இலங்கை யானை: சமூக ஊடகங்களில் வைரலான புகைப்படம் - கானுயிரின் கதை

Webdunia
ஞாயிறு, 18 ஆகஸ்ட் 2019 (16:16 IST)
உடல்நலம் குன்றி, மெலிந்துபோன வயதான பெண் யானை ஒன்றை பௌத்த உற்சவத்தில் பங்கேற்க வைத்தது சமூக ஊடகங்களில் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கும் நிலையில், அதை நேர்த்திக்கடன் செலுத்தவே உற்சவத்துக்கு அழைத்துச் சென்றதாகவும், இனிவரும் காலங்களில் அதை உற்சவங்களில் பங்கேற்க வைப்பதில்லை எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் யானை உரிமையாளர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டுகள் சொல்லப்பட்டது போல் இந்த யானை உற்சவத்தில் 10 தினங்கள் தொடர்ச்சியாக பயன்படுத்தப்படவில்லை என்று அதன் உரிமையாளர் கூறியிருக்கிறார்.

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் இடம்பெறும் பௌத்த உற்சவம் இலங்கையில் மிக முக்கியமானதொரு உற்சவமாக கருதப்படுகின்றது.

பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் பங்குப்பற்றுதலுடன் இந்த நிகழ்வு ஒவ்வொரு வருடமும் மிகவும் கோலாகலமான கொண்டாடப்பட்டு வருகின்றது.

குறிப்பாக புத்தரின் புனித சின்னங்கள் வீதி ஊர்வலமாக கொண்டு செல்லப்படுவது இந்த உற்சவத்தின் பிரதான நிகழ்வாக காணப்படுகின்றது.

இந்த உற்சவத்தை அலங்கரிக்கும் வகையில் சிங்கள பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், அலங்கரிக்கப்பட்ட யானைகள் என பல்வேறு அம்சங்கள் இடம்பெறுகின்றமை வழமையாகும்.

இந்த நிலையில், இந்த ஆண்டு உற்சவத்தில் கலந்துக்கொண்ட 'டிக்கிரி" என்ற பெயரை கொண்ட யானை குறித்து சமூக வலைத்தளங்களில் கடந்த சில தினங்களாக அதிகளவில் பேசப்பட்டு வருகின்றது.

டிக்கிரி என்றழைக்கப்படும் இந்த பெண் யானைக்கு சுமார் 70 வயது என கூறப்படுகின்றது.
மிகவும் வயதான நிலையில் காணப்படும் இந்த யானை தொடர்பில் தாய்லாந்தை தளமாகக் கொண்டு இயங்கும் விலங்குகள் நல செயற்பாட்டாளர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சில படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருந்தனர்.

அத்துடன், உற்சவத்தின்போது பயன்படுத்தப்படும் அதிக சத்தத்துடனான ஒலிபெருக்கிகள், தீ பந்தங்கள் மற்றும் புகை ஆகியவற்றுடன் இந்த யானை பல கிலோ மீட்டர் தூரம் நடப்பது மிகவும் சிரமமான ஒன்று என தாய்லாந்து விலங்குகள் நல செயற்பாட்டாளர்கள் குற்றம் சாட்டினர்.

வயதான நிலையில், சுகயீனமுற்றுள்ள இந்த யானை தொடர்பில் கவனம் செலுத்தி, அதனை எதிர்வரும் உற்சவங்களில் பங்குப்பற்றுவதனை நிறுத்துமாறும் விலங்குகள் நல செயற்பட்டாளர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த விடயம் தொடர்பில் யானைகளுக்கு பொறுப்பான சங்கத்தின் செயலாளர் தம்சிறி பண்டார கருத்து வெளியிட்டிருந்தார்.

இந்த யானை சுமார் 50 வருடங்கள் கண்டி ஸ்ரீ தலதா மாளிகை உற்சவத்தில் கலந்துக்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.

இந்த நிலையில், 2018ஆம் ஆண்டு உற்சவத்தின் பின்னர் டிக்கிரி யானையின் உடல் நலம் குன்றியதாகவும், அதனை குணப்படுத்தும் வகையில் விஷ்ணு கடவுளுக்கு நேர்த்தி கடன் வைக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

யானையின் உரிமையாளர் இந்த நேர்த்தி கடனையை செலுத்த வேண்டும் என தம்மிடம் கோரிக்கை விடுத்த நிலையிலேயே, இந்த யானை உற்சவத்தில் பங்குப்பற்றியதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

இந்த யானை நோய்வாய் பட்டிருந்த போது, அது குணமானால் அதை பெரஹரவில் ஒரு நாள் கலந்து கொள்ள வைப்பேன் என்று, தான் நேர்த்தி வைத்திருந்ததாகவும், அதற்கமைய வைத்தியர்களின் பரிசோதனைக்குப் பிறகே யானையை உற்சவத்துக்கு கொண்டு சென்றதாகவும் அவர் கூறியுள்ளார்.

டிக்கிரி யானைக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

டிக்கிரி யானை சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்க எந்தவொரு பிரச்சனையும் கிடையாது என மருத்துவர்கள் பரிந்துரை செய்தமையை அடுத்தே இந்த யானை உற்சவத்தில் கலந்துக்கொண்டதாகவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

டிக்கிரி யானையின் மீதுள்ள அன்பினால் இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்படவில்லை என கூறிய அவர், கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் நடத்தப்படும் உற்சவத்தில் கலந்துக்கொள்ளும் யானைகளை நிறுத்தும் சூழ்ச்சிக்காகவே இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

எவ்வாறாயினும், டிக்கிரி யானையை இனிவரும் காலங்களில் உற்சவங்களில் பங்குப்பற்றுவதனை நிறுத்துவதற்கு தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கண்டி விஸ்ணு தேவாலயத்திற்கு பொறுப்பான பஸ்நாயக்க நிலமே மகேந்திர ரத்வத்த தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்