இலங்கை நெருக்கடி: ரணில் நாடாளுமன்றத்தில் தனித்து விடப்படுவாரா?
சனி, 14 மே 2022 (23:45 IST)
இலங்கை அரசியலில் நாளுக்கு நாள் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் வேளையில், மிகப்பெரிய திருப்பமாக நாடாளுமன்றத்தில் தனி ஒரு உறுப்பினராக இருந்து வரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, நாட்டின் பிரதமர் ஆகியிருக்கிறார்.
69 லட்சம் வாக்குகளை பெற்றவர்களுக்கு இன்று நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாத நிலையை எதிர்நோக்கிய நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கடந்த 9ஆம் தேதி பதவி விலகினார்.
இந்த நிலையில், இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.
இதைத்தொடர்ந்து நாட்டில் இனி வரக்கூடிய ஆட்சி முறை எவ்வாறு அமையும் என்பது குறித்து பிபிசி தமிழ் ஆராய்ந்தது.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இன்றும் தக்க வைத்துள்ள ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ரணில் விக்ரமசிங்கவின் நியமனத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளதை காண முடிகின்றது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அழைப்பின் பேரில், பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட ரணில் விக்ரமசிங்கவிற்கு, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஒரு சில நொடிகளில் வாழ்த்து தெரிவித்தமை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முழுமையான ஆதரவு ரணிலுக்கு இருப்பது உறுதிப்படுத்தப்படுகிறது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு
ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து பிளவுபட்டு, புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தி இன்று நாடாளுமன்றத்தில் எதிர்கட்சியாக செயல்பட்டு வருகிறது.
நாடாளுமன்றத்தில் அதிக பெரும்பான்மையை கொண்ட ஒருவருக்கே பிரதமர் பதவி வழங்கப்பட வேண்டும் என அரசியலமைப்பில் உள்ள போதிலும், தோல்வி அடைந்து தேசிய பட்டியலில் வருகைத் தந்த ஒருவருக்கு பிரதமர் பதவி வழங்கப்பட்டமை தவறானது என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்ஜித் மத்தும பண்டார தெரிவிக்கிறார்.
ரஞ்ஜித் மத்தும பண்டார, பொதுச் செயலாளர், ஐக்கிய மக்கள் சக்தி
நாட்டை கட்டியெழுப்புவதற்கு மாறாக, குடும்பத்தை பாதுகாத்துக்கொள்வதற்காகவே ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மஹிந்த ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ ஆகியோரின் கோரிக்கைக்கு அமையவே, ரணில் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டிய நிலை வரும்போது, ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ள ஒருவர் கூட பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்க மாட்டார்கள் என்றும் ரஞ்ஜித் மத்தும பண்டார தெரிவித்தார்.
ரணில் விக்ரமசிங்கவுடன் இனி கடமையாற்ற முடியாது என்ற நிலைப்பாட்டிலேயே, தாம் அனைவரும் ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து வெளியேறி புதிய கட்சியை ஆரம்பித்ததாகவும் அவர் கூறினார்.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை வெற்றி கொண்டவரே பிரதமராக வேண்டும் எனக் கூறும் அவர், ஜனாதிபதியின் மனதை வென்றவரால் பிரதமர் பதவியை வகிக்க முடியாது எனவும் குறிப்பிட்டார்.
இதன்படி, தமது கட்சி எந்தவொரு அமைச்சு பொறுப்புக்களையும் ஏற்காது என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்ஜித் மத்தும பண்டார தெரிவித்தார்.
மக்கள் விடுதலை முன்னணி
அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் எதிர்ப்புக்களை எந்தவிதத்திலும் பொருட்படுத்தாது, நேற்றைய தினம் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் எட்டியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.
அநுர குமார திஸாநாயக்க, தலைவர், மக்கள் விடுதலை முன்னணி
மக்களின் கருத்துக்களை கேலிக்கு உட்படுத்தும், மக்களின் கருத்துக்களை செவிமடுக்காத மிக மோசமான தீர்மானம் இதுவென அவர் கூறினார்.
பிரதமர் பதவிகளை வகித்து, அரசாங்கத்தை அமைத்து ஆட்சி செய்த ரணில் விக்ரமசிங்கவினால், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஒரு ஆசனத்தை கூட பெற முடியவில்லை என அவர் குறிப்பிட்டார்.
மக்கள் செல்வாக்கை பெறாத, ஜனநாயக விரோத செயற்பாடுகளில் ஈடுபட்ட ஒருவரையே ஜனாதிபதி இன்று பிரதமராக நியமித்துள்ளதாக அநுர குமார திஸாநாயக்க தெரிவிக்கின்றார்.
கோட்டாபய ராஜபக்ஷ, ரணில் விக்ரமசிங்கவையும், ரணில் விக்ரமசிங்க கோட்டாபய ராஜபக்ஷவையும் மாத்திரமே நம்புகிறார்களே தவிர, பொதுமக்கள் அவர்களை நம்பவில்லை என அவர் குறிப்பிட்டார்.
