மனித குல வரலாற்றை கேள்விக்குள்ளாக்கும் ட்ராச்சிலோஸ் காலடித் தடங்கள்

Webdunia
வியாழன், 21 அக்டோபர் 2021 (10:26 IST)
இந்த சர்ச்சைக்குரிய காலடித்தடங்கள் மனித இனத்தின் தோற்றம் பற்றி நாம் அறிந்த வரலாற்றுக்கு சவால் விடுகின்றன.
 
கிரேக்க தீவான கிரீட்டில் தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்ட காலடித் தடங்களின் தொகுப்பு, மனித இனத்தின் தோற்றம் குறித்த வியப்பான கேள்விகளையும் - பெரும் சர்ச்சையையும் எழுப்புகிறது.
 
ட்ராச்சிலோஸ் காலடித் தடங்கள் என்று அறியப்படும் இந்த தடங்களை போலந்து புதைபடிவ ஆராய்ச்சியாளர் ஜெரார்ட் ஜியர்லின்ஸ்கி 2002ஆம் ஆண்டு கண்டுபிடித்தார். ஆனால், அவை இந்த வகையான மனித மூதாதையர்களின் பழமையான ஆதாரம் என்று ஒரு புதிய ஆய்வு கூறுகிறது.
 
அக்டோபர் 11ஆம் தேதியன்று ஒரு சர்வதேச குழுவால் 'சயின்டிஃபிக் ரிப்போர்ட்ஸ்' சஞ்சிகையில் வெளியிடப்பட்ட இந்த ஆராய்ச்சி, ஹோமினின்கள் (நவீன மனிதர்கள், அழிந்துபோன மனித இனங்கள் மற்றும் நமது உடனடி மூதாதையர்கள் அடங்கிய குழுவை விவரிக்கப் பயன்படுத்தப்படும் சொல்) வேறு எங்கும் தோன்றுவதற்கு முன் ஆப்ரிக்காவில் தோன்றி, பரிணாம வளர்ச்சி அடைந்தனர் என்று பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கோட்பாட்டிற்கு சவால் விடுக்கிறது.ஆப்ரிக்காவுக்கு வெளியே
'மனிதகுலத்தின் தொட்டில்' ஆப்ரிக்காவே என்ற கருதுகோளை புதைபடிவ ஆராய்ச்சியாளர்கள் பரவலாக ஒப்புக்கொண்டுள்ளனர்.
 
இந்த கோட்பாட்டின்படி, இரு மில்லியன் ஆண்டுகளுக்கு குறைவான காலத்தில், உலகின் பிற பகுதிகளுக்கு நடந்த 'பெரும் இடப்பெயர்வு'க்கு முன் மனிதகுலம் அந்த கண்டத்தில் மட்டுமே உருவானது.
 
ஆனால், ஸ்வீடனின் புதைவடிவ ஆராய்ச்சியாளர் பெர் அஹல்பெர்க் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் குழு, இந்த காலவரிசைக்கு சவால் விடுகிறது: ட்ராச்சிலோஸ் காலடித்தடம் ஆறு மில்லியன் ஆண்டுகள் பழமையானது என அவர்கள் கூறுகின்றனர்.
 
1976 ஆம் ஆண்டில் தான்சானியாவில் கண்டுபிடிக்கப்பட்ட லாடோலி கால்தடங்கள் - நடக்க பயன்படுத்தப்பட்ட மனிதனைப் போன்ற பாதத்தின் முதன்மையான நேரடி சான்று என்று கருதப்படுவதை விட, கிட்டத்தட்ட 2.5 மில்லியன் ஆண்டுகள் பழமையான தடங்களாக இது இருக்கும்.
 
ஆப்பிரிக்காவின் கண்டுபிடிப்புகள் நம் "மனித இன மரத்தை" ஒருங்கிணைப்பதில் முக்கியமானவை.
 
காலடித் தடங்களைப் போல, கடந்த 100 ஆண்டுகளில் ஆப்பிரிக்காவில் மனிதனுக்கு முந்தைய புதைபடிவ கண்டுபிடிப்புகள் பலவும் உள்ளன. இதில் ஏழு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் வாழ்ந்ததாக கருதப்படும் சஹேலாந்த்ரோபஸின் (Sahelanthropus) மண்டை ஓடும் அடங்கும்; தற்போது அறியப்படும் மிகப் பழமையான ஹோமினின் இதுவாகும்.
 
ஒப்பீட்டு அளவில், ஐரோப்பாவில் இதுபோன்ற எலும்பு படிமங்களின் கண்டுபிடிப்புகள் மிகக் குறைவு.
 
க்ரீட்டில் காலடித் தடங்களை விட்டுச் சென்றது எது?
 
