காஷ்மீரில் ஒரே நாளில் நடந்த மூன்று கொலைகள் - அச்சத்தில் மக்கள்

Webdunia
புதன், 6 அக்டோபர் 2021 (15:33 IST)
காஷ்மீரில் செவ்வாய்க்கிழமை தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படுவோரால் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கொல்லப்பட்டவர்களில் உள்ளூரைச் சேராத வர்த்தகர் ஒருவரும் அடங்குவார்.

கடந்த வார தொடக்கத்தில், அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டனர். பிரபல மருந்தக உரிமையாளரான 68 வயதான மாக்கன் லால் பிந்த்ரு, செவ்வாய்க்கிழமை மாலை அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று போலீசார் கூறுகின்றனர்.
 
ஸ்ரீநகரில் உள்ள இக்பால் பூங்காவில் அமைந்திருக்கும் தனது கடையில் இருந்தபோது அவர் சுடப்பட்டார். இதையடுத்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது.
 
"மாக்கன் லாலின் உடலை பல துப்பாக்கி தோட்டாக்கள் துளைத்திருந்தன. அவர் இறந்த பிறகு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார்," என்று ஸ்ரீநகரில் உள்ள SMHS மருத்துவமனையின் மருத்துவ மேற்பார்வையாளர் டாக்டர் கன்வல்ஜித் சிங் கூறினார்.
 
மாக்கன் லாலின் மருந்து கடை மீது தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கியதாக போலீஸார் கூறுகின்றனர். அந்த பகுதி முழுவதும் சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாகவும், தீவிரவாதிகளை தேடும் பணி நடந்து வருவதாகவும் போலீசார் கூறுகின்றனர்.
 
மத்திய அமைச்சர்களின் வருகை
 
இந்த கொலை நடந்த சில நிமிடங்களில் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படுபவர்கள், ஒரு வர்த்தகரை சாலையோரத்தில் சுட்டனர், அவரும் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
 
இந்த சம்பவம் ஸ்ரீநகரில் உள்ள லால் பஜாரில் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். அக்டோபர் 2 ம் தேதி, அப்துல் மஜித் குரு மற்றும் முகம்மது ஷாபி தார் ஆகியோர் அடையாளம் தெரியாத துப்பாக்கி ஏந்தியவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
 
மூன்றாவது சம்பவம், கொலை ஸ்ரீநகரிலிருந்து 60 கிமீ தொலைவில் உள்ள பாந்திபோரா மாவட்டத்தில் நடந்தது. இந்த தாக்குதலில் சுமோ டிரைவர்கள் சங்கத்தின் தலைவர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். தாக்குதல் நடந்தபோது அவர் தனது உறவினரை சந்திக்க சென்றதாக போலீசார் கூறுகின்றனர். போலீசார் அப்பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்த மூன்று கொலைகளும் ஒரு மணி நேரத்திற்குள்ளாக நடந்துள்ளது.
 
நரேந்திர மோதி அமைச்சரவையின் உயர்மட்ட அமைச்சர் ஒருவர் ஏற்கனவே காஷ்மீரில் உள்ளார். உள்துறை அமைச்சக குழுவும் காஷ்மீர் செல்ல இருக்கிறது. இந்த ப்பயணத்தின்போது, பாதுகாப்பு நிலைமை மறு ஆய்வு செய்யப்படும். ஜம்மு காஷ்மீரின் அனைத்து முக்கிய கட்சிகளும் இந்த கொலைகளை கண்டித்துள்ளன. எனினும், பள்ளத்தாக்கில் வன்முறை முடிவுக்கு வந்துவிட்டதாக ராணுவம் கூறி வருகிறது. ஆனால் சமீபத்திய நிகழ்வுகள் மீண்டும் அச்சத்தின் சூழலை உருவாக்கியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்