ஜனநாயக விரோதமான வகையில் ரணிலை பிரதமராக ஜனாதிபதி நியமித்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் கூட்டணியாக இருந்து செயற்பட்டு வந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், அந்த கூட்டணியுடனான தொடர்புகளை துண்டித்துக் கொள்வதாக அண்மையில் அறிவித்திருந்தது.
இதன்படி, நாடாளுமன்றத்தில் இரண்டு ஆசனங்களை கொண்டுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தற்போது, சுயாதீனமாக செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், புதிய பிரதமர் தெரிவு தொடர்பில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், பிபிசி தமிழுக்கு கருத்து தெரிவித்தார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் புதிய பிரதமரின் எதிர்கால திட்டங்களை அவதானித்து வருகின்றது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை வீட்டுக்கு அனுப்பும் மக்களின் உணர்வுபூர்வமான கோரிக்கை மற்றும் பொருளாதார மீட்சி குறித்து புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடத்தில் உள்ள திட்டங்களை வெளிப்படுத்த வேண்டும் என அவர் கூறுகின்றார்.
''ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு மக்கள் உணர்வுபூர்வமாக கோரிவந்த நிலையிலும், பொருளாதார நெருக்கடிகள் அதிகரித்ததன் காரணமாகவுமே நாம் அரசாங்கத்திற்கு வழங்கிய ஆதரவை வாபஸ் பெற்றோம். தற்போதைய நிலையில், புதிதாக பிரதமர் பதவியை ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்டுள்ளார். அவருக்கு சம்பிரதாய ரீதியாக வாழ்த்துக்களை தெரிவித்துள்ளோம். நாம் அரசாங்கத்தில் இருந்து விலகியமைக்கான காரணங்கள் தொடர்பில் அவருடைய அடுத்த கட்ட செயல்பாடுகள் தொடர்பில் கரிசனைகளைக் கொண்டுள்ளோம் என செந்தில் தொண்டமான் கூறினார்.
குறித்த விடயங்கள் தொடர்பில் பிரதமரின் அறிவிப்புகள் வெளியான பிறகே இ.தொ.கா கூடி ஆராய்ந்து உரிய தீர்மானத்தை எடுக்கும் என தெரிவித்த அவர், என்றுமே மக்களின் கோரிக்கைக்கு ஏற்ற நிலைப்பாட்டில் இ.தொ.கா உறுதியாக நிற்கும் என கூறினார்.
தமிழ் முற்போக்கு கூட்டணி
புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அமைச்சரவையில் தமது கட்சி பதவிகளை ஏற்காது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
அமைச்சு பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ளுமாறு தமக்கு விடுத்த அழைப்பை தான் நிராகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
புதிய பிரதமரின் திட்டங்கள் தொடர்பில் ஆராய வேண்டியுள்ளதாகவும் மனோ கணேசன் குறிப்பிட்டார்.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி
நாட்டிற்கும், தமிழ் மக்களுக்கும் நன்மைகளை உருவாக்கக் கூடிய பிரதமரின் செயற்பாடுகளுக்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்கத் தயாராக இருப்பதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
மேலும், 6ஆவது தடவையாக நாட்டின் பிரதமராக பதவியேற்றிருக்கும் ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு இருக்கின்ற அனுபவமும், சர்வதேச உறவுகளும் நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேற்கொண்டு வருகின்ற முயற்சிகளை இலகுபடுத்தும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அத்துடன், குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக நடைமுறைச் சாத்தியமற்ற விடயங்களை பேசிக்கொண்டு இருக்காமல், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் உருவாகவுள்ள புதிய அரசாங்கத்திற்கு ஏனைய தமிழ் தரப்புக்கள் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் எனவும் ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் நாயகத்தினால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் ரணில் தனித்து விடுவாரா?
ரணில் விக்ரமசிங்கவின் தெரிவுக்கு எதிர்கட்சிகள், எதிர்ப்பை வெளியிட்டு வருகின்ற நிலையில், நாடாளுமன்றத்தில் ரணில் விக்ரமசிங்கவிற்கு பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள முடியுமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
இந்த நிலையில், நாடாளுமன்றம் எதிர்வரும் 17ஆம் தேதி கூடவுள்ள நிலையில், அன்றைய தினத்தலேயே பிரதமருக்கான பெரும்பான்மை நிலவரம் தெரிய வரும் என அரசியல் ஆய்வாளர்கள் கூறினார்.
இதற்கிடையே, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்க போவதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவிக்கின்றது.சுதந்திர கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்துள்ளார்.சர்வகட்சி அரசாங்கம் ஒன்றையே தாம் கோரிய போதிலும், அதனை பொருட்படுத்தாது ரணில் விக்ரமசிங்கவை நியமித்த செயலை ஏற்றுக்கொள்ள முடியாது என்று மைத்திரிபால சிறிசேன கூறுகிறார்.