டிடிவி தினகரனின் நோக்கம் வெல்வதா? வீழ்த்துவதா?

Webdunia
வெள்ளி, 5 ஏப்ரல் 2019 (15:40 IST)
கடந்த 2017 டிசம்பரில் நடந்த ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் அதிமுக வேட்பாளரை காட்டிலும் 40 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.

 


பலம்பொருந்திய ஆளும் அதிமுக மற்றும் பிரதான எதிர்க்கட்சியான திமுக ஆகிய இரு கட்சிகளையும் மீறி சுயேச்சை வேட்பாளராக குக்கர் சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற தினகரன் அரசியல் வட்டாரத்தில் பலரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

வாக்குக்கு பணம் அளித்ததாக அக்காலகட்டத்தில் எதிர்க்கட்சியினர் அவர் மீது குற்றச்சாட்டுகள் வைத்தபோதிலும் இதனை அழுத்தமாக தினகரன் மறுத்தார்.

2016 டிசம்பரில், ஜெயலலிதாவின் மரணத்துக்கு பிறகு அதிமுகவின் பொது செயலாளராக தேர்தெடுக்கப்பட்ட சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறைக்கு செல்லும் முன்பு, 2017 பிப்ரவரியில் கட்சியின் துணைப் பொது செயலாளராக டிடிவி தினகரன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதன்பின், அதிமுகவின் இரு அணிகளாக செயல்பட்டு வந்த ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அணிகள் இணைய, இவர்கள் சசிகலா மற்றும் தினகரன் உள்ளிட்டவர்கள் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தினர்.

தினகரன் மற்றும் ஓபிஎஸ்-இபிஎஸ் ஆகிய இரு அணிகளும் கட்சி மற்றும் இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரினர்.

பின்னர், ஓபிஎஸ்-இபிஎஸ் அணிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டது. ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத் தேர்தலில் தினகரன் வென்றார்.



அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்கிற புதிய பெயருடன் ஜெயலலிதாவின் உருவம் தாங்கிய கொடியுடன், ஏற்கனவே வென்றெடுத்த சின்னமான குக்கரின் விசிலுடன், மதுரை மேலூரில் தன் புதிய பயணத்தைத் தொடங்கினார் தினகரன்.

ஓபிஎஸ்-இபிஎஸ் அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கியதை எதிர்த்து டி.டி.வி.தினகரன், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி வி.கே.சசிகலா ஆகியோர் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் நிராகரித்தது.

இதனிடையே தமிழக சட்டப்பேரவையில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட 18 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

தகுதிநீக்கம் செய்யப்பட்டவர்கள் அதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அவர்களை சட்டப்பேரவைத் தலைவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டது சரியென்றே தீர்ப்பளித்தது.

இந்நிலையில், தமிழகத்தில் 2019 மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகள் இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதியன்று நடக்கவுள்ள நிலையில், திமுக மற்றும் அதிமுக கூட்டணிகள் போட்டியில் பிரதானமாக இருந்த போதிலும் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் (அமமுக) இத்தேர்தலில் ஏற்படுத்தவுள்ள தாக்கம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


எஸ்டிபிஐ கட்சியுடன் மட்டும் கூட்டணி அமைத்துள்ள அமமுக, அக்கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கிய நிலையில், மற்ற தமிழகத்தில் உள்ள மற்ற 38 மக்களவை தொகுதிகளிலும், புதுவையிலும் அமமுக போட்டியிடுகிறது. மேலும் இடைத்தேர்தல் நடக்கவுள்ள 18 சட்டமன்ற தொகுதிகளிலும் அக்கட்சி போட்டியிடுகிறது.

கடும் குற்றச்சாட்டுகள் சுமத்தியபோதும் அது தொடர்பாக பொறுமையாக விளக்கமளிப்பது, புன்னகையுடன்செய்தியாளர்களை எதிர்கொள்வது, இயல்பான நடையில் பேசியவாறு பிரசாரம் செய்வது என டிடிவி தினகரன் தன் ஆளுமையை வெளிப்படுத்தி வருகிறார்.

