'இலங்கைக்கு இப்போதைக்கு நிதி உதவி வழங்கும் திட்டம் இல்லை' - உலக வங்கி

Webdunia
புதன், 25 மே 2022 (13:41 IST)
(இன்று இலங்கையில் வெளியான நாளிதழ்கள், இணைய தளங்களில் வெளியான செய்திகளில் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்).

முறையான பொருளாதார கொள்கை வரைவைக் கொண்டுவராதவரை இலங்கைக்கு இப்போதைக்கு நிதி வழங்கும் திட்டம் இல்லை என உலக வங்கி தெரிவித்துள்ளதாக டெய்லி மிர்ரர் இணையம் செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக உலக வங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பில், "மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்க இலங்கை அரசுக்கு உதவுவதற்காக, ஏற்கனவே ஒப்புதல் வழங்கப்பட்ட திட்டங்களை மறுபயன்பாட்டுக்கு கொண்டுவருகிறோம்."

ஆனால், முறையான பொருளாதார கொள்கை வரைவைக் கொண்டுவராதவரை இலங்கைக்கு இனி நிதி வழங்கும் திட்டம் இல்லை என்று உலக வங்கி தெரிவித்துள்ளது" என்கிறது அந்தச் செய்தி.

நாட்டுக்கு தலைமை தாங்க தயார் - சஜித் பிரேமதாச

நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறை இல்லாத புதிய அரசாங்கத்துக்கு தலைமைதாங்க, தான் தயாராக இருப்பதாக இலங்கை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார் என்று வீரகேசரி இணையத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

"தற்போதைய சூழ்நிலையில் சந்தர்ப்பவாத அரசியலில் ஈடுபடுவதன் மூலம் ராஜபக்ஷ குடும்பத்தைப் பாதுகாப்பதா? இல்லாவிட்டால் நாட்டுமக்களின் நலனை முன்னிறுத்திய கொள்கையை அடிப்படையாகக்கொண்ட அரசியலில் ஈடுபடுவதா? இவ்விடயத்தில் முக்கியமான தீர்மானத்தை மேற்கொள்ளவேண்டிய சூழ்நிலையில் நாம் இருக்கின்றோம்."

"நான் பிரதமர் பதவியை நிராகரித்தேன். நாடளாவிய ரீதியில் பொதுமக்கள் முன்னெடுத்துவரும் போராட்டங்களைக் காட்டிக்கொடுக்காமல், அவர்களை வெற்றிபெறச் செய்யவேண்டும் என்பதற்காகவே நான் பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே ராஜபக்ஷ குடும்பத்தின் பிரதான பாதுகாப்பு அதிகாரி உள்ளடங்கலாக அக்குடும்பத்தைப் பாதுகாப்பவர்களின் கூட்டணியின் என்னை இணையுமாறு கோரவேண்டாம். அதனைச்செய்வதற்கு நான் ஒருபோதும் தயாரில்லை."

"ஆனால் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை இல்லாமல் ஒழித்து, அரசியலமைப்பிற்கான 19 ஆவது திருத்தத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதன் மூலம் உருவாக்கப்படும் அரசாங்கத்திற்குத் தலைமை தாங்குவதன் மூலம் நாட்டுமக்களுக்கு சேவையாற்ற நான் தயாராக இருக்கின்றேன். புதியதொரு அரசியல் கலாசாரத்திற்கும், அரசியல் பயணத்திற்கும் நாம் தயாராக இருக்கின்றோம்", என்று சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

தேவைப்பட்டால் இருவாரங்களுக்கு ஒருமுறை விலைமாற்றம்

தேவைக்கேற்ப இரு வாரங்களுக்கொருமுறை அல்லது மாத்திற்கொருமுறை எரிபொருள் விலைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று ஆற்றல்துறை அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளதாக வீரகேசரி இணையத்தில் செய்தி வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக அமைச்சர் தெரிவித்ததாவது,

"விலைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும் 92 ரக பெட்ரோலில் 1 ரூபாய் நஷ்டத்தினையும் , ஆட்டோ டீசலில் 60 சதவிகிதம் நஷ்டத்தினையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. "

"எவ்வாறிருப்பினும் உலக சந்தையில் எரிபொருள் விலை குறைவடையும் போதும் , டாலரின் மதிப்பு குறைவடைந்து இலங்கை ரூபாயின் மதிப்பு அதிகரிக்கும் போது விலை சூத்திரத்திற்கு ஏற்ப, எரிபொருள் மூலம் கிடைக்கப் பெறும் இலாபத்தின் பயன் மக்களையும் சென்றடையும் வகையில் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்", என்று செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்