நாசாவின் கவனத்தை ஈர்த்த 6 வயது மாற்றுத் திறனாளி சிறுவன் ஆடம் கிங்

Webdunia
செவ்வாய், 1 டிசம்பர் 2020 (13:43 IST)
விண்வெளி திட்டங்களில் சேர வேண்டும் என்ற தனது கனவுகளை அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஆறு வயது சிறுவன் பகிர்ந்து கொண்டது, தொலைக்காட்சி பார்வையாளர்களின் மனதைக் கவர்ந்து இருக்கிறது. இந்த விஷயம் தற்போது நாசாவின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஆடம் கிங் என்கிற ஆறு வயது மாற்றுத் திறனாளி சிறுவன், அயர்லாந்தின் ஆர்டிஇ எனும் தொலைக்காட்சியில் நீண்ட காலமாக ஒளிபரப்பாகி வரும், தி லேட் லேட் டாய் ஷோ (The Late Late Toy Show) என்கிற ஒரு நிகழ்ச்சியில், கடந்த வெள்ளிக்கிழமை கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில், புதிய பொம்மைகள் மற்றும் விளையாட்டுப் பொருட்களைச் சோதிக்கவும், அவைகளைப் பற்றிய கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும், குழந்தைகள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்படுவார்கள்.

இந்த நிகழ்ச்சியில் பங்கெடுத்த கார்க் கவுண்டியைச் சேர்ந்த ஆடம் கிங், தன் வானுயர எதிர்கால லட்சியத்தைக் குறிப்பிட்டதால், நிகழ்ச்சியின் நட்சத்திரமாக விளங்கினார்.

நீங்கள் வளர்ந்த பின் என்னவாக நினைக்கிறீர்கள் என, நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் ரயன் டுப்ரிடி கேட்ட போது, நாசாவில் கேப்காம் ஆக வேண்டும் என பதிலளித்தார் ஆடம்.

அது பூமியில் இருக்கும் தரைக் கட்டுப்பாட்டு அறைக்கும் விண்கலத்துக்கும் தொலைத்தொடர்பு வசதியை ஏற்படுத்தித்தரும் பணி.

நீங்கள் எப்போதாவது விண்வெளி வீரராக விரும்பி இருக்கிறீர்களா எனக் கேட்டார் டுப்ரிடி.
அதற்கு, உண்மையில், என்னால் விண்வெளி வீரர் ஆக முடியாது. எனக்கு பிரிட்டில் போன் (எளிதில் உடையக் கூடிய எலும்புகள்) நோய் உள்ளது. எனவே தரையிலிருந்தே வேலை பார்ப்பேன் என நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.

ஆடம், தன் அட்டை ராக்கெட் மூலம் தன்னைத் தானே விண்வெளிக்கு அனுப்புவது போல வழிமுறைகளைச் செய்து காட்டினார்.

நிகழ்ச்சித் தொகுப்பாளர் டுப்ரிடி, ஆடமிடம், பேசும் மைக் சரியாக இருக்கிறதா என சோதனை செய்ய மூன்று வரை கூறச் சொன்னார்.

அதற்கு, இல்லை உண்மையான கவுண்ட் டவுன் எண்ணிக்கை 12-ல் தொடங்கும் என பதிலளித்தார் ஆடம்.

இந்த நிகழ்ச்சியின் காணொளிகள் இணையத்தில் வைரலாகிக் கொண்டு இருக்கிறது. இந்த வீடியோ நாசாவின் பார்வைக்கும் சென்று இருக்கிறது.

ஆடமின் இலகிய மனம் மற்றும் உத்வேகம் எங்களை ஊக்குவிக்கிறது. நாசாவில் எல்லோருக்கும் இடம் உண்டு. ஆடம் கிங், எங்கள் கனவு காண்பவர்களின் குழுவில் ஒருவராக சேரும் வரை நாங்கள் காத்திருக்க முடியாது. அவர் எப்போது தயாராகிறாரோ, அப்போது நாங்கள் இங்கே இருப்போம் என ட்விட் செய்து இருக்கிறது நாசா.

ஆடம், நான் கேப்காமாக பல விண்கலன்களுக்கு இருக்கும் அதிர்ஷ்டம் கிடைத்தது. நாம் விண்வெளியைப் பற்றி ஒன்றாகப் பேசுவோம் என ட்விட் செய்து இருக்கிறார் கனடா நாட்டைச் சேர்ந்த வின்வெளி கமாண்டர் க்ரிஸ் ஹட்ஃபீல்ட்.

ஆடம் ஒரு சூப்பர் ஸ்டார், அந்தக் குழந்தையின் இதயம், நம் எல்லோருக்கும் தேவையான போது அன்பைப் பொழிகிறது என பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த விண்வெளி வீரர் டிம் பியகே விவரித்து இருக்கிறார்.

அதோடு ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியையும் குறிப்பிட்டு, நாங்கள் உங்களை மிஷன் கன்ட்ரோலில் சேர்க்க வேண்டும் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.

ஆடம், உன்னால் நாங்கள் ஊக்கமடைந்தோம். உன்னை சந்திக்கும் நாளுக்காக காத்திருக்க முடியாது. உன்னை விரைவில் ஜான்சன் விண்வெளி நிலையத்தில் சந்திப்பேன் என நம்புகிறேன் என ட்விட் செய்து இருக்கிறார் அமெரிக்க விண்வெளி வீரர் ஷான் கிம்ப்ரோ.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்