திரும்பிய தாலிபன்கள் - இனி ஆப்கானிஸ்தானில் என்ன நடக்கும்?

Webdunia
வெள்ளி, 20 ஆகஸ்ட் 2021 (09:34 IST)
20 வருட போருக்குப் பிறகு, ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
 
இந்த குழு ஆகஸ்ட் 15ஆம் தேதி காபூலை கைப்பற்றி அதிர்ச்சியூட்டும் வகையில் துரிதமாக நாட்டை கைப்பற்றியிருக்கிறது.
 
2001ஆம் ஆண்டில் அமெரிக்க படைகள், ஆப்கானிஸ்தானில் ஆட்சி புரிந்த தாலிபனை அதிகாரத்திலிருந்து நீக்கிய இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு, அமெரிக்கா மற்றும் தாலிபன்களுக்கு இடையேயான ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, அந்த நாட்டில் இருந்து வெளிநாட்டுப் படைகள் விலகுவதாக அறிவித்தன.
 
இந்த மோதலால் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் லட்சக்கணக்கானோர் தாயகத்தை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர்.
 
இந்த நிலையில், தேசத்தை கைப்பற்றிய பிறகு முக்கிய அறிவிப்பாக, மேற்கு நாடுகளை அச்சுறுத்தக்கூடிய பயங்கரவாதிகளின் தளமாக ஆப்கானிஸ்தான் மாற அனுமதிக்க மாட்டோம் என்று தலிபான் உறுதியளித்துள்ளது.
 
ஆனால் இந்த அமைப்பினர் இனி நாட்டை எப்படி ஆளப்போகிறார்கள்? பெண்கள், மனித உரிமைகள் மற்றும் அரசியல் சுதந்திரங்களுக்கு அவர்களின் ஆளுகையில் என்ன அர்த்தம் என்பது பற்றி ஏற்கெனவே பல கேள்விகள் கேட்கப்படுகின்றன.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா ஏன் போரை நடத்தியது, அது ஏன் நீண்ட காலம் நீடித்தது?
2001ஆம் ஆண்டில், நியூயார்க் மற்றும் வாஷிங்டன் மீதான 9/11 தாக்குதல்களில் கிட்டத்தட்ட 3,000 பேர் கொல்லப்பட்டனர். இஸ்லாமியவாத தீவிரவாத அமைப்பான அல்-காய்தா மற்றும் அதன் தலைவர் ஒசாமா பின்லேடன் ஆகியோரே அதற்கு காரணம் என அமெரிக்கா அறிந்தது.
 
அந்த பின்லேடன் அப்போது ஆப்கானிஸ்தானில் இருந்தார். 1996 முதல் அதிகாரத்தில் இருந்த தாலிபன்களின் பாதுகாப்பில் பின்லேடனின் இஸ்லாமியவாத தீவிரவாதிகள் இருந்தனர்.
 
ஒசாமாவை ஒப்படைக்க தாலிபன்கள் மறுத்தபோது, ​​அமெரிக்கா ராணுவ ரீதியாக தலையிட்டு, தாலிபன்களை விரைவாக ஆளுகையில் இருந்து அகற்றியது. அங்கு ஜனநாயக அரசு அமைக்க ஆதரிப்பதாகவும் பயங்கரவாத அச்சுறுத்தலை ஒழிப்பதாகவும் அமெரிக்கா உறுதியளித்தது.
 
 
இதைத்தொடர்ந்து பல குழுக்களாக பிரிந்த தாலிபன் போராளிகள் பின்னர் மீண்டும் அணி சேர்ந்தனர்.
 
ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு வழங்கும் நடவடிக்கையை நேட்டோ கூட்டுப்படையினர், அமெரிக்கா தலைமையில் மேற்கொண்டனர். அதன் விளைவாக, அமெரிக்கா ஆதரவுடன் 2004இல் புதிய ஆப்கானிஸ்தான் அரசாங்கம் பதவியேற்றது.
 