பெர் அஹ்ல்பெர்க், 2017 ஆம் ஆண்டில் ட்ராச்சிலோஸ் காலடித் தடம் பற்றிய முதல் அறிக்கையை வெளியிட்ட குழுவில் ஒருவராக இருந்தார். அக்டோபர் 2021-ல் நடத்தப்பட்ட ஆய்வில், அவற்றின் வயது 5.7 மில்லியன் ஆண்டுகளில் இருந்து 6.05 மில்லியனாக மாற்றியமைத்து அச்சிடப்பட்ட புவியியல் பகுப்பாய்வு என்கிற ஆய்வு.
 
அஹ்ல்பெர்க் மற்றும் அவரது சக ஆராய்ச்சியாளர்கள், அந்த காலடித் தடம் கொரில்லாக்கள் மற்றும் சிம்பன்ஸிகள் போன்ற விலங்குகளின் காலடிகளைப் போல் இல்லாமல், ஹாலிக்ஸ் (பெருவிரல்) மற்ற விரல்களுக்கு நெருக்கமாகத் தோன்றும் வகையில், ஹோமினின் காலடித் தடங்களை ஒத்திருப்பதாக தங்கள் ஆய்வில் முடிவு செய்தனர்.
 
"மனிதரல்லாத குரங்கின் காலடித் தடங்கள் மிகவும் வித்தியாசமாகத் தெரிகின்றன; அதன் கால் ஒரு மனிதக் கையைப் போன்ற வடிவத்தில் உள்ளது, பெருவிரல் கால்விரலின் பக்கவாட்டில் தாழ்வாக இணைக்கப்பட்டு ஒட்டிக்கொண்டுள்ளது" என்று அவர் பிபிசியிடம் கூறினார்.
 
"நம் சக விலங்குகளுடன் ஒப்பிடுகையில், நம் பெருவிரல்கள் பாதத்தின் நீண்ட அச்சிற்கு ஏற்ப உள்ளன - அவை ஒரு பக்கமாக துருத்திக் கொண்டு இல்லை."
 
ஆனால், சில புதைபடிவ ஆராய்ச்சியாளர்களால் இக்கண்டுபிடிப்புகள் சந்தேகத்துடன் பார்க்கப்படுகிறது.
 
விமர்சகர்கள் தடங்களை பகுப்பாய்வு செய்ய பயன்படுத்தப்படும் முறைகளைக் குறித்து கேள்வி எழுப்பினர். மேலும், சிலர் அவை உண்மையான கால்தடங்களா என்று கூட கேட்டனர்.
 
இங்கிலாந்தில் உள்ள போர்ன்மவுத் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முன்னணி காலடித் தட நிபுணர் பேராசிரியர் மேத்யூ பென்னட், கிரீஸில் உள்ள தடங்களைப் படிக்கும் குழுவில் ஒருவராக இருந்தார். ஆனால் அவரும் அவரது மதிப்பீட்டில் எச்சரிக்கையாக இருக்கிறார்.
 
"அவை மிகவும் புதிரான ஆர்வத்தைத் தூண்டக் கூடிய புதைபடிவ காலடித் தடங்கள்; அநேகமாக ஒரு இரு கால்களைக் கொண்டு நடக்கும் விட்டுச் சென்ற தடமாக இருக்கலாம், சில வகையான மனிதக் குரங்குகளாக இருக்கலாம்" என பேராசிரியர் பென்னட் பிபிசியிடம் விளக்கினார்.
 
"காலடித் தடங்கள் மனித மரபுவழி வந்தவை என்றால் அது மற்றொரு கதை."
 
பென்னட்டின் தயக்கத்தை புரிந்து கொள்ள, ஐரோப்பாவில் ஒரு ஹோமினின் புதைபடிவ எலும்பு கூட இல்லாததை நாம் மீண்டும் நினைவில் கொள்ள வேண்டும்.
 
மேலும், மனித பரிணாமத்தின் காலவரிசை ஒரு எளிய விவகாரத்திலிருந்து வெகு தொலைவில் உள்ளது.
 
பெரிய மனிதக் குரங்குகள் - ஒராங்குட்டான்கள், கொரில்லாக்கள், சிம்பன்ஸிகள் மற்றும் மனிதர்கள் - தோராயமாக 23 மில்லியன் முதல் 5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, மியோசீன் என்று அறியப்பட்ட காலத்தில் தோன்றி பன்முகப்பட்டதாக புதைபடிவ ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
 
ஆனால், மனிதர்கள் எப்போது அவைகளிடமிருந்து பிரிந்து வந்தனர் என்கிற விஷயத்தில் அவர்கள் மத்தியில் குறைவான அளவுக்கே ஒருமித்த கருத்து நிலவுகிறது.
 
