பள்ளிகள் திறப்பு: 2ம் தவணை தடுப்பூசி போடாத 81 சதவீதம் பேர் - இதனால் என்ன ஆகும்?

Webdunia
வியாழன், 2 செப்டம்பர் 2021 (10:20 IST)
தமிழ்நாட்டில் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு மக்கள் ஆர்வம் காட்டாமல் இருப்பது, சுகாதாரத்துறை அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ` ஆசிரியர்களில் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் மட்டும் அதிகம் உள்ளனர். இதனால் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன' என்கின்றனர் மருத்துவர்கள்.
 
இரண்டு தவணை தடுப்பூசி போடாதததால் என்ன நேரும்?
 
தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுவிட்டன. கொரோனா தொற்றின் முதல் அலையின் போது மூடப்பட்ட கல்வி நிறுவனங்கள், 16 மாதங்களுக்குப் பிறகு செயல்படத் தொடங்கியுள்ளன. தற்போது 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளை மட்டும் ஆசிரியர்கள் நடத்தி வருகின்றனர். அதிலும் வகுப்பறைக்கு 20 மாணவர்கள், கோவிட் தடுப்பு நடவடிக்கைகள் என அனைத்துப் பள்ளிகளும் சுறுசுறுப்புடன் இயங்கத் தொடங்கியுள்ளன.
 
அதேநேரம், `ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மூலமாக கொரோனா பரவிவிடக் கூடாது' என்பதற்காக பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், 18 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் கட்டாயமாக தடுப்பூசி போட வேண்டும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. அந்தவகையில் சென்னையில் மட்டும் 90 சதவிகித ஆசிரியர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், ` பள்ளி ஆசிரியர்கள் ஒரு தவணை தடுப்பூசியாவது போட்டுக் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் இதுவரையில் 2.15 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த மாதம் 17 லட்சம் தடுப்பூசிகளும் தற்போது 23 லட்சம் தடுப்பூசிகளையும் மத்திய அரசு ஒதுக்கியுள்ளது' என்றார்.
சென்னை, கோவையில் அலட்சியம்?
அதேநேரம், தமிழ்நாட்டில் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
 
தற்போது வரையில் 2.15 கோடி பேர் தமிழ்நாட்டில் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். இவர்களில் 53 லட்சம் பேர் மட்டும் இரண்டாவது தவணை தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளனர். மொத்தமாகக் கணக்கிட்டால் 9 சதவிகிதம் பேர் மட்டுமே 2 தவணை தடுப்பூசிகளையும் செலுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, சென்னையில் 2,97,521 பேரும் கோயம்புத்தூரில் 1,33,794 பேரும் திருச்சியில் 55,826 பேரும் மதுரையில் 52,766 பேரும் வேலூரில் 51,009 பேரும் சேலத்தில் 50,285 பேரும் உரிய காலத்தில் இரண்டாவது தவணை தடுப்பூசியை எடுத்துக் கொள்ளவில்லை எனவும் புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன.
 
`` மக்கள் மத்தியில் இன்றளவும் தடுப்பூசி போடுவதற்கு தயக்கம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. `எனக்கு தடுப்பூசியே வேண்டாம்' என்று கூறியவர்கள்கூட ஒரு கட்டத்தில் ஆர்வத்தோடு தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வந்தனர். ஒரு தவணை தடுப்பூசி போட்ட பின்னால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், அடுத்த தவணையைப் போடாமல் விட்டுவிட்டனர். `தொற்றுதான் வந்துவிட்டதே' என்ற எண்ணம்தான் காரணம். அடுத்ததாக, முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணைக்கு இடையில் 84 நாள் கால இடைவெளி என்றெல்லாம் சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. இதனால் சில குழப்பங்கள் ஏற்பட்டன. இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்துவதற்காக சென்று ஊசி கிடைக்காமல் ஏமாந்தவர்களும் அமைதியாக இருந்துவிட்டனர்" என்கிறார், சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் செயலாளர் சாந்தி ரவீந்திரநாத்.
 
அறிவியலை நம்பாத அரசு ஊழியர்கள்?
தொடர்ந்து பிபிசி தமிழிடம் பேசுகையில், `` தடுப்பூசி போட்டாலும் கொரோனா வருகிறதே என்ற பொதுவான எண்ணமும் முக்கிய காரணமாக உள்ளது. அடுத்து, உடலில் ஏற்படும் மற்ற உபாதைகளையும் தடுப்பூசியோடு தொடர்புபடுத்திக் கொள்வதும் நிகழ்ந்துள்ளது. `தடுப்பூசி போட்டவர்களுக்கு கொரோனா தொற்று வந்தாலும் அது தீவிரமான தொற்றாக இருக்காது' என்ற கருத்தை மக்கள் மத்தியில் அழுத்தமாகக் கூற வேண்டிய கட்டாயம் உள்ளது. தடுப்பூசியால் 100 சதவிகிதம் பாதுகாப்பு கிடையாது, ஆனால் வந்தாலும் தீவிர பாதிப்பு ஏற்படாது என்பதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். அதை அவர்களிடம் கொண்டு போகாமல் இருப்பதுதான் பிரச்னையாக உள்ளது" என்கிறார்.
 
