"இலங்கையில் எந்தவொரு மாகாண சபையிலும் தமிழர் பிரதம செயலராக இல்லை"

Webdunia
புதன், 7 செப்டம்பர் 2022 (21:33 IST)
ஆரம்பத்தில் ஒவ்வொரு மாணத்துக்கும் ஒவ்வொரு 'மாகாண சபை' உருவாக்கப்பட்ட போதிலும், தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் தற்காலிகமாக இணைக்கப்பட்டு, 'வட கிழக்கு மாகாண சபை' உருவாக்கப்பட்டதோடு, 1988ஆம் ஆண்டு அந்த மாகாண சபை'க்கான தேர்தல் நடத்தப்பட்டது.
 
பின்னர் உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கிணங்க வடக்கு - கிழக்கு மாகாணங்களின் தற்காலிக இணைப்பு 2007ஆம் ஆண்டு ரத்துச் செய்யப்பட்டது. இதன் காரணமாக வடக்கும் கிழக்கும் தனித்தனி மாகண சபைகளாகின.
 
இதனையடுத்து 2008ஆம் ஆண்டு கிழக்கு மாகண சபைக்கான தேர்தல் முதன் முதலாக நடத்தப்பட்டது. ஆயினும் வடக்கு மாகாண சபைக்கான முதலாவது தேர்தல் 2013ஆம் ஆண்டுதான் நடைபெற்றது.
 
இந்த வகையில் இலங்கையில் 09 மாகாணங்களுக்குமென, 09 மாகாண சபைகள் உள்ளன. இவை அனைத்தினதும் பதவிக் காலங்கள் நிறைவடைந்தமையினால், அனைத்து மாகாண சபைகளும் கலைக்கப்பட்டு - அவற்றின் நிருவாகங்கள், மாகாண ஆளுநர்களின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.
 
தமிழர் எவரும் பிரதம செயலாளர்களாக இல்லை
 
நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கூறியமை போன்று, தற்போது இலங்கையின் எந்தவொரு மாகாண சபையினதும் பிரதம செயலாளர்களாக தமிழர்களோ அல்லது முஸ்லிம்களோ இல்லை.
 
ஆனால், கடந்த காலங்களில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளின் பிரதம செயலாளர்களாக தமிழர்கள் பதவி வகித்துள்ளனர். உதாரணமாக வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர் பதவியில் பத்தி நாதன், வியஜலட்சுமி மற்றும் ரங்கராஜா போன்றோர் இருந்ததாக இலங்கை நிருவாக சேவையிலுள்ள மூத்த அதிகாரி ஒருவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். இவர் தனது அடையாளத்தை வெளியிட வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார்.
 
அதேபோன்று இணைந்த வடகிழக்கு மாகாண சபையில் கிருஷ்ணமூத்தி, கிழக்கு மாகாண சபையில் பாலகிருஷ்ணன் மற்றும் கணேசநாதன் ஆகியோரும் பிரதம செயலாளர்களாகப் பதவி வகித்துள்ளனர் எனவும், அந்த அதிகாரி குறிப்பிட்டார்.
 
மாகாண சபை பிரதம செயலாளர் பதவி என்றால் என்ன?
 
மாகாண சபையொன்றின் நிருவாகத்துக்கு அச் சபையின் பிரதம செயலாளர் பொறுப்பாக இருக்கின்றார். இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகள் இந்தப் பதவிக்கு நியமிக்கப்படுவர்.
 
பிரதம செயலாளரின் கீழ் - சில செயலாளர்களும் பிரதிப் பிரதம செயலாளர்களும் பணியாற்றுகின்றனர்.
 
அந்த வகையில் பிரதம செயலாளரின் கீழ் - முதலமைச்சின் செயலாளர், சுகாதார அமைச்சின் செயலாளர், கல்வியமைச்சின் செயலாளர், விவசாய அமைச்சின் செயலாளர், மாகாண சபை செயலாளர் மற்றும் ஆளுநரின் செயலாளர் ஆகியோரும். நிதிக்கான பிரதிப் பிரதம செயலாளர், திட்டமிடலுக்கான பிரதிப் பிரதம செயலாளர், பொறியில் துறைக்கான பிரதிப் பிரதம செயலாளர், நிருவாகத்துக்கான பிரதிப் பிரதம செயலாளர் மற்றும் ஆளணி மற்றும் பயிற்சிக்கான பிரதிப் பிரதம செயலாளர் ஆகியோரும் பணியாற்றுகின்றனர்.
 
தமிழ் மக்கள் பெரும்பான்மையாகவுள்ள வடக்கின் - மாகாண சபையினுடைய பிரதம செயலாளராக சிங்கள சமூகத்தைச் சேர்ந்த எஸ்.எம். சமன் பந்துலசேன என்பவர் பதவி வகிக்கின்றார். அதேபோன்று தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் கிழக்கின் மாகாண சபையின் பிரதம செயலாளராக சிங்கள சமூகத்தைச் சேர்ந்த துசித பி வணிகசிங்க பணியாற்றுகின்றனர்.
 
 
இந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் முன்வைத்த குற்றச்சாட்டு குறித்து - கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கே.எம். ஜவாத் பிபிசி தமிழுக்கு கருத்து தெரிவிக்கையில், "தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் - வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு சேவை மூப்புக் குறைந்த சிங்களவர்கள் பிரதம செயலாளர்களாக நியமிக்கப்படுகின்றமை இனவாத அடிப்படையிலான செயற்பாடாகும்," என்கிறார்.
 
 
இலங்கை நிருவாக சேவையில் - நீண்ட கால சேவை மூப்பைக் கொண்ட தமிழ், முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் இருக்கும் நிலையில், அவர்களை விடவும் குறைந்த சேவை மூப்பைக் கொண்ட சிங்களவர்கள் நியமிக்கப்படுவது நியாயமற்றது எனவும் அவர் கூறினார்.
 
"வவுனியா அரசாங்க அதிபராக கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில் ஐ.எம். ஹனீபா என்பவர் நியமிக்கப்பட்டார். அவர் 30 ஆண்டுகளுக்குப் பின்னர் முஸ்லிம் சமூகத்திலிருந்து அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஆனால், ஆட்சிக்கு வந்த கோட்டாபய அரசாங்கம் அவரை அந்தப் பதவியிலிருந்து நியாயமற்ற வகையில் நீக்கியது. அதுமட்டுமன்றி, அவரை விடவும் நிருவாக சேவையில் குறைந்த அனுபவத்தைக் கொண்ட சிங்களவர் ஒருவரை, அந்தப் பதவிக்கு கோட்டா அரசாங்கம் நியமித்தது. இப்படி, தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் நீண்டகாலமாகவே அநீதியிழைக்கப்பட்டு வருகிறது" எனவும் ஜவாத் கூறினார்.
 
தகுதியானவர்களுக்கு அரச சேவையில் முக்கிய பதவிகள் வழங்கப்படுவதை விடவும், இனரீதியாகவே வழங்கப்படுவதாக தெரிவித்த ஜவாத்; இந்த நிலை மாற வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்