வெள்ளம் வந்து ஒரு மாதத்திற்குப் பிறகும், பல வீடுகள் இன்னும் நீரில் மூழ்கியிருப்பதைக் கண்ட புகைப்பட கலைஞர் கிதியோன் மெண்டல் அவற்றை படமெடுத்து காட்சிப்படுத்தியுள்ளார். நைஜீரியாவின் பயேல்சா பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் நீரில் மூழ்கிய வீடுகளுக்கு மத்தியில் நிற்கும் மக்களின் புகைப்படங்கள் காலநிலை மாற்றத்தின் விளைவுகளை எதிரொலிக்கிறது.
"தண்ணீர் மெதுவாக வடிவதால், என்னை மக்கள் அவர்களின் வீடுகளுக்கு படகில் அழைத்துச் சென்றனர்," என்கிறார் கிதியோன் மெண்டல்.
"இது நான் பார்க்கும் மூன்றாவது வெள்ளம். ஆனால் பார்த்ததில் மிகவும் மோசமானது" என்று ஒக்பியா நகரைச் சேர்ந்த கிஃப்ட் இகுரு கூறினார்.
"என் உடமைகள் அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டன. எங்களுக்கு தங்குமிடம் இல்லாததால், சாலையோரம் படுத்து தூங்குகிறோம்."
இதுபோன்ற கடினமான சூழ்நிலையிலும் மக்கள் என்னை வரவேற்கின்றனர். தங்களின் அனுபவத்தை ஆவனப்படுத்த விரும்பி என்னை தங்களின் வீடுகளுக்கு படமெடுக்க அழைத்தனர், என்றார் கிதியோன்.
ஷிப்ரா திம்பிரி ஒட்டுகே படமெடுக்கும் போது கேமராவை மிகவும் கண்ணியமாக எதிர்கொண்டு, இந்த தருணத்தை ஆவணப்படுத்த உதவினார்.
அவர் தனது வீட்டிற்கு வெளியே நின்றுவாறு சோகத்தை வெளிப்படுத்தும் வகையில் தன்னியல்பாக ஒரு பாடலை பாடினார். அந்த பாடலில் சோகம் மட்டுமல்ல, மீண்டு வருவதற்கான மனவுறுதியும் தெரிந்தது.
ஒக்பியாவில் வாழும் பலரும் அவர்களின் சிறிய நிலங்களில் பயிர்களை பயிரிட்டுள்ளனர்.
"எங்கள் பண்ணையில் தண்ணீர் தலைக்கு மேல் இருந்தது, எனவே எங்கள் மரவள்ளிக்கிழங்கை அறுவடை செய்ய நாங்கள் நீருக்கடியில் மூழ்கி ரிஸ்க் எடுக்க வேண்டியிருந்தது," என்று ஒட்டுகே கூறினார்.
"இது எங்கள் சமூகத்திற்கு பெரும் அழிவையும் பட்டினியையும் கொண்டு வந்திருக்கிறது. நான் ஒரு சமூகவியல் மாணவன், வெள்ளத்தால் எனது கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. நான் இதுவரை கற்றுக் கொண்ட எனது பாடப்புத்தகங்கள், கையேடுகள், நோட்டுப் புத்தகங்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளன. எங்கிருந்து தொடங்குவது என்று எனக்குத் தெரியவில்லை."
பல்கலைக்கழக மாணவர்கள் தங்கும் விடுதியான டோர்காஸ் அடுக்குமாடி குடியிருப்பின் தரை தளம் முழுவதும் வெள்ளத்தால் மூழ்கியுள்ளது.
"இந்த பயங்கரமான சூழ்நிலையில் எங்கள் யாருக்கும் எந்த உதவியும் கிடைக்கவில்லை", என்று ஜாய் கிறிஸ்டியன் கூறினார்.
"இதுவரை இல்லாத வகையில் இந்த ஆண்டு நாங்கள் பெரும் மழை பெய்துள்ளது, ஆனால் கேமரூனில் உள்ள அணை திறக்கப்பட்ட பின்பு தான் இந்த வெள்ளம் வந்தது என்பதை நாங்கள் அறிவோம்" என்று எருபாய் அசே ஒட்டுபா கூறினார்.
"2012ஆம் ஆண்டு வந்த வெள்ளம் மிக மோசமானது என்று நாங்கள் நினைத்தோம், ஆனால் இம்முறை அதை விட மோசமாக இருந்தது.
தூங்குவதற்கு இடமில்லை, தண்ணீர் தேங்கி இருப்பதால் நோய்த் தொற்றும் ஏற்படுகிறது. குறிப்பாக மலேரியா கொசுக்கள் இங்குள்ளது.
