2021ஆம் ஆண்டில் புதிய உச்சத்தைத் தொட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அதாவது, பசுமைக்குடில் வாயு அதிகரிப்பு, கடல் மட்டம் உயர்வு, பெருங்கடல் வெப்பமாதல் மற்றும் பெருங்கடல் அமிலமாதல் அதிகரித்துள்ளது. இவை எல்லாம் காலநிலை சீரழிவை மனிதகுலம் எவ்வளவு மோசமாக கையாள்கிறது என்பதற்கான சாட்சியங்கள் என ஐநாவின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார்.
 
நாம் காலநிலை மாற்றத்தை சரியாக கையாளவில்லை என்றால் மேலும் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்