ஆனால் அதன் பிறகு மிகவும் கொடூரமான வகையில் தாலிபன்கள் ஆப்கானிஸ்தானில் தாக்குதல்களை நடத்தினர். 2009இல் அமெரிக்க அதிபராக ஒபாமா இருந்தபோது, தாலிபன்களுக்கு எதிரான நடவடிக்கை கடுமையாக்கப்பட்டதால் அவர்கள் பின்வாங்கினர். ஆனால், அது நீண்ட காலம் நிலைத்திருக்கவில்லை.
 
ஆப்கானிஸ்தானுக்கு 2014ஆம் ஆண்டு, 2001ஆம் ஆண்டுக்குப் பிறகு மிகவும் மோசமான ஆண்டாக அமைந்தது.
 
நேட்டோ சர்வதேச படைகள் ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பை அந்நாட்டு ராணுவத்திடம் ஒப்படைத்து விட்டு தங்களுடைய போர் பணியை முடித்துக் கொண்டன.
 
அந்த இடைவெளி தாலிபன்கள் மீண்டும் பிராந்தியங்களை கைப்பற்ற வாய்ப்பாக அமைந்தது.
 
இதையடுத்து, அமெரிக்காவுக்கும் தலிபான்களுக்கும் இடையே உத்தேச அமைதிப் பேச்சுவார்த்தைகள் தற்காலிகமாகத் தொடங்கின, ஆப்கானிஸ்தான் அரசு அதில் ஈடுபடவில்லை, இந்த நிலையில், 2020ஆம் ஆண்டு பிப்ரவரியில் ஆப்கனில் இருந்து அமெரிக்க படைகள் விலக்கிக் கொள்ளப்படுவதற்கான உடன்பாடு கத்தாரில் ஏற்பட்டது.
 
இந்த ஒப்பந்தம் இரு தரப்பிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், அது ஆப்கானிஸ்தானில் அரசுப்படையினரையும் பொதுமக்களையும் இலக்கு வைத்து தாலிபன்கள் நடத்திய தாக்குதலை முடிவுக்குக் கொண்டு வரவில்லை. இதற்கு மத்தியில் தாலிபன்களின் ஆக்கிரமிப்பு ஆளுகைகளின் எல்லைகள் விரிவடையத் தொடங்கின.
 
ஆப்கானிஸ்தானில் இருபது வருட மோதல் - எப்போது, என்ன நடந்தது?
9/11 முதல் ஆப்கன் நிலப்பகுதியில் நடந்த தீவிர சண்டை வரை, இப்போது அமெரிக்க தலைமையிலான படைகள் முழுமையாக விலக்கிக் கொள்ளப்படுவது வரை நடந்த நிகழ்வுகளின் சுருக்கத்தை இங்கே வழங்குகிறோம்.
 
9/11 தாக்குதல்
11 செப்டம்பர், 2001
ஆப்கானிஸ்தானில் ஒசாமா பின்லேடன் தலைமையிலான அல்-காய்தா, அமெரிக்க மண்ணில் அதுவரை நடத்தியிருக்காத மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதலை நடத்துகிறது.
 
இந்த தாக்குதலுக்காக நான்கு வர்த்தக விமானங்கள் கடத்தப்பட்டன. இரண்டு நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மையத்தை இலக்கு வைத்து பறந்தன. மற்றொரு விமானம், வாஷிங்டனில் உள்ள அமெரிக்க பாதுகாப்புத்துறையான பென்டகன் கட்டடத்தை தாக்கியது. நான்காவது விமானம், பென்சில்வேனியா வயல்வெளி பகுதியில் தரையில் விழுந்து நொறுங்கியது. இந்த தாக்குதல்களில் கிட்டத்தட்ட 3,000 பேர் கொல்லப்பட்டனர்.
 
7 அக்டோபர் 2001
முதல் விமான தாக்குதல்
 
ஆப்கானிஸ்தானில் தாலிபன் மற்றும் அல் காய்தா இலக்குகளை அமெரிக்க தலைமையிலான கூட்டுப்படைகள் இலக்கு வைத்தன. காபூல், கந்தஹார், ஜலாலாபாத் ஆகியவை அதில் அடங்கும்.
 
