சினிமா விமர்சனம்: தி நன்(The Nun)

சனி, 8 செப்டம்பர் 2018 (12:46 IST)
2016ல் வெளிவந்த The Conjuring 2 படத்தில் பேய் ஓட்டும் தம்பதியான எட் மற்றும் லோரைன் தம்பதி வாலக் என்ற ஒரு தீய சக்தியை எதிர்கொள்வார்கள். முடிவில் அந்த தீய சக்தி நரகத்திற்கு அனுப்பப்பட்டுவிடும். ஆனால், அதற்கு முன்பாக, அந்த வாலக் எப்படி இங்கே வந்தது? இந்தக் கேள்விக்கு விடையளிக்கும் கதைதான் The Nun. அதாவது The Conjuring - 2க்கு முன்பு நடக்கும் கதை.



1952. ருமேனியாவில் உள்ள கார்டா மடாலயம். அங்குள்ள இரு கன்னியாஸ்த்ரிகள் ஒரு புனிதப் பொருளைத் தேடிச் சொல்லும்போது, தீய சக்தி ஒருவரைக் கொன்றுவிட, மற்றொரு கன்னியாஸ்த்ரி தற்கொலை செய்துகொள்கிறார். இந்த விவகாரம் குறித்து விசாரிக்க, புர்கே என்ற பாதிரியாரையும் ஐரின் என்ற கன்னியாஸ்த்ரியையும் அங்கே அனுப்புகிறது வாட்டிகன் திருச்சபை.

ஆனால், அடுத்த நாள்தான் மடாலயத்தில் இருப்பவர்களுடன் பேச முடியும் என்று சொல்லப்படுகிறது. இதையடுத்து அந்த இரவில் பல பயங்கரமான சம்பவங்கள் நடக்கின்றன. பாதிரியார் புர்கே உயிரோடு புதைக்கப்படுகிறார். அவரை ஐரின் கஷ்டப்பட்டு மீட்கிறாள். அடுத்த நாள் மடாலயத்தின் உட்பகுதிக்குள் ஐரின் மட்டும் செல்கிறாள். அங்கிருக்கும் ஒவானா என்ற கன்னியாஸ்த்ரி, மடாலயத்தின் பின்னால் உள்ள மர்மத்தைச் சொல்கிறாள்.

அதாவது, அந்த மடாலயத்தைக் கட்டிய மன்னன், பேய்கள், தீய சக்திகளை எழுப்புவது போன்ற செயல்களில் ஆர்வம் கொண்டவன். அவனால், வாலக் என்ற தீய சக்தி எழுப்பப்பட்டுவிட, வாட்டிகனிலிருந்து வந்த படையினர் அதனை அடக்குகிறார்கள். ஆனால், உலகப் போரில் தேவாலயம் சேதமடைய வாலக் மீண்டும் வெளியே வந்துவிடுகிறது. இதனை ஏசுவின் ரத்தத்தால்தான் மீண்டும் நகரத்திற்குத் தள்ள முடியும். பல பயங்கர சம்பவங்களுக்குப் பிறகு புர்கேவும் ஐரினும் அதைச் சாதிக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு உதவ வரும் ஃபெரெஞ்சி என்ற இளைஞன் வாலக்கால் பிடிக்கப்படுகிறான். இந்த சம்பவத்திற்குப் பிறகுதான் The Conjuring -1 படத்தில் வரும் சம்பவங்கள் நடக்கின்றன.



The Conjuring பட வரிசையில், முதல் பாகத்திற்குப் பிறகு பெரும் அச்சத்தை ஏற்படுத்தும் படம் இதுதான். ஆனால், முந்தைய படங்களில் இருந்த பேய்ப் படங்களுக்கே உரிய லாஜிக் இதில் அவ்வப்போது தொலைந்துபோய்விடுகிறது. பல பலிகள், பூஜைகளுக்குப் பிறகு வெளியில் வரும் தீய சக்திகள், ரோம் படையினரால் மீண்டும் நரகத்திற்குள் தள்ளப்பட்டபிறகு, உலகப் போரின் குண்டு விழுந்து அவை நரகத்திலிருந்து மீண்டும் வருவதாக சொல்லப்படுவது ஏற்கும்படியாக இல்லை.

அதேபோல, தீயசக்தியான வோலக்கின் நோக்கம், அதன் சக்தி என்ன என்பதெல்லாம் சரியாக வரையறுக்கப்படவில்லை. ரோமிலிருந்து வரும் பாதிரியையும் கன்னியாஸ்த்ரியையும் துவக்கத்திலேயே கொல்வதற்குப் பதிலாக படம் நெடுக, வோலக் பல்வேறு ரூபங்களில் பயமுறுத்திக்கொண்டே இருக்கிறது. வேறு எதையும் செய்வதில்லை. படத்தின் உச்சகட்ட காட்சியில் மட்டுமே கொல்ல முயற்சிக்கிறது.

இது போன்ற அம்சங்களை கேள்விகேட்காமல் விட்டுவிட்டால், இந்த ஆண்டில் வெளிவந்த பேய்ப் படங்களிலேயே மிகவும் மிரட்டும் படம் இதுதான். படம் துவங்கியதிலிருந்து முடியும்வரை தொடர்ந்து பதற்றத்திலேயே வைத்திருக்கிறார்கள்.


படத்தில் பேயைவிட்டுவிட்டால், மொத்தமே மூன்று பாத்திரங்கள்தான் என்பது இன்னும் அச்சத்தைக் கூட்டுகிறது. அபெலின் பின்னணி இசை பார்வையாளர்களின் அச்சத்தை இன்னும் அதிகரிக்கிறது. முக்கியப் பாத்திரங்களில் நடித்திருக்கும் மூன்று பேருமே பட்டையைக் கிளப்பியிருக்கிறார்கள். குறிப்பாக இளம் கன்னியாஸ்த்ரியாக வரும் டாய்ஸா ஃபார்மிகா மிகவுமே கவர்கிறார்.

சம்பவங்கள் நடக்கும் புனித கார்டா மடாலயம் இன்னொரு பாத்திரத்தைப் போலவே மனதில் பதிந்துவிடுகிறது.

திகில் பட ரசிகர்கள் தவறவிடக்கூடாத இன்னும் ஒரு பேய்ப் படம் இது.



 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்