இலங்கை நெருக்கடி: 65,000 மெட்ரிக் டன் யூரியா வழங்க இந்தியா இணக்கம்

திங்கள், 16 மே 2022 (10:30 IST)
65,000 மெட்ரிக் டன் யூரியாவை இலங்கைக்கு உடனடியாக அனுப்ப இந்தியா எடுத்துள்ள தீர்மானத்துக்கு டெல்லியிலுள்ள இலங்கை தூதர் மிலிந்த மொரகொட நன்றி தெரிவித்துள்ளதாக, 'தமிழ் மிரர்' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.


அச்செய்தியில், "இலங்கையிலுள்ள 2.2 கோடி மக்கள்தொகையில் 70 சதவீதம் பேர் விவசாயத்தை சார்ந்து வாழ்ந்து வருகின்ற நிலையில், ஆண்டுதோறும் 40 கோடி அமெரிக்க டாலருக்கு இலங்கை உரங்களை இறக்குமதி செய்துவந்தது.

இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதற்கான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தீர்மானத்துக்கமைய கடந்த ஆண்டு ரசாயன உரங்களின் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டது.

போதிய அளவில் இயற்கை உரங்கள் கிடைக்காததாலும் மோசமான வானிலையாலும், நெல், தேயிலை போன்றவற்றின் உற்பத்தியும் இலங்கையில் வெகுவாக குறைந்தது. இதுவும் இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்குக் காரணம்.

உரத்துறை செயலாளர் சதுர்வேதியை அண்மையில் சந்தித்து பேசிய மிலிந்த மொரகொட, இலங்கையில் பெரும்போக விவசாயத்துக்கான யூரியாவை விநியோகம் செய்வது தொடர்பாக நடத்திய ஆலோசனையை அடுத்தே இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

21ஆம் திருத்தம் தொடர்பில் இன்று விசேட பேச்சுவார்த்தை

அரசியலமைப்பின் 21ஆம் திருத்தத்தைக் கொண்டுவருவது தொடர்பில் இன்று கலந்துரையாடவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அதுதொடர்பான சட்ட வரைவு தயாரிக்கப்பட்டு, பின்னர் அதனை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதம ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதாக, 'வீரகேசரி' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்திப்புகளின் பின்னர் இதனைத் தெரிவித்த பிரதமர் மேலும் குறிப்பிடுகையில், "நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிகள் தொடர்பில் ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கி பிரதிநிதிகளுடன் விசேட கலந்துரையாடல் நடத்தப்பட்டது. மருந்து, உணவு மற்றும் உர விநியோக நெருக்கடிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பில் இந்த சந்திப்புகளின்போது கவனம் செலுத்தப்பட்டது.

அதற்கேற்ப இந்த துறைகளுக்காக மேலும் ஒத்துழைப்புகளை வழங்குவதாக அப்பிரதிநிதிகள் உறுதியளித்துள்ளனர்.

இந்த ஒத்துழைப்புகளின் அளவு அதிகரிக்கப்படும் என்பதோடு, பொருளாதாரத்துறைக்கும் அவை கிடைக்கப்பெறும் என்று எதிர்பார்க்கிறோம்.

இதற்கு முன்னர் கலந்துரையாடல்களில் பங்கேற்ற நாடுகள் அனைத்தும் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன எனினும் எமக்கு தற்போதுள்ள பிரச்னை அடுத்த வாரத்துக்கான எரிபொருள் கொடுப்பனவுக்கான நிதியைப் பெற்றுக்கொள்வதிலும் காணப்படும் சவாலாகும்.

வங்கிகளில் டாலர் தட்டுப்பாடு காணப்படுவதால் வேறு வழிகளிகளில் நிதியுதவியை பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்.

இதேவேளை இன்று 21வது அரசமைப்புச் சட்டத் திருத்தம் தொடர்பான கலந்துரையாடல்களை முன்னெடுத்து பின்னர் அதற்கான சட்ட வரைவை தயாரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்படும். அதனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டில் தற்போதுள்ள பொருளாதார நிலைமை தொடர்பான மீளாய்வுகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளன. இதுதொடர்பாக முழுமையாக நாட்டு மக்களுக்கு அறிவிப்பதற்கு எதிர்பார்த்துள்ளேன்" என கூறியதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடுகளை இழந்த எம்.பி.க்களுக்கு தற்காலிக வீடுகள்

வன்முறை காரணமாக வீடுகளை இழந்து இடம்பெயர்ந்து வாழும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலவத்துகொட வீடமைப்புத் திட்டத்தில் உள்ள வீடுகளை தற்காலிகமாக வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக, 'தினகரன்' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அச்செய்தியில், "சமீபத்தில் 55 எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்களின் வீடுகள் வன்முறையாளர்களால் தீ வைத்து அழிக்கப்பட்டுள்ளன.

மேலும், ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் மேலதிகமாக 6 மெய்ப்பாதுகாவலர்களை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்று முன்தினம் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்