"முழுமையடையாத கட்டிடத்தின் மேல் தளத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். இந்த அசுத்தமான தண்ணீரை துவைக்கவும், குடிக்கவும் பயன்படுத்த வேண்டியுள்ளது."
இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு அரசாங்கத்திடமிருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை என்று ஒட்டுபா கூறினார்.
"வெள்ள நீர் எங்கள் பண்ணையில் சேமித்து வைத்து இருந்த உணவுப் பொருட்களை வெள்ள நீர் சேதமாக்கியது. எனவே உணவுக்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் மூழ்கிய எங்கள் வீட்டின் அஸ்திவாரமும் சேதமடைந்துள்ளது.
"ஆனால் எங்கள் சமூகத்தில் ஒருவருக்கொருவரை ஆதரிக்கிறோம். உணவு இருக்கும்போது அதை பகிர்ந்து கொள்கிறோம். நான் வணிகவியலில் பட்டம் பெற்றுள்ளேன், ஆனால் நான் தற்போது வேலையில் இல்லை. நான் எங்கள் குடும்ப நிலத்தில் வேலை செய்கிறேன்."
"வெள்ளம் வரப்போவதாக எங்களுக்கு எச்சரிக்கை தரப்பட்டது. ஆனால் அதன் தாக்கம் இந்த அளவுக்கு இருக்கும் என எதிர்பார்க்கவில்லை. இந்த பகுதியில் வெள்ளம் அரிதானது," என்று விவசாயியான பிரின்ஸ் ஒகியாசா லூம் ஒட்டுகே கூறினார்.
"வெள்ளம் திடீரென்று வந்தது. தண்ணீரரின் வேகம் அதிகமாக இருந்ததால் தப்பிக்க வழியில்லாமல் போனது. தண்ணீரில் மூழ்கி பயிர்களை காப்பாற்றக்கூட எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை."
"இங்கே எங்களின் முக்கிய பயிர் வாழை. நடவுக்காக எங்களுக்கு கன்றுகள் தேவை. ஆனால் அவை அனைத்தும் வெள்ள நீரில் அழுகிப் போயிருக்கும்" என்றார்.
நைஜீரியாவில் ஏற்பட்ட வெள்ளத்தால் 30 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா.வின் பேரிடர் நிவாரண அமைப்பு (Ocha) தெரிவித்துள்ளது.
600க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர். மேலும் 15 லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இது நாடு முழுவதும் வீடுகள், விவசாய நிலங்கள் மற்றும் அடிப்படை உள்கட்டமைப்புகளை பெருமளவில் சேதப்படுத்தி வாழ்வாதாரங்களை அழித்துள்ளது.
"முதன்மை உணவுகளான மரவள்ளிக்கிழங்கு, அரிசி மற்றும் வாழை போன்ற பயிர்கள் சேதமடைந்துள்ளன. இதனால் நைஜீரியா முழுவதும் ஏற்கனவே ஆபத்தான நிலையில் இருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்து நெருக்கடி இன்னும் மோசமாகும் அபாயம் உள்ளது," என்று ஓச்சாவின் மட்டியாஸ் ஷ்மலே கூறினார்.
நைஜீரியா வெள்ளம் காலநிலை மாற்றம்
பட மூலாதாரம்,GIDEON MENDEL
"இங்கு வாழ்வது எளிதாக இல்லை. நாங்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு தஞ்சம் புகுந்து வருகிறோம். நாங்கள் இப்போது முழுமையடையாத கட்டிடத்தின் மாடியில் வசிக்கிறோம்," என்று பள்ளி மாணவரான இராரோ ராபர்ட் ஒட்டுபா கூறினார்.
"எங்களின் உடமைகள் அனைத்தையும் இழந்துவிட்டோம். ஆனால் எனது குழந்தைகளின் பள்ளி புத்தகங்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கியை பார்த்து நான் மிகவும் வருத்தமடைந்தேன்," என்று அவரது தாயார் எடிகிராரு டொனால்ட் கூறினார்.
"எங்கள் பண்ணையில் இருந்த பயிர்கள் அனைத்தும் நாசமாகிவிட்டன. நான் பிழைக்க எந்த தொழிலும் செய்ய முடியாததால், இப்போது கடுமையாக கஷ்டப்படுகிறோம்."
இது ஒக்பியாவில் உள்ள ஒரு தேவாலயத்தின் வெளிப்புறப்பகுதி. வெள்ள நீர் எவ்வளவு மெதுவாக வடிகிறது என்பதைக் காட்டுகிறது.