ஒரு தசாப்த கால சோவியத் ஆக்கிரமிப்புக்குப் பிறகு நடந்த உள்நாட்டுப் போரின் முடிவில் அதிகாரத்துக்கு வந்த தாலிபன், பின்லேடனை அமெரிக்காவிடம் ஒப்படைக்க மறுத்தது. அவர்களின் வான் படை மற்றும் சிறிய போர் விமான தொகுப்பும் அழிக்கப்பட்டன.
 
13 நவம்பர் 2001
காபூலின் வீழ்ச்சி
வடக்கு கூட்டணி என அழைக்கப்படும் தாலிபனுக்கு எதிரான கிளர்ச்சிக்குழுக்கள், அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகளை ஆதரித்தன. அவர்களின் துணையுடன் கூட்டுப்படைகள் காபூலுக்குள் நுழைந்து தாலிபன்களை அந்த நகரை விட்டே விரட்டியடித்தன.
 
2001ஆம் ஆண்டு 13 நவம்பருக்குள், அனைத்து தாலிபன்களும் தப்பி ஓடிவிட்டனர் அல்லது அழிக்கப்பட்டனர். மற்ற நகரங்களிலும் தாலிபன்கள் விரைவாக அகற்றப்பட்டனர்.
 
26 ஜனவரி, 2004
புதிய அரசியலமைப்பு
 
"லோயா ஜிர்கா" அல்லது மாபெரும் மகா பேரவையில் நீடித்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு, புதிய ஆப்கானிஸ்தான் அரசியலமைப்பு சட்டமானது. அந்த அரசியலமைப்பு, 2004ஆம் ஆண்டு அக்டோபரில் அதிபர் தேர்தலை நடத்த வழி வகுத்தது.
 
7 டிசம்பர், 2004
ஹமீத் கர்ஸாய் அதிபரானார்
ஹமீத் கர்சாய் அதிபராவதற்கு முன்பு கந்தஹாரைச் சுற்றிலும் தாலிபன் எதிர்ப்பு குழுக்களை வழிநடத்தினார்.
 
போபால்சாய் துர்ரானி பழங்குடியினரின் தலைவரான ஹமீத் கர்ஸாய், புதிய அரசியலமைப்பின் கீழ் முதல் அதிபரானார். அவர் ஐந்துகள் கொண்ட அதிபர் பதவியில் இரு முறை ஆட்சி புரிந்தார்.
 
மே 2006
 
பிரிட்டிஷ் துருப்புக்கள் ஹெல்மண்டிற்கு அனுப்பப்பட்டன.
 
பிரிட்டிஷ் துருப்புக்கள் நாட்டின் தெற்கில் உள்ள தாலிபனின் கோட்டையான ஹெல்மண்ட் மாகாணத்திற்குள் நுழைந்தனர்.
 
 
இந்த அணியின் நோக்கம் அங்கு நடைபெற்ற புனரமைப்பு திட்டங்களை ஆதரிப்பதாகும். ஆனால் விரைவாக இந்த அணியினர் போர் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டிய கட்டாயம் எழுந்தது. அங்கு ஏற்பட்ட மோதலில் 450 க்கும் மேற்பட்ட பிரிட்டிஷ் படையினர் உயிரிழந்தனர்.
 
17 பிப்ரவரி 2009
ஒபாமாவின் ஆதரவு
ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பப்படும் படைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அமெரிக்க அதிபராக இருந்த பராக் ஒபாமா ஒப்புதல் அளித்தார். அதன் காரணமாக ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படையினரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து நாற்பதாயிரமாக உயர்ந்தது.
 
இங்கு "எழுச்சி" என்பது இராக்கில் அமெரிக்கா பயன்படுத்திய ஆக்கிரமிப்பு உத்தியின் வடிவமாக இருந்தது. உள்ளூர் மக்களை பாதுகாத்துக்கொண்டு தீவிரவாதிகளை எதிர்த்துப் போராடுவதே அந்த உத்தி.
 
