யாழ்ப்பாணம் கோயில் முன்பாக துப்பாக்கி சூடு: ஒருவர் பலி

Webdunia
திங்கள், 18 ஜூன் 2018 (13:37 IST)
இலங்கையின் யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் அமைந்துள்ள சகாயமாதா கோயிலுக்கு முன்பாக போலீசார் நடத்திய துப்பாகி சூட்டில் இளைஞர் ஒருவர்  உயிரிழந்துள்ளார்.
சகாய மாதா கோயிலில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடந்த ஆராதனை நிகழ்வில் பங்கேற்க வந்திருந்த மல்லாகம் குழமன்காடு பகுதியை சேர்ந்த  பாக்கியராசா சுதர்சன் (வயது 32) என்ற இளைஞர் போலீசாரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் தொடர்பில் அப்பகுதி மக்கள்  தெரிவிக்கையில்:-மல்லாகம் சந்தியில் அமைந்துள்ள சகாய மாதா கோவிலில் நேற்று மாலை ஆராதனை நிகழ்வு இடம்பெற்று கொண்டிருந்தபோது வேறு  இடத்தில் இருந்த வந்த இளைஞர் குழு குறித்த இளைஞன் ஒருவரை தாக்குவதற்காக துரத்தி வந்துள்ளனர். குறித்த குழுவினால் துரத்தி வரப்பட்ட இளைஞன்  கோவில் திருவிழா கூட்டத்தினில் புகுந்துள்ளார். இதனால் அந்த இளைஞனை தாக்குவதற்காக வந்த இளைஞர் குழுவினர் வாள்களுடன் கோவிலின்  முற்பகுதியில் நின்றிந்தனர்.
 
இந்நிலையில், கோவில் திருவிழாவில் பங்கேற்ற இளைஞன் ஒருவன் வீதிக்கு வந்த நேரம் வாள்களுடன் காத்திருந்த இளைஞர் குழு குறிந்த இளைஞன் மீது  தாக்குதல் நடத்தியுள்ளனர். இதன் போது பாக்கியராசா சுதர்சன் என்ற இளைஞன் குறித்த குழுவின் தாக்குதலில் இருந்து மேற்படி இளைஞனை காப்பாற்ற  முயற்சித்துள்ளார்.
 
அப்போது காங்கேசன்துறை வீதி ஊடக முச்சக்கர வண்டியில் வந்த போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் பாக்கியராசா சுதர்சன் என்ற இளைஞன் சம்பவ  இடத்தில் உயிரிழந்தார். இதனையடுத்து வாள்களுடன் வந்த இளைஞர் குழுவினர் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.துப்பாக்கி சூடு நடத்திய போலீசாரும் சிறிது  நேரத்தில் அங்கிருந்து சென்றுள்ளார்.
 
விசாரணை ஒன்றிற்காக சென்றுவிட்டு திரும்பி கொண்டிருக்கும் போது தம்மை குறித்த பகுதியில் வைத்து குழுவொன்று தாக்குதல் நடத்த முற்பட்டதாகவும்  இதனையடுத்தே தாம் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தெரிவித்துள்ளனர்.குழு மோதலில் ஈடுபட்டவர்களை எதுவும்  செய்யாமல், மோதலில் தாக்குதலுக்கு இலக்கான இளைஞனை காப்பாற்ற முயன்ற இளைஞனை போலீசார் சுட்டுக்கொன்றதாகவும் பின்னர் இச்சம்பவத்தை  சோடித்துள்ளதாகவும், துப்பாக்கிசூட்டினை மேற்கொண்ட போலீஸ் உத்தியோகத்தரை மோட்டார் சைக்கிளில் சிவில் உடை தரித்த நபர் ஒருவர் அழைத்து  சென்றதாகவும் அப்பகுதி பொது மக்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தை அடுத்து அப்பகுதி மக்கள் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து அப்பகுதி  எங்கும் விஷேட அதிரடிப்படையினரும் கலகமடுக்கும் பொலிஸாரும் குவிக்கப்பட்டிருந்தனர். இதனால் அவ் வீதியுடான போக்குவரத்து முற்றாக  பாதிப்படைந்திருந்ததுடன் பதட்டமான சூழலும் நிலவியிருந்தது. இந்நிலையில் இரவு 9.30 மணியளவில் மல்லாகம் நீதிமன்றின் நீதிவான் ஏ.யூட்சன் சம்பவ  இடத்திற்கு வருகை தந்து சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டதுடன் மக்களை வீதி வழி போராட்டத்தை கைவிடுமாறு கோரியதுடன்  இச்சம்பவம் தொடர்பாக நீதியான விசாரணை முன்னெடுக்கப்படும் எனவும் மக்களிடம் கோரியதையடுத்து மக்கள் வீதி மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.  யாழ்ப்பாணத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 4 இளைஞர்கள் போலீசாரினால் நடத்திய துப்பாக்கிசூட்டில் உயிரிழந்துள்ளனர். .2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ஆம் தேதி கொக்குவில் குளப்பிட்டி பகுதியில் போலீசாரின் துப்பாக்கி சூட்டில் இரண்டு யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கொலைசெய்யப்பட்டனர். 2017ஆம்  ஆண்டு ஜூலை மாதம் 9ஆம் தேதி வடமராட்சி கிழக்கில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் துன்னாலையை சேர்ந்த இளைஞன் ஒருவர் இறந்துள்ளார் .
 
இந்நிலையில் நேற்று இரவு மல்லாகம் பகுதியில் போலீசாரின் துப்பாக்கி சூட்டில் மற்றுமொரு இளைஞன் இறந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்