``இதனால் என்ன விளைவுகள் ஏற்படும்?" என்றோம். `` இரண்டாவது தவணை தடுப்பூசி போடாதவர்களுக்கு நோய் எதிர்ப்புத் திறன் பாதியாகக் குறைந்துவிடுகிறது. ஒரு தவணை மட்டும் போடுவதால் கிடைக்கும் பலன், இரண்டு தவணை தடுப்பூசி போட்டதால் கிடைக்கும் பலன் ஆகியவற்றைக் கணக்கிட்டால் ஒரு டோஸ் மட்டும் போட்டவர்களுக்கு தீவிர தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஒரு தவணை போடாததால் முழுப் பலன் கிடைக்காது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
 
தவிர, பொதுத்துறை வங்கிகள், பி.எஸ்.என்.எல், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ஆகியோரில் பலரும் ஒரு தவணை தடுப்பூசி மட்டும் போட்டவர்களாக உள்ளனர். கர்ப்பிணி தாய்மார்களிலும் பலர் போட்டுக் கொள்ளவில்லை. `இதையெல்லாம் வற்புறுத்தக்கூடாது' என ஆசிரியர்கள் கூறுகின்றனர். அறிவியலை நம்புகிறவர்கள் அதற்கேற்ப நடந்து கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டால் தொற்று வந்தாலும் இறப்புக்கான வாய்ப்பு குறைவு என்பதை அவர்களிடம் எடுத்துக்கூற வேண்டும். இந்த விவகாரத்தில் இரண்டாவது தடுப்பூசிக்கான சிறப்பு முகாம்களை அரசு முன்னெடுக்க வேண்டும்" என்கிறார்.
 
புள்ளிவிவரங்களில் குழப்பம் ஏன்?
``அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் தடுப்பூசி தொடர்பான அலட்சியம் நிலவுகிறது. இது சரியானதா?" என சூழலியலுக்கான மருத்துவர்கள் சங்கத்தின் புகழேந்தியிடம் பிபிசி தமிழுக்காக கேட்டோம். `` இந்த விவகாரத்தில் எனக்கு எழும் கேள்வி ஒன்றுதான். ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்தியது தொடர்பாக அரசின் சுகாதாரத்துறை வெளிப்படையான புள்ளிவிவரங்களை முன்வைக்க வேண்டும். கடந்த 2 நாள்களுக்கு முன்பு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் பேசுகையில், தமிழ்நாட்டில் 90 சதவிகித ஆசிரியர்களும் 89.9 ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் தடுப்பூசி போட்டுவிட்டதாகக் கூறினார். தற்போது, 95 சதவிகிதம் போட்டுவிட்டதாகக் கூறுகிறார். இதில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் எவ்வளவு, அரசுப் பள்ளி ஆசிரியர்கள் எவ்வளவு, இவர்கள் ஒரு டோஸ் போட்டவர்களா அல்லது இரண்டு டோஸ் போட்டவர்களா என்ற புள்ளிவிவரங்கள் வெளியுலகின் பார்வைக்கு வரவில்லை" என்கிறார்.
 
தொடர்ந்து பேசியவர், `` கோவையில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாதோரில் 81 சதவிகிதம் பேர் ஒரு தவணை தடுப்பூசி போட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இவர்களில் 36 சதவிகிதம் பேர் மட்டுமே இரண்டு தவணை தடுப்பூசிகளையும் போட்டுள்ளனர். அப்படியானால், தொற்றில் இருந்து எந்தவிதப் பாதுகாப்பும் கிடைப்பதற்கு வாய்ப்பில்லை. இந்தப் புள்ளிவிவரத்திலும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் எவ்வளவு? தனியார் பள்ளி ஆசிரியர்கள் எவ்வளவு என்ற விவரங்கள் சொல்லப்படவில்லை. ஒரு தவணை தடுப்பூசி போட்டவர்கள் தொற்று பாதிப்புக்கு ஆளாக நேரிடலாம். இந்த விவகாரத்தை அரசு அறிவியல்பூர்வமாக ஆராயவில்லை என்பது தெரிய வருகிறது. பள்ளிக் குழந்தைகளுக்கு வயது காரணமாக தொற்று பாதிப்பு வராமல் இருக்கலாம். ஆனால், அவர்கள் மூலமாக அவர்களின் வீடுகளில் உள்ள முதியோர்களுக்கு பாதிப்பு வரலாம்" என்றார் புகழேந்தி.
 