2 மே 2011
ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டார்
 
பாகிஸ்தானில் உள்ள அபோட்டாபாதில் அமெரிக்க கடற்படை அதிரடி வீரர்கள் (நேவி சீல்ஸ்) நடத்திய தாக்குதலில் அல்-காய்தா தலைவர் கொல்லப்பட்டார். பின்லேடனின் உடல் அகற்றப்பட்டு கடலில் புதைக்கப்பட்டது. சிஐஏ தலைமையிலான 10 வருட வேட்டை இந்த நடவடிக்கை மூலம் முடிவடைந்தது. பின்லேடன் பாகிஸ்தான் மண்ணில் வாழ்ந்து வந்ததை உறுதிப்படுத்திய நிகழ்வால், பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் பாகிஸ்தான் 'ஒரு நம்பமுடியாத கூட்டாளி' என அமெரிக்கா குற்றம்சாட்டியது.
 
23 ஏப்ரல் 2013
முல்லா ஒமரின் மரணம்
தாலிபனின் நிறுவனர் முல்லா முகமது ஒமர் இறந்தார். அவரது மரணம் இரண்டு வருடங்களுக்கும் மேலாக ரகசியமாக வைக்கப்பட்டது.
 
ஆப்கானிஸ்தான் உளவுத்துறையின்படி, முல்லா ஒமர் பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் இறந்தார். ஆனால், அவர் தங்களுடைய நாட்டில் இல்லை என பாகிஸ்தான் மறுத்தது.
 
28 டிசம்பர் 2014
நேட்டோ போர் நடவடிக்கைகளை முடிக்கிறது
 
ஆப்கானிஸ்தானில் நேட்டோ படையினரின் போர் நடவடிக்கைகள் முடிவுக்கு வருவதை குறிக்கும் நிகழ்ச்சி காபூலில் நடந்தது. இதன் விளைவாக அமெரிக்க படையினரின் எண்ணிக்கையும் ஆயிரக்கணக்கில் குறைக்கப்பட்டது. எஞ்சியிருந்தவர்களில் பலரும் ஆப்கன் ராணுவத்தினருக்கும் காவல்துறையினருக்கும் பயிற்சி கொடுக்கும் பணிகளை கவனித்தனர்.
 
2015
தாலிபன் மீள் எழுச்சி
 
தாலிபன்கள் தொடர் தற்கொலை தாக்குதல்கள், கார் குண்டுவெடிப்பு மற்றும் பிற தாக்குதல்களைத் தொடங்கினர். காபூலில் உள்ள நாடாளுமன்ற கட்டடம் மற்றும் குண்டூஸ் நகரம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இஸ்லாமிய அரசு என தங்களை அழைத்துக் கொள்ளும் தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தானில் நடவடிக்கைகளைத் தொடங்கினர்.
 
25 ஜனவரி 2019
இறப்பு எண்ணிக்கை அறிவிப்பு
 
ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரஃப் கனி 2014ல் தாம் அதிபரானதில் இருந்து அதுநாள்வரை 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவித்தார். இந்த எண்ணிக்கை முன்பு நினைத்ததை விட மிக அதிகம்.
 
29 பிப்ரவரி 2020
தாலிபன்களுடன் அமெரிக்கா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது
 
அமெரிக்கா மற்றும் தாலிபன், கத்தாரின் தோஹாவில் ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. தாலிபன் ஒப்பந்தத்தின்படி செயல்படால், 14 மாதங்களுக்குள் அனைத்து வெளிநாட்டுப் படைகளையும் திரும்பப் பெற அமெரிக்கா மற்றும் நேட்டோ நட்பு நாடுகள் ஒப்புக்கொண்டன.
 
13 ஏப்ரல் 2021
படை விலக்கலுக்கான இறுதி தேதி அறிவிப்பு
 
2021ஆம் ஆண்டு செப்டம்பர் 11க்குள் அனைத்து அமெரிக்க படைகளும் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்தார்.
 
16 ஆகஸ்ட் 2021
தாலிபன்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தனர்
 
நகரங்களை கைப்பற்றத் தொடங்கிய ஒரு மாதத்திற்குள்ளேயே, காபூல் உட்பட அனைத்து நகரங்கள் அல்லது அவற்றின் கட்டுப்பாட்டை தங்களுடைய வசமாக்கிக் கொண்டனர் தாலிபன்கள். ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படைகள் தாலிபனின் முன்னேற்றத்தை எதிர்கொள்ள முடியாமல் வீழ்ச்சியடைந்தன.
 