மனிதர்கள் அல்லாத பெரிய குரங்குகள் ஐரோப்பாவில் சுற்றித் திரிந்ததற்கான ஆதாரங்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். எனவே, அவை க்ரீட்டில் காலடித் தடங்களை விட்டுச் சென்றிருக்கலாம் என இங்கிலாந்தில் உள்ள லிவர்பூல் பல்கலைக்கழகத்தின் உயிரியல் மானுடவியல் நிபுணர் ராபின் குரோம்டன் விளக்குகிறார்.
 
"தடங்கள் நிச்சயமாக ஹோமினினாக இருக்கலாம், அது நிச்சயமாக உற்சாகமளிக்கிறது. ஆனால், இன்னும் மேற்படி செய்யவேண்டிய ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகள் மட்டுமே ஒரு பெரிய கேள்விக்குறியைத் தீர்க்கக்கூடும்", என குரோம்ப்டன் பிபிசியிடம் கூறினார்.
 
வேறு வகையில் கூறுவதானால், ஐரோப்பாவில் அதிக எலும்புகள் மற்றும் காலடித் தடங்களை கண்டுபிடிக்க வேண்டும்.
 
ட்ராச்சிலோஸ் காலடித் தடங்கள் எவ்வளவு முக்கியம்?
 
சுமார் 300,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்ரிக்காவில் நம் இனமான 'ஹோமோ சேபியன்ஸ்' உருவானது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என அஹ்ல்பெர்க் கூறுகிறார். அவரது ஆர்வம் நம் வரலாற்றில் மிகவும் முந்தைய காலகட்டத்தில் உள்ளது.
 
இது (ஹோமோ சேபியன்ஸ் ஆப்பிரிக்க வம்சாவளி) நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது, "என்று அவர் கூறுகிறார்.
 
"இங்குள்ள கேள்வி என்னவென்றால், முழு மனித மரபுவழியும் இன்னும் முன்னதாகவே ஆப்ரிக்காவில் தோன்றியதா என்பதுதான்."
 
"ஒருவேளை அதுவும் இல்லாமல், எங்கள் ஆராய்ச்சி கூறுவதுபோல, ஆரம்பகால மனித மூதாதையர்கள் தெற்கு ஐரோப்பாவிலும் கிழக்கு ஆபிரிக்காவிலும் சுற்றி திரிந்திருக்கலாம்." என அஹ்ல்பெர்க் கூறுகிறார்.
 
'அவுட் ஆப் ஆப்ரிக்கா' கருத்தை மறுப்பதற்கு பதிலாக, நாம் தற்போது நம்புவதை விட முன்னதாகவே நம் முன்னோர்கள் ஐரோப்பாவில் பரவியிருக்கலாம் என வேலை பார்ப்பதாக அஹ்ல்பெர்க் கூறுகிறார்.
 
"நாங்கள் சொல்வது என்னவென்றால், இந்த ஆரம்பகால ஹோமினின்களின் சுற்றிதிரிந்த வரம்பு மக்கள் நினைப்பதை விட பரந்துபட்டதாக இருக்கலாம்."
 
 
2017 ஆம் ஆண்டில், ட்ராச்சிலோஸ் காலடித் தடம் பற்றிய முதல் அறிக்கை வெளியிடப்பட்ட அதே ஆண்டில், டுபிங்கன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜெர்மன் புதைபடிவஆராய்ச்சியாளர் மடேலைன் போஹ்மே தனது சொந்த அறிக்கை மூலம் உலகை திரும்பி பார்க்க வைத்தார்.
 
மனிதர்களுக்கு சிம்பான்ஸிகளுக்கும் "பொதுவான கடைசி மூதாதையரின்" கண்டுபிடிப்பு ஆப்பிரிக்காவில் இல்லை, ஐரோப்பாவில் கண்டுபிடிக்கப்பட்டது என்று அவர் அறிவித்தார்.
 
கிரேகோபிதேகஸ் (Graecopithecus), பால்கன் பகுதியில் 7.18 மற்றும் 7.25 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக போஹ்மே மற்றும் ஆராய்ச்சியாளர்கள் குழு கூறினர். இது தற்போது நிமிர்ந்து நடக்கும் ஆரம்பகால மனித மூதாதையாக கருதப்படும் சஹேலாந்த்ரோபஸை (Sahelanthropus) விட பழமையானது.
 
இன்றுவரை, கிரேகோபிதேகஸின் எச்சங்களில் ஒரு பல் மற்றும் தாடை எலும்பைக் கொண்டுள்ளது - அது கிரீட்டில் இருந்து 250 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிரேக்க நாட்டில் கண்டுப்பிடிக்கப்பட்டது.
 
