வெள்ளத்தில் சிக்கியபின் மாமரத்தில் குழந்தையை ஈன்றெடுத்த தாய்

Webdunia
வியாழன், 4 ஏப்ரல் 2019 (21:01 IST)
அமெலியா மற்றும் அவரது மகள்
 
இடாய் சூறாவளி காரணமாக மத்திய மொசாம்பிக்கில் இருந்து வெள்ளத்தில் இருந்து தப்பி, மாமரத்தில் ஒரு பெண் குழந்தையை ஈன்றெடுத்திருக்கிறார்.
அமெலியா தனியாக வாழ்கிறார். கர்ப்பிணியாக இருந்த அவர் வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட போது தனது இரண்டு வயது மகனுடன் மாமரத்தின் கிளை ஒன்றை பற்றிக்கொண்டார். அந்தக் கிளை மீதே தனது பெண் குழந்தை சாராவை ஈன்றெடுத்தார்.
 
இரண்டு நாள்கள் கழித்து அக்கம்பக்கத்தினர் அக்குடும்பத்தை மீட்டது. இந்த சூறாவளியில் 700-க்கும் அதிகமானோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
 
இதே போன்றதொரு அதிசயத்தக்க நிகழ்வு 20 ஆண்டுகளுக்கு முன் தெற்கு மொசாம்பிக்கில் நடந்தது. அப்போது வெள்ளத்தில் சிக்கிய பெண் ஒருவர் ஒரு மரத்தில் தனது குழந்தையைப் பெற்றெடுத்தார்.
 
ரோசிதா மபியாங்கோ எனப் பெயரிடப்பட்ட அந்த குழந்தை பிறந்த 20 ஆண்டுகள் கழித்து சாராவும் மரத்தில் பிறந்திருக்கிறார்.
 
''நான் என்னுடைய இரண்டு வயது மகனுடன் வீட்டில் இருந்தேன், எந்தவித எச்சரிக்கையுடன் விடப்படாத நிலையில் தண்ணீர் எங்கள் வீட்டுக்குள் புகுந்தது. எனக்கு வேறு வாய்ப்புகளே இல்லை. அதனால் மரத்தில் ஏறிவிட்டேன். அங்கே எனது மகனுடன் தனியாக இருந்தேன்,'' என ஐநாவின் குழந்தைகள் முகமையான யுனிசெஃப்பிடம் அமெலியா தெரிவித்திருக்கிறார்.
 
அமெலியாவும் அவரது இரண்டு குழந்தைகளும் தற்போது பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். நல்ல உடல்நிலையுடன் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ரோசிதா மபியாங்கோவுக்கு தற்போது வயது 19. வெள்ளம் சூழ்ந்த நிலையில் ஒரு மரத்தில் இருந்த அவரும் அவரது தாயும் ஹெலிகாப்டர் மூலமாக மீட்கப்பட்ட செய்திகள் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்திருந்தது.
 
ரோசிதா மபியாங்கோ
உள்ளூர் நாளிதழான மெயில் மற்றும் கார்டியனிடம் பேசிய அவரது தாய் சோஃபியா '' எனக்கு நடந்த பிரசவம் மிகவும் வலிமிக்கதாக இருந்தது. நான் அழுதேன், கத்தினேன். சில சமயம் குழந்தை வெளியே வருவது போல தோன்றியது. ஆனால், ஒருவேளை பசியால் இப்படி கத்துகிறேனோ எனத் தோன்றியது. வெள்ளத்தில் பலர் தங்களைது உயிர் உடைமைகளை இழந்த கதை உண்டு. நானோ வெள்ளத்தில் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தேன்,'' என தனது கதையை பகிர்ந்துள்ளார்.
 
ரோசிதா மபியாங்கோ பிபிசியிடம் பேசுகையில் '' அரசு எங்களுக்கு உதவித்தொகை அளிப்பதாக உத்தரவாதம் கொடுத்திருந்தது. மேலும் அமெரிக்க அரசாங்கத்துக்கு மரியாதை செலுத்தும் விதமாக அமெரிக்காவுக்கு செல்ல நிதி உதவியளிப்பதாக கூறியது. ஆனால் எதுவும் நிறைவேற்றப்படவில்லை,'' என்கிறார்.
 
'' எனது படிப்புக்கு எனது அம்மாதான் செலவு செய்கிறார். நான் அரசாங்கத்திடம் இருந்து எந்த உதவியும் பெறவில்லை. சரி, எங்களுக்கு அரசு ஒரு வீடு கட்டித்தந்தது உண்மைதான். ஆனால் அது நல்ல நிலையில் இல்லை. மழை வந்தால் வீட்டில் நீர் கசியும். குறைந்தபட்சம் அரசு மராமத்து பணிக்காவது உதவ வேண்டும்'' என்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்