ஆனால், தினகரன் பெற்றுள்ள கவனம் வாக்குகளாக மாறுமா என்பது குறித்தும், திமுக மற்றும் அதிமுகவுக்கு மாற்றாக தினகரனின் அமமுக விளங்குமா என்பது குறித்தும் மூத்த பத்திரிகையாளர் டி.சுரேஷ்குமார் பிபிசி தமிழிடம் பேசினார்.

''அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளை தாண்டி 3-ஆவது சக்தியாக வரும் மக்களவை தேர்தல் மூலம் வருவதற்கு டிடிவி தினகரனின் கட்சிக்கு வாய்ப்புள்ளது,'' என்று கூறினார்.

''மக்கள் மற்றும் தொண்டர்கள் ஆகியோரின் மனநிலையை புரிந்தவிதமாக அவரது தேர்தல் பிரசாரம் அமைந்து வருகிறது'' என்று கூறிய சுரேஷ்குமார், டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் அதிமுகவின் வாக்குவங்கியை அவர் நிச்சயமாக பாதிக்க வாய்ப்புண்டு என்று தெரிவித்தார்.

வட தமிழ்நாட்டில் சில தொகுதிகளில் செல்வாக்குப்பெற்ற அமமுக தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளில் தவிர்க்கமுடியாத சக்தியாக திகழ்கிறது. மேற்கு பகுதியில் மட்டும் தினகரனின் கட்சிக்கு பெரிய செல்வாக்கு இல்லை என்று சுரேஷ்குமார் குறிப்பிட்டார்.

''அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளையும் சாராத வாக்காளர்கள் அமமுகவை ஆதரிக்க வாய்ப்புண்டு. தேனி தொகுதியில் அக்கட்சியின் சார்பாக தங்கதமிழ்செல்வன் போட்டியிடுகிறார். இங்கு காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவனும், அதிமுகவின் சார்பில் ரவீந்திரநாத் குமாரும் போட்டியிடுகின்றனர்'' என்றார் அவர்.

''தேனி தொகுதியில் மும்முனைப்போட்டி இருந்தாலும், தற்போதைய நிலையில் அதிமுக மற்றும் அமமுக இடையேதான் பிரதான போட்டி நிலவுகிறது,'' என்று மேலும் கூறினார்.

''சட்டமன்ற இடைத்தேர்தல் நடக்கவுள்ள 18 தொகுதிகளில் தஞ்சாவூர், திருவாரூர், ஆண்டிபட்டி, பாப்பிரெட்டிபட்டி ஆகிய தொகுதிகளில் அமமுக கட்சிக்கு செல்வாக்கு இருப்பதாக கருதப்படுகிறது,'' என்று அவர் கூறினார்.

''வரும் மக்களவை தேர்தலில் ஓரிரு தொகுதிகளில் வெல்வதற்கு அமமுக முயற்சி செய்யலாம். டிடிவி தினகரனின் நோக்கம் பெரும்பாலும் அதிமுகவின் வாக்குவங்கியில் கணிசமான வாக்குகளை பெற்று அக்கட்சியை வீழ்த்தி மக்களவை தேர்தலுக்கு பிறகு தனக்கான அங்கீகாரத்தை கட்சியில் பெறுவதாகத்தான் இருக்கும் என்பது என் கருத்து'' என்று சுரேஷ்குமார் தெரிவித்தார்.

''2019 மக்களவை தேர்தலில் குறிப்பிட்ட அளவில் வாக்கு சதவீதம் பெற்றால் டிடிவி தினகரன் தவிர்க்கமுடியாத சக்தியாக அதிமுகவில், தமிழக அரசியலிலும் பார்க்கப்பட வாய்ப்புண்டு. அதனை நோக்கியே அவர் நகர்வதாக எண்ணுகிறேன்'' என்று மேலும் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்