"2012 ஆம் ஆண்டு நான் சிறுவனாக இருந்தபோது ஏற்பட்ட வெள்ளம் எனக்கு நினைவிருக்கிறது. ஆனால் அது இதைப் போல மோசமாக இல்லை. இது இவ்வளவு பெரியதாக இருக்கும் என்று எங்கள் சமூகத்தில் யாரும் எதிர்பார்க்கவில்லை, "என்று ஒட்டுபா கூறினார்.
அருகிலுள்ள யெனகோவா நகரைச் சேர்ந்த விவசாயியான ஒருபோ ஓரோ டோம்பியாவுக்கு, மரவள்ளிக் கிழங்கு தண்டுகளை இழப்பது மிக மோசமான அம்சமாகும். "இது எனக்கு பல வழிகளில் பேரழிவை ஏற்படுத்தி மன அழுத்தத்திற்கு காரணமாகி இருக்கிறது."
"விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன, எனவே அனைத்து தண்டுகளும் அழுகிவிட்டன. அதனால் அடுத்த ஆண்டும் விளைச்சல் இருக்காது," என்றார்.
"இந்த வெள்ளத்திற்கு பல விஷயங்கள் காரணமாக இருந்தன என்பதை நாங்கள் அறிவோம். கேமரூனில் எல்லையில் இருக்கும் அணையை திறந்து விட்டதும், இதை தடுக்கும் வகையில் தடுப்பணை ஒன்றை எங்கள் அரசாங்கம் கட்டத்தவறியதும் தான் இதற்கு காரணம்," என்று அவர் கூறினார்.
"காலநிலை மாற்றத்தால் அசாதாரண மழை பெய்து, அணை நிரம்பி வழிந்தது என்று நான் நம்புகிறேன். என்னிடம் ஒரு படகு இருப்பதால் குறைந்தபட்சம் என்னால் என் வீட்டிற்குத் திரும்ப முடிகிறது."
யெனகோவாவில் வசிக்கும் ஃபிடெலியா ஷெட்ராக், "நிலைமை பயங்கர மோசமாக உள்ளது. நான் மீன்களை வளர்த்து பிழைப்பு நடத்துகிறேன். என்னுடைய இரண்டு மீன்குட்டைகள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டன. அதில் நான் என்னுடைய மீன்கள் அனைத்தையும் இழந்துவிட்டேன்," என்கிறார்.
வெள்ளத்தில் வீடுகளை இழந்த பலரும் அடைக்கலம் தேடி வருகின்றனர். இது டோர்காஸ் அபார்ட்மெண்ட், இதன் மேல் தளங்கள் மட்டுமே இப்போது பயன்படுத்தும் நிலையில் இருக்கின்றன.
"ஒருவர் எங்களுக்கு தங்குவதற்கு தனது இடத்தைக் கொடுத்தார், ஆனால் இப்போது அவர் எங்களை வெளியேறச் சொல்லி இருக்கிறார், எனவே நாங்கள் இப்போது சாலையோரத்தில் தங்கியுள்ளோம்," என்று ஒக்பியாவில் உள்ள அருமான் அசே கூறினார்.
"சில வெள்ள நிவாரணப் பொருட்கள் எங்களுக்கு வழங்கப்பட்டன, ஆனால் இவை போதுமானதாக இல்லை" என்று கிறிஸ்டியன் கூறினார்.
"நூற்றுக்கணக்கான மக்கள் வாழும் சமூகத்திற்கு ஒரு மூட்டை அரிசியும், பயறும் எப்படி போதுமானதாக இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். எங்களுக்கு ஒரு கப் அரிசியும், பயறும் மட்டுமே கிடைத்தது.
விவசாயியான ஜேனட் ஒட்டுகே, ஒக்பியாவில் உள்ள தனது சகோதரரின் வீட்டில் வசிக்கிறார். "நாங்கள் எங்கள் குழந்தைகளுடன் அந்த சிறிய அறையில் ஏழு பேர் தூங்குகிறோம்."
"நான் எனது மரவள்ளி தண்டுகள் அனைத்தையும் இழந்து விட்டேன். எனவே நாங்கள் அடுத்த ஆண்டு நடவு செய்ய அவற்றை புதிதாக வாங்க வேண்டும். ஆனால் ஒவ்வொரு தண்டும் 1,000 நைராவுக்கு(இந்திய மதிப்பில் ரூபாய் 171) வரை விற்கப்படுகிறது, இது எங்கள் சக்திக்கு அப்பாற்பட்டது.
"விவசாயத்தைத் தொடரவும், சேதமடைந்த சொத்துக்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்."