தாலிபன்கள் யார்?
1989இல் சோவியத் துருப்புகள் திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து நடந்த உள்நாட்டுப் போரில் தாலிபன்கள் தோன்றினர், முக்கியமாக தென்மேற்கு மற்றும் பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் அவர்கள் ஆதிக்கம் செலுத்தினர்.
 
ஊழலுக்கு எதிராக போராடுவதாகவும் பாதுகாப்பை மேம்படுத்துவதாகவும் தாலிபன் உறுதியளித்தது, ஆனால் இஸ்லாத்தின் கடுமையான வடிவத்தையே பின்பற்றுவோம் என அவர்கள் பிரகடனம் செய்தனர்.
 
1998ஆண்டில் அவர்கள் கிட்டத்தட்ட நாட்டின் அனைத்து பகுதிகளையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.
 
ஷரியா அல்லது இஸ்லாமிய சட்டத்தின் கடுமையான பதிப்பை அவர்கள் அமல்படுத்தினர், கொடூரமான தண்டனைகளை அறிமுகப்படுத்தினர்.
 
ஆண்கள் தாடி வளர்ப்பதும், பெண்கள் உடலை முழுமையாக மறைக்கும் புர்கா அணிவதையும் கட்டாயமாக்கினர். டிவி, இசை மற்றும் சினிமாவுக்கு தடை விதிக்கப்பட்டது.
 
வீழ்த்தப்பட்ட பிறகு அவர்கள் பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் மீண்டும் சேர்ந்தனர்.
 
இந்த போருக்கு கொடுக்கப்பட்ட விலை என்ன?
இழந்த உயிர்களைப் பொருத்தவரை, அதைச் சரியாகச் சொல்வது எளிதல்ல. தாலிபன் மற்றும் ஆப்கானிஸ்தான் குடிமக்களை விட கூட்டுப் படை வீர்களின் இறப்புகளின் எண்ணிக்கை மிக அதிகமாகவே பதிவானது.
 
பிரவுன் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியொன்று, ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படைகளில் 69,000 பேர் இறந்ததாக மதிப்பிடுகிறது. பொதுமக்கள் மற்றும் போராளிகளின் பலி எண்ணிக்கை தலா 51,000 ஆக இருந்தது என அந்த ஆய்வு கணக்கிட்டுள்ளது.
 
2001 முதல் 3,500 க்கும் மேற்பட்ட கூட்டுப்படை வீரர்கள் இறந்துள்ளனர் - அவர்களில் மூன்றில் இரண்டு பங்கு வீரர்கள் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள்.
 
இந்த போரில் 20,000 க்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் காயமடைந்தனர்.
 
ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, உலகிலேயே அதிக அளவில் மக்கள் இடம்பெயர்ந்த நாடுகளின் வரிசையில் மூன்றாவது இடத்தில் ஆப்கானிஸ்தான் இருக்கிறது.
 
2012 முதல், சுமார் 50 லட்சம் பேர் ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பி வெளியே சென்றனர். பலரால் வீடு திரும்ப முடியவில்லை, சிலர் ஆப்கானிஸ்தானுக்குள்ளேயே இடம்பெயர்ந்தனர் அல்லது அண்டை நாடுகளில் தஞ்சமடைந்தனர்.
 
பிரவுன் பல்கலைக்கழக ஆய்வில், மோதலுக்கான அமெரிக்க செலவினம் கணிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் ராணுவம் மற்றும் புனரமைப்பு நிதி உட்பட 2020ஆம் ஆண்டுவரை $978 பில்லியன் (6 706 பில்லியன்) அளவுக்கு செலவிடப்பட்டுள்ளதாக அந்த பல்கலைக்கழக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
 
அடுத்து என்ன நடக்கலாம்?
ஆப்கானிஸ்தானை ஆள தாலிபன் என்ன திட்டம் வைத்துள்ளது என்பது தெளிவாகத் தெரியவில்லை.
 
