கணினியில் மால்வேர்: கூடங்குளம் அணு உலைக்கு பாதிப்பா?
புதன், 30 அக்டோபர் 2019 (18:23 IST)
அணு மின்சாரக் கழக கம்ப்யூட்டரில் தீங்கு ஏற்படுத்தும் நிரல்கள் (malware) இருந்ததை இந்திய அணு மின்சாரக் கழகம் ஒப்புக்கொண்டுள்ளது.
கூடங்குளம் அணு மின் நிலையத்தில் சைபர் தாக்குதல் ஏதும் நடத்தப்படவில்லையென நேற்று மறுப்புத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக மும்பையில் உள்ள இந்திய அணு மின்சாரக் கழகம் (NPCIL) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "என்பிசிஐஎல்லின் கம்ப்யூட்டர்களில் 'மால்வேர்' கண்டுபிடிக்கப்பட்டது சரிதான். செப்டம்பர் நான்காம் தேதி சிஇஆர்டி (Indian Computer Emergency Response Team) இதனைக் கண்டறிந்தவுடன் எங்களுக்குத் தெரிவித்தது," என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், "இந்த விவகாரத்தை உடனடியாக அணுசக்தித் துறை நிபுணர்கள் ஆய்வுசெய்தனர். இணையத்துடன் இணைக்கப்பட்டு, பாதிக்கப்பட்டிருந்த கம்ப்யூட்டர் ஒன்றை (அணுமின்நிலைய) பயனாளி ஒருவர் அணு உலையின் நிர்வாக ரீதியான வலைப்பின்னலுடன் இணைத்தார். இந்த நெட்வர்க்கிற்கும் அணு உலையின் முக்கியப் பணிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நெட்வர்க்குகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அணு உலையில் உள்ள கணிணிகள் இதனால் பாதிக்கப்படவில்லை என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது" என அந்த அறிக்கை கூறுகிறது.
என்பிசிஐஎல் வெளியிட்டிருக்கும் இந்த அறிக்கையில் எந்த அணு உலையின் பெயரும் குறிப்பிடப்படவில்லை.
இந்த விவகாரம் தொடர்பாக நேற்று விளக்கமளித்திருந்த கூடங்கும் அணு உலை நிர்வாகம், அப்படித் தாக்குதல் ஏதும் நடைபெறவில்லை எனக் கூறியிருந்தது.
இவ்விவகாரம் தொடர்பாக கூடங்குளம் அணு உலையின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "இந்திய அணுசக்தி நிலையங்களின் கட்டுப்பாட்டு கணினிகள் தனியாக இயங்குபவை. வெளியில் உள்ள வலைபின்னலுடனோ, இணையத்துடனோ இணைக்கப்படாதவை. அணுசக்தி நிலைய கட்டுப்பாட்டுக் கணினிகள் மீது சைபர் தாக்குதல் நடத்துவது சாத்தியமில்லாதது. தற்போது கூடங்குளம் அணுமின் நிலையத்தின் ஒன்று மற்றும் இரண்டாவது அணு உலைகள் முறையே 1000 மெகாவாட் மற்றும் 600 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்துவருகின்றன. அணு உலையை இயக்குவது தொடர்பாகவோ, பாதுகாப்பு தொடர்பாகவோ எவ்வித பிரச்சனையும் இல்லை" என தெரிவிக்கப்பட்டிருந்தது.
என்ன நடந்தது?
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் 1,000 மெகாவாட் உற்பத்தித் திறனுள்ள இரண்டு அணு உலைகள் இயங்கிவருகின்றன.
இந்த நிலையில், இந்த அணு மின் நிலையத்தின் கணிப்பொறிகள் மீது DTRACK என்ற வைரஸ் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக கணிப்பொறி மீதான தாக்குதல்களில் கவனம் செலுத்தும் சில ட்விட்டர் பயனாளிகள் சிலர் கூறினர்.
இந்த DTRACK வைரஸ் மூலம் கூடங்குளம் அணுமின் நிலைய கணினியில் இருந்து சில தகவல்கள், அதனை உருவாக்கியவருக்கு அனுப்பட்டதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில்தான், கூடங்குளம் அணுமின் நிலையம் சைபர் தாக்குதல் குறித்த தகவல்களை மறுத்தது.