கனடா தேர்தலில் வென்ற இலங்கை தமிழர்: யார் இந்த கெரி ஆனந்தசங்கரி?

Webdunia
புதன், 23 அக்டோபர் 2019 (18:06 IST)
கனடா நாடாளுமன்ற தேர்தலில் இலங்கை தமிழரான கெரி ஆனந்தசங்கரி 21,241 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார்.


 
கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் ஸ்காபரோ ரூஜ்பார்க் தொகுதியில் பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் இரண்டாவது முறையாக அந்நாட்டு எம்பியாகியுள்ளார் இலங்கை தமிழரான கெரி ஆனந்தசங்கரி.
 
ஆளும் லிபரல் கட்சி சார்பில் போட்டியிட்ட கெரி ஆனந்த சங்கரி, இந்த தேர்தலில் 62.3 சதவீத வாக்குகள் பெற்று வென்றுள்ளார்.
 
அவரை எதிர்த்து கன்சவேடிவ் கட்சி சார்பில் போட்டியிட்ட லெஸ்லின் லூயிஸ் மற்றும் கனேடிய தமிழரான என்.டி.பி கட்சி வேட்பாளர் காந்தரட்ணம் சாந்தகுமார் ஆகியோர் போட்டியிட்டுள்ளனர்.


 
ஸ்காபரோ ரூஜ்பார்க் தொகுதியில் 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட கெரி ஆனந்தசங்கரி, 34.8 வீத வாக்குகளை பெற்று வெற்றியை தன்வசப்படுத்திக் கொண்டார்.
 
யார் இந்த கெரி ஆனந்தசங்கரி?
இலங்கையின் மூத்த தமிழ் அரசியல்வாதியான தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்த சங்கரியின் இளைய புதல்வரே கெரி ஆனந்தசங்கரி.
 
படத்தின் காப்புரிமைLENOVO TWITTER
இலங்கையில் காணப்பட்ட யுத்த சூழ்நிலையை அடுத்து, தனது 13ஆவது வயதில் புலம்பெயர்ந்து அவர் கனடா சென்றார்.
 
கனடாவில் தமிழ் இளைஞர்கள் மத்தியில் ஏற்படும் வன்முறைகளை தீர்த்து வைக்கும் வகையில், கனடாவில் இளைஞர்கள் சேவை நிலையமொன்றை அவர் ஆரம்பித்துள்ளார்.
 
கனடாவில் வாழ்கின்ற தமிழ் இளைஞர்களிடம் காணப்படும் முரண்பாடுகளை தீர்ப்பதற்காக முன்னின்று செயற்படுபவராக கெரி ஆனந்தசங்கரி திகழ்கின்றார்.
 
கனடா தமிழ்ச் சங்கத்தின் செயற்பாடுகளிலும் அவர் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது,
 
அத்துடன், கனேடிய தமிழ்க் காங்கிரஸ் அமைப்பின் வளர்ச்சிக்காகவும் அவர் முன்னின்று செயற்பட்டுள்ளார்.
 
கனடாவில் வழக்கறிஞராக செயற்பட்ட கெரி ஆனந்தசங்கரி, பின்னர் சிறந்த அரசியல்வாதியாகவும் பெயரெடுத்துள்ளார்.
 
லிபரல் கட்சியின் வளர்ச்சிக்காக செயற்பட்டவர்களில் கெரி ஆனந்தசங்கரிக்கு பெரிய பங்களிப்பு உள்ளதாக கூறப்படுகின்றது.
 
கனடாவில் இந்த முறை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மூன்று கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தி, நான்கு தமிழர்கள் போட்டியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
இலங்கையில் அரசியலில் தான்கொண்டுள்ள கொள்கையை தனது மகனும் கொண்டுள்ளதால் மகிழ்ச்சி அடைவதாக தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகமும், கெரி ஆனந்தசங்கரியின் தந்தையுமான வீரசிங்கம் ஆனந்தசங்கரியும் தெரிவித்தனர்.


 
பிபிசி தமிழுக்கு வழங்கிய செவ்வியிலேயே வீரசிங்கம் ஆனந்தசங்கரி இதனைக் குறிப்பிட்டார்.
 
தமிழ் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் கனேடிய நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றிருப்பதால் பெருமிதம் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்