செளதியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்: ஜமால் கஷோக்ஜி கொலை குறித்து என்ன பேசினார்?
சனி, 16 ஜூலை 2022 (22:11 IST)
இந்த சந்திப்புக்
கு முன்னதாக அமெரிக்க அதிபர் பைடன் மற்றும் இளவரசர் சல்மான் ஆகியோர் முஷ்டியால் முட்டிக் கொண்டனர். இது இருநாட்டுக்கு இடையே நல்லுறவு பேணுவதற்கான ஒரு அடையாளமாக பார்க்கப்படுகிறது.
பைடனின் இந்த செயலை கஷோக்ஜியை திருமணம் செய்து கொள்ளவிருந்த ஹாட்டிஸ் சென்கிஸ் விமர்சித்திருந்தார்.
இந்த புகைப்படத்தை பகிர்ந்திருந்த அவர், "ஜமாலின் கொலைக்கு பொறுப்பானவர்களை கண்டுபிடிப்பீர்கள் என்று நீங்கள் சொன்னது இதுதானா? எம்பிஎஸின் அடுத்த பலியின் ரத்தம் உங்கள் கைகளில் உள்ளது," என கஷோக்ஜி இந்நேரம் நினைத்திருப்பார் என ட்வீட் செய்துள்ளார்.
கஷோக்ஜியின் கொலையை தவிர்த்து, எண்ணெய் வரத்தகம் குறித்தும் பைடனும் இளவரசர் சல்மானும் பேசியதாக தெரிகிறது.
"பெரும் எண்ணெய் உற்பத்தியாளரான செளதி, அடுத்தடுத்த வாரங்களில் எரிபொருள் சந்தையை ஸ்திரமாக்க மேற்கொண்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்," என்று கேட்டுக் கொண்டதாக பைடன் தெரிவித்துள்ளார்.
செளதி அரேபியாவை சேர்ந்த பிரபலமான பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி.
இஸ்லாமியர்களின் புனித நகரமான மதினாவில் 1958 ஆம் ஆண்டு பிறந்தவர். அமெரிக்காவில் உள்ள இந்தியானா பல்கலைக்கழகத்தில் வணிக மேலாண்மை பயின்றவர்.
வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளை ஒரு பத்திரிகையாளராக கஷோக்ஜி பதிவு செய்திருக்கிறார். குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்ட மாற்றங்களை, போர்களை, பிரச்னைகளை.
சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தானுக்குள் ஊடுருவியது முதல் அல் கய்தா தலைவர் ஒசாமா பின் லேடனின் எழுச்சி வரை பல சம்பவங்களை பதிவு செய்தவர் கஷோக்ஜி.
1980 - 90 ஆகிய காலகட்டங்களில் பல முறை இவர் ஒசாமாவை நேர்காணல் கண்டிருக்கிறார்.
ஒரு காலத்தில் ஜிகாதிகளின் சர்வதேச தலைவராக இருந்த அப்துல்லா அஜ்ஜாமை காப்பாற்றியவர் ஜமால் கஷோக்ஜி. ஒசாமா பின் லேடனின் நெருங்கிய நண்பராக இருந்தவர் ஜமால் கஷோக்ஜி என்றும் கடந்தாண்டு முணுமுணுக்கப்பட்டது.
கத்தார் அரசின் ஆதரவில் இயங்கும் 'அல் ஜசீரா'வுக்கு எதிராக செளதி ஆதரவில் அல் அரப் தொலைக்காட்சி 2012 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டபோது அதன் தலைமை பொறுப்பை இவர் ஏற்றார்.
ஆனால், 2015 ஆம் ஆண்டு பஹ்ரைனில் ஒளிபரப்பை தொடங்கிய 24 மணி நேரத்திலேயே தன் ஒளிபரப்பை நிறுத்தியது அந்த தொலைக்காட்சி. அதற்கு பஹ்ரைனின் எதிர்க்கட்சி தலைவரை பேச அழைத்ததுதான் காரணம்.
செளதியின் விவகாரங்கள் குறித்து காத்திரமாக எழுதும் செய்தியாளராக பார்க்கப்பட்டார் ஜமால்.
ஒரு பத்திரிகையாளராக மட்டும் கசோக்ஜி இல்லை. பல தசாப்தங்களாக செளதி அரச குடும்பத்திற்கு நெருக்கமானவராக ஜமால் கஷோக்ஜி இருந்திருக்கிறார். அவர்களின் ஆலோசகராகவும் செயலாற்றி இருக்கிறார்.
2017ஆம் ஆண்டு செளதி அரச குடும்பத்துக்கும் கஷோக்ஜிக்கும் முரண்பாடு ஏற்பட்டது.
அவர் செளதியை கடுமையாக விமர்சித்தார். அதன் முடி இளவரசரை ரஷ்ய அதிபர் புதினுடன் ஒப்பிட்டர்.
அதற்கு பின்பு அங்கிருந்து அமெரிக்கா சென்றார்.
இளவரசர் சல்மானை விமர்சித்து வாஷிங்டன் போஸ்ட் இதழில் கஷோக்ஜி தொடர்ந்து கட்டுரைகள் எழுதினார்.
வாஷிங்டன் போஸ்டில் தாம் எழுதிய முதல் கட்டுரையில், செளதியில் இருந்தால் தாம் கைது செய்யப்படலாம் என்று குறிப்பிட்டு இருந்தார்.