பெண்கள் நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்கொள்கின்றனர். தாலிபன் செய்தித் தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன், பெண்கள் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகளை "ஆப்கான் விதிமுறைகள் மற்றும் இஸ்லாமிய மதிப்புகளின்படி மதிப்போம்" என கூறியிருக்கிறார்.
 
ஆனால் பெண்கள் வேலை செய்யும் சுதந்திரம், அவர்கள் விரும்பியபடி ஆடை அணிவது அல்லது தாலிபன் ஆட்சியில் வீட்டை விட்டு தனியாக செல்ல கட்டுப்பாடு விதிக்கப்படுமோ போன்ற அச்சங்கள் உள்ளன.
 
இந்த நாடு மீண்டும் பயங்கரவாதத்திற்கான பயிற்சி மைதானமாக மாறலாம் என்பது மற்றொரு பெரிய அச்சம்.
 
தாலிபன் தலைவர்கள் அமெரிக்காவின் ஒப்பந்தத்தை முழுமையாக கடைப்பிடிப்பதாகவும், அமெரிக்கா மற்றும் அதன் கூட்டுப்படைகளுக்கு எதிரான தாக்குதல்களுக்கு ஆப்கானிஸ்தான் மண்ணை எந்தக் குழுவும் பயன்படுத்துவதைத் தடுப்போம் என்றும் வலியுறுத்துகின்றனர்.
 
அவர்கள் ஒரு "இஸ்லாமிய அரசாங்கத்தை" செயல்படுத்துவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும், வேறு எந்த நாட்டிற்கும் அச்சுறுத்தலாக இருக்க மாட்டோம் என்றும் கூறுகிறார்கள்.
 
ஆனால் பல ஆய்வாளர்கள் தாலிபன்களும் அல்-காய்தாவும் பிரிக்க முடியாதவை, பிந்தையவர்களின் ஆயுததாரிகள் பெரிய அளவில் ஏற்கெனவே தாலிபனுக்குள் சேர்ந்து பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என்று கூறுகின்றனர்.
 
"தாலிபன்கள் ஒரு மையப்படுத்தப்பட்ட மற்றும் ஒருங்கிணைந்த சக்தி அல்ல என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். சில தலைவர்கள் சிக்கலைத் தூண்டாமல் மேற்கு நாடுகளுடன் அமைதியாக போவதை விரும்பலாம். ஆனால் அல்-காய்தாவுடனான தொடர்பை முறித்துக் கொள்ள கடும்போக்குவாத தாலிபன்கள் விரும்ப மாட்டார்கள்," என ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள்.
 
தற்போதைய நிலையில், அல்-காய்தாவுக்கு எத்தகைய சக்தி உள்ளது, அதனால் முன்பு போல உலகளாவிய வலையமைப்பை மீண்டும் உருவாக்க முடியுமா என்பதும் தெளிவாக இல்லை.
 
இதே நாட்டில்தான் இஸ்லாமிய அரசு என தங்களை அழைத்துக் கொள்ளும் ISKP (கோரசன் மாகாணம்) என்ற குழு செயல்பட்டு வருகிறது. அது அடிப்படையில் தாலிபனை எதிர்க்கிறது.
 
அல்-காய்தாவைப் போலவே, ISKP யும் அமெரிக்கா மற்றும் நேட்டோவால் வீழ்த்தப்பட்டுள்ளது. ஆனால், அமெரிக்கா தலைமையிலான படைகள் விலக்கலுக்குப் பிறகு அந்த குழுவும் மீள்எழுச்சி பெற வாய்ப்புள்ளது.
 
அந்த குழுவின் ஆயுததாரிகளின் எண்ணிக்கை இரண்டாயிரம் வரை இருக்கலாம். ஆனால், அண்டை நாடுகளான கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தானின் சில பகுதிகளில் இருந்து அதற்கு ஆதரவு பெருகக் கூடும் என்பது அந்த பிராந்தியத்தில் கவலை தரக்கூடியதாக மாறலாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்