ராஜி அக்கா: ஆட்டோ ஓட்டி ஏழைப் பெண்களை படிக்க வைக்கும் பெண்ணின் கதை #Iamthechange
வெள்ளி, 1 நவம்பர் 2019 (15:27 IST)
(Be the Change என்றார் காந்தி. Iam the Change என்கிறார்கள் இவர்கள். ஒன்றுமற்ற ஒரு வெளியிலிருந்து சுயம்புவாக எழுந்து வந்து எல்லோருக்குமான உந்துதலாக மாறி நிற்கும் நம்பிக்கை மனுசிகளின் கதைகளை பிபிசி தமிழ் தொகுத்துள்ளது. அதன் ஒன்பதாவது அத்தியாயம் இது.)
பிரசவத்திற்கு இலவசம் என்று பல ஆட்டோக்களிலும் எழுதியிருப்பதை பார்த்திருப்பீர்கள். ஆனால் இந்த ஆட்டோ, பெண்களுக்கு, முதியவர்களுக்கு, அரசுப் பள்ளி மாணவிகள் ஆகியோருக்கும் இலவசம்.
அதுமட்டுமல்லாமல் ஏழை குழந்தைகளின் வாழ்வை மாற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன், அதிக நேரம் ஆட்டோ ஓட்டி அதில் வரும் பணத்தில் ஏழைக் குழந்தைகளை படிக்க வைக்க இருக்கிறார் சென்னை பெரம்பூரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான ராஜி.
ராஜி அக்கா என்று பலராலும் அழைக்கப்படும் இவர், கடந்த 20 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி வருகிறார்.
"நாங்கள் வசதியான குடும்பம் இல்லை. ஆனால், இதற்கும் கீழ் நிலையில் பல மக்கள் இருக்கிறார்கள்" என்கிறார் ராஜி.
தன்னால் முடிந்த அளவிற்கு உதவி செய்து, பெண் குழந்தைகளின் வாழ்வில் மாற்றம் ஏற்படுத்த முயல்வதாக அவர் கூறுகிறார்.
இலவச பயணங்கள்
அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவிகளை இலவசமாகப் பள்ளிக்கு அழைத்துச் செல்கிறார் ராஜி.
"பெரம்பூர் - வெப்பேரி இடையே காலை அரசு பேருந்தில் அதிக நெரிசல் இருப்பதால், அரசுப் பள்ளி மாணவிகள், பள்ளிக்கு செல்ல மிகவும் சிரமம்படுகின்றனர். அதனை நான் பல முறை பார்த்திருக்கிறேன். அதனால், அவர்களுக்கு இலவசமாக அழைத்துச் செல்ல வேண்டும் என்று முடிவெடுத்தேன்," என்கிறார் ராஜி.
ராஜி ஊபரில் ஆட்டோ ஓட்டி வருகிறார். ஊபர் பயணங்களை முடித்துக் கொண்டு, இரவு வீட்டிற்கு வரும் வழியில் பெண்களுக்கும் முதியவர்களுக்கும் கட்டணம் இல்லாமல் ஆட்டோ ஓட்டுகிறார். இரவு 9 மணிக்கு மேல், 5 கிலோ மீட்டர் தூரம் வரை இலவசமாக அவர்கள் பயணிக்க உதவுகிறார் இந்த நம்பிக்கைப் பெண்.
அதுமட்டுமில்லாமல் ஏதேனும் அவசரம் என்று பெண்கள் இரவில் எந்த நேரத்தில் ஃபோன் செய்தாலும் அவர்களுக்கு சென்று உதவுகிறார்.
"நள்ளிரவு விமான நிலையத்தில் இருந்து சில பெண்கள், ஃபோன் செய்வார்கள். எந்த நேரமாக இருந்தாலும், நான் செல்வேன்" என்கிறார் ராஜி
சரி. பெண்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் இவருக்கு எப்படி வந்தது?
"5 ஆண்டுகளுக்கு முன்பு, நான் வீட்டிற்கு வரும் வழியில், ஒரு பெண்ணை பார்த்தேன். திருமணத்திற்கு போய்விட்டு வந்தது போல தெரிந்தது. நிறைய நகைகள் போட்டிருந்தார். அவர் பயணம் செய்த ஆட்டோவில் அந்த ஓட்டுநர் மது குடித்திருந்தார். என் வாடிக்கையாளரை கூட மறந்துவிட்டு, அந்தப் பெண் பாதுகாப்பாக சென்றாரா என்று அந்த ஆட்டோ பின்பு சென்று உறுதி செய்து கொண்டேன். தற்போது நிறைய சம்பவங்கள் நடக்கின்றன. வெளியே வரும் பெண்கள், பாதுகாப்பாக வீட்டிற்கு செல்ல என்னால் முடிந்த அளவிற்கு உதவி செய்கிறேன்," என்கிறார் ராஜி.
பெண் குழந்தைகளின் வாழ்வில் மாற்றம்
மூன்று பெண் குழந்தைகளுக்கு அடுத்த ஆண்டிற்கான பள்ளிக் கட்டணத்தை செலுத்த இருக்கிறார் ராஜி. மாதத்திற்கு இரண்டு நாட்கள், இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை ஆகிய இரு நாட்களில் 16மணி நேரத்திற்கும் அதிகமாக ஆட்டோ ஓட்டி, அதில் வரும் பணத்தை அதற்காக அவர் தொடங்கியுள்ள வங்கிக் கணக்கில் செலுத்தி வருகிறார். அந்தப் பணம் ஏழை பெண் குழந்தைகளின் கல்விக்கு செலவழிக்கப்படும்.
"என் வீட்டில் ஆறு பெண் குழந்தைகள் என்பதால், எங்களை படிக்க வைக்க எங்கள் தந்தையால் முடியவில்லை. நான் மட்டும் மிகவும் போராடி உண்ணாவிரதம் எல்லாம் இருந்து என் படிப்பை முடித்தேன். எங்களைப் போன்று பல பெண்கள் காசு இல்லாமல் படிக்க முடியாத நிலை இன்றும் இந்தியாவில் இருக்கிறது," என்று தன் அனுபவங்களை அவர் பகிர்ந்து கொள்கிறார்.
அவர்களின் வாழ்விலும், பெண் குழந்தைகள் மற்றும் பெண்களின் சமூகத்தில் ஒரு மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் ஏற்படுத்தவே இதனை செய்து வருவதாக ராஜி கூறுகிறார்.
இதற்காக தன் குடும்பம் தனக்கு மிகுந்த ஆதரவு தருவதாக அவர் கூறுகிறார். ராஜியின் கணவரும் ஆட்டோ ஓட்டுநராக இருக்கிறார்.
யாரிடமும் இதற்காக எந்த நிதியுதவியும் பெறாமல், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், பெண் கல்விக்கு உதவவும் எந்த ஆணின் உதவியையும் எதிர்பார்க்காமல் தானே களத்தில் இறங்கி இருக்கிறார் ராஜி.