"எங்கள் ஆய்வுகள் ஐந்து மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மனித பரிணாம வரலாற்றை சவால் விடுவில்லை, ஆனால், அந்த நேரத்திற்கு முன்பு என்ன நடந்தது என்பதைதான் ஆராய்கிறது", என போஹ்மே வாதிடுகிறார்.
 
ஐயமும் அறிவியலும்
 
ட்ராச்சிலோஸ் காலடித் தடங்களால் கொண்டுவரப்பட்ட சர்ச்சை, விஞ்ஞானிகள் எப்படி ஒரு வெளிப்புற கருத்தை எதிர்கொள்கின்றனர் என்கிற கேள்விகளையும் எழுப்புகிறது.
 
ட்ராச்சிலோஸ் காலடித் தடங்களைப் பற்றி அவருக்கு குறைபாடு இருக்கின்றபோதிலும், சக ஆராய்ச்சியாளர்கள் ஹோமினின் தடங்கள் நிராகரிக்கப்பது மனித இனத்தின் தோற்றம் பற்றிய ஆய்வுக்கு உதவாது என்பதில் உறுதியாக இருக்கிறார் ராபின் குரோம்ப்டன்.
 
"அவை விசாரிக்கப்பட வேண்டும், வெறுமனே நிராகரிக்கப்படக் கூடாது. விஞ்ஞானிகள் திறந்த மனதுடன் இருக்க வேண்டும்," என்று அவர் கூறுகிறார்.
 
மனித இனத்தின் தோற்றம் பற்றிய கோட்பாடுகளில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என குறிப்பிட்டு, மடேலைன் போஹ்மே ஒப்புக்கொள்கிறார்.
 
உதாரணமாக, 2.8 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டாங் (Taung) குழந்தை குழந்தையின் எச்சங்கள் தென்னாப்பிரிக்காவில் 1924ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டபோது, அந்த ஆப்பிரிக்க கருத்து உடனடியாக பரவலாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
 
"வரலாற்றில் மனித இனம் ஆப்பிரிக்காவை விட உலகின் பல்வேறு பகுதிகளில் தோன்றியிருக்கலாம் என்று நம்பப்பட்ட காலங்களும் இருந்தன," என்று கூறுகிறார்.
 
ந்தேகம் இல்லாத அறிவியல் நல்ல அறிவியல் அல்ல, ஆனால் மக்கள் வாதங்களுக்கு தயாராக இருக்க வேண்டும். ஆம், நமக்கு அதிக ஆய்வும் அதிக கண்டுபிடிப்புகளும் தேவை, ஆனால் சக ஆராயச்சியாளர்கள் வெறுமனே எங்கள் கண்டுபிடிப்புகளை நிராகரிப்பதை பார்க்க முற்றிலும் வேறாக இருக்கிறது".
 
அஹ்ல்பெர்க் அவரது குழுவால் கூறப்பட்ட ஆய்வுகள் அசாதாரணமானவை என்று சக ஊழியர்கள் பரிந்துரைப்பதால், அவர் குறிப்பாக கோபமடைந்ததாக தெரிகிறது.
 
"அவுட் ஆஃப் ஆப்பிரிக்கா கோட்பாட்டை மக்கள் தீவிரமாக பற்றி கொண்டதால்தான், எங்கள் ஆய்வுகள் அப்படி பார்க்கப்படுகின்றன," என்று அவர் நம்புகிறார்.
 
"இந்த சூழ்நிலையில், புதைபடிவ ஆராய்ச்சி சமூகம் இப்போது என்ன சொல்லப்போகிறது என்று நான் கவலைப்படவில்லை. நாங்கள் ஆதாரங்களை முன்வைத்து எங்கள் ஆய்வை செய்துள்ளோம்."
 
"மக்களின் நம்பகத்தன்மையை எதிர்த்துப் போராடுவதில் துளியும் ஆர்வம் இல்லை," என்று அவர் மேலும் கூறினார்.
 
காலடித் தடம் திருட்டு
 
ட்ராச்சிலோஸ் தடங்கள் நிச்சயமாக விஞ்ஞானிகளைத் தாண்டி பலரின் ஆர்வத்தை தூண்டியுள்ளன.
 
2017 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட சில வாரங்களுக்குப் பிறகு, எட்டு காலடித் தடங்கள் பாறையிலிருந்து பெயர்த்து எடுக்கப்பட்டு திருடப்பட்டன.
 
பின்னர், ஓர் உள்ளூர் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் கிரேக்க போலீசாரால் கைது செய்யப்பட்டு புதைபடிவங்கள் மீட்கப்பட்டன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்