மேலும், `` இரண்டு தவணை தடுப்பூசிகளைப் போட்டால் இரண்டு வாரங்களுக்குப் பிறகு பலன் கிடைக்கும். ஒரே ஊசியால் 10 முதல் 20 சதவிகித பாதுகாப்பு கிடைக்கலாம் என்கிறார்கள். அப்படிப் பார்த்தால் முதல் தவணை தடுப்பூசி போட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு வந்தால் அவர்கள் மூலமாக தொற்று பரவலாம். தடுப்பூசி போடாமல் விட்டுவிட்டால் நோய் பரவும் தன்மை அதிகரிக்கும். தடுப்பூசி போட்டவர்களும், `நாம்தான் ஊசி போட்டுவிட்டோம்' என்ற அலட்சியத்தில் கோவிட் தடுப்பு நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்காமல் உள்ளனர்" என்கிறார்.
 
பொது சுகாதாரத்துறை இயக்குநர் சொல்வது என்ன?
``இரண்டு தவணை தடுப்பூசிகளையும் மக்கள் செலுத்திக் கொள்ள அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் என்ன?" என தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குநர் மருத்துவர் செல்வ விநாயகத்திடம் பிபிசி தமிழுக்காக கேட்டோம். `` இரண்டு தவணை தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டால்தான் முழு பாதுகாப்பு கிடைக்கும். ஒரு தவணை தடுப்பூசியால் ஓரளவு பாதுகாப்பு மட்டுமே கிடைக்கும். இரண்டு தவணை ஊசிகளை போட்டுக் கொண்டால் வேறு எதாவது திரிபுகள் வந்தாலும் பாதுகாப்பு கிடைக்கும். அது 100 சதவிகிதம் இல்லாவிட்டாலும் திரிபுகளை எதிர்கொள்வதற்குப் போதுமான பாதுகாப்பு இருக்கும்.
 
இதனால் தொற்று வருவதற்கான வாய்ப்புகள் குறைவு. அப்படியே வந்தாலும் அவர்களை மருத்துவமனையில் அனுமதிப்பதற்கான வாய்ப்புகள் மிகக் மிக குறைவு. இந்த ஒரு காரணத்துக்காகவாவது அவர்கள் தடுப்பூசிகளை போட்டுக் கொள்ள வேண்டும்" என்கிறார்.
 
மேலும், `` முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் தொடர்பான விவரங்கள் எங்களிடம் இருப்பதால் அவர்கள் ஒவ்வொருவரையும் நாங்கள் தொடர்பு கொள்கிறோம். `ஊசி போட்டுக் கொள்ளுங்கள்' எனக் கூறி அதன் பலன்களை விவரிக்கிறோம். ஆனால், நாங்கள் என்னதான் வலியுறுத்தினாலும் தடுப்பூசியை போட்டுக் கொள்வதன் மூலம் தங்களை மட்டுமல்லாமல் தங்களைச் சுற்றியுள்ளவர்களையும் பாதுகாக்கிறோம் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் வர வேண்டும். பொதுவாக, மக்களின் மனநிலை என்னவென்றால் கொரோனா தொற்றின் எண்ணிக்கை குறைவதால் கொரோனாவும் குறைகிறது என்ற மனநிலைக்கு வருகின்றனர். இது சரியானதல்ல. 80 சதவிகித மக்கள் தடுப்பூசியால் முழு பாதுகாப்புக்குள் வந்தால் மட்டும்தான் நம்மால் தொற்றில் இருந்து முழுமையாக வெளியேற முடியும்" என்கிறார்.
 
``முதல் தவணை தடுப்பூசி மட்டும் செலுத்திக் கொண்ட ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், தொற்று பரவல் அதிகரிக்கும் என்கிறார்களே?" என்றோம். `` மாணவர்களின் குடும்பத்தினர் மட்டுமல்ல, ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கும் அந்த பாதிப்பு இருக்கும். மாணவர்களை பள்ளிக்கு கொண்டு வந்து விட்டுச் செல்கிறவர்களுக்கும் பாதிப்பு ஏற்படலாம். எப்படிப் பார்த்தாலும் தொற்றின் பாதிப்பு இருக்கத்தான் செய்யும். எனவே தடுப்பூசி போட்டுக் கொள்வதே அவர்களுக்கும் அவர்களைச் சுற்றியுள்ளவர்களுக்கும் நல்லது" என்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்