எஸ்.பி.வேலுமணி: 60 இடங்களில் சோதனை, சிக்கியது என்ன? - முழு விவரம்!
புதன், 11 ஆகஸ்ட் 2021 (07:39 IST)
தமிழக முன்னாள் அமைச்சரும் அ.தி.மு.கவின் சட்டமன்ற கொறடாவுமான எஸ்.பி.வேலுமணியின் வீடு உள்பட 52 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று சோதனை நடத்திய நிலையில், அவரது கோவை வீட்டில் மாலை 5.30 மணியளவில் சோதனையை அதிகாரிகள் நிறைவு செய்தனர்.
சென்னை சட்டமன்ற உறுப்பினர் விடுதி வளாகம், நாள் 10-08-2021; நேரம் காலை 8 மணி
முன்னாள் அமைச்சரும் தொண்டாமுத்தூர் தொகுதி எம்.எல்.ஏவுமான எஸ்.பி.வேலுமணியின் `டி பிளாக்'கில் உள்ள விடுதி அறைக்கு லஞ்ச ஒழிப்பு இயக்குநரகத்தில் இருந்து 15 பேர் வந்திருந்தனர்.
``நான் அவரது லீகல் அசிஸ்டென்ட், என்ன விஷயம் சொல்லுங்க?" - வழக்கறிஞர் ஐ.எஸ்.இன்பதுரை
``அவரது அறையை சோதனையிட வந்துள்ளோம்"
`` சரி.. சட்டமன்ற உறுப்பினர் விடுதி என்பது சபாநாயகரின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதி. அவரது அனுமதிக் கடிதம் இருக்கிறதா?"
``இல்லை"
`` எஃப்.ஐ.ஆர் இருக்கிறதா?"
``இல்லை"
`` காலையில் இருந்தே தொலைக்காட்சிகளில் எஃப்.ஐ.ஆர் காட்டுகிறார்களே?"
``எஃப்.ஐ.ஆர் இருக்கிறது"
அதற்குள் இடைமறித்த எஸ்.பி.வேலுமணி,
``உங்கள் சோதனைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கிறேன். என்ன வேண்டுமோ தேடி எடுத்துக் கொள்ளுங்கள்".
லஞ்ச ஒழிப்புத்துறையின் உயர் அதிகாரிகளோடு வேலுமணி தரப்பினர் நடத்திய உரையாடல் இது.
60 இடங்களில் சோதனை, முக்கிய ஆவணங்கள் பறிமுதல்
இந்த சோதனை எஸ்.பி. வேலுமணி, 16 தனி நபர்கள், நிறுவனங்கள் மற்றும் பெயர் குறிப்பிடாத அதிகாரிகள் மீதான முதல் தகவல் அறிக்கை அடிப்படையில் நடத்தப்பட்டன.
இதைத்தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையின் தொடர்ச்சியாக, கோவையில் 42 இடங்கள், சென்னையில் 16 இடங்கள், காஞ்சிபுரம், திண்டுக்கலில் தலா ஒரு இடம் என மொத்தம் 60 இடங்களில் சோதனை நடந்தது. இதில் எஸ்.பி. வேலுமணிக்கு சொந்தமான பண்ணை வீடு, வீடுகள், அலுவலகங்கள் ஆகியவை அடக்கம்.
இந்த சோதனை முடிவு குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 13 லட்சத்து 8 ஆயிரத்து 500 ரொக்கம், நிலப்பதிவு தொடர்பான ஆவணங்கள், தனியார் நிறுவனங்களுடனான பரிவர்த்தனை ஆவணங்கள், இரண்டு கோடி ரூபாய் அளவுக்கு வைப்புத்தொகை, மாநகராட்சி தொடர்புடைய அலுவல்பூர்வ ஆவணங்கள், ஹார்ட் டிஸ்குகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது.
எனினும், எந்தெந்த இடங்களில் எவை பறிமுதல் செய்யப்பட்டன என்ற விவரத்தை தனித்தனியாக லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிடவில்லை.
கோவையில் என்ன நடந்தது?
இது தொடர்பாக அதிகாரிகள் வேலுமணி தரப்பிடம் அளித்த சோதனை விவர அறிக்கையில், மொத்தம் உள்ள 18 பக்கங்களில் இரண்டு பக்கங்கள் செய்தியாளர்களிடம் காண்பிக்கப்பட்டன.
அதில் எந்தெந்த இடங்களில் எல்லாம் அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள் என்பதும் அவற்றில் வழக்கு தொடர்பாக கைப்பற்ற ஏதுமில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் பாதுகாப்பு பெட்டக சாவியை கைப்பற்றியுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த சோதனைக்குப் பின்னணியில், கோவை மற்றும் சென்னை மாநகராட்சிகளில் 800 கோடி ரூபாய் அளவுக்கான ஒப்பந்தங்களில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறுகிறார் `அறப்போர்' இயக்கத்தின் ஜெயராம் வெங்கடேஷ்.
சென்னை மற்றும் கோவை மாநகராட்சியில் முறைகேடுகள் நடந்ததாக அறப்போர் இயக்கத்தினர் கொடுத்த புகார் மற்றும் தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
எஃப்.ஐ.ஆரில் 'ஏ1' வேலுமணி
லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் கண்காணிப்புத்துறை பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில், முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் பெயர், குற்றம்சாட்டப்பட்ட முதலாவது நபரைக் குறிக்கும் 'ஏ1' ஆக சேர்க்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக, வேலுமணியின் சகோதரர் அன்பரசன், கே.சி.பி இன்ஜீனியர்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள் சந்திரபிரகாஷ், சந்திரசேகர் உள்பட 17 பேரின் பெயரும் முதல் தகவல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. அதில், கோவை மற்றும் சென்னை மாநகராட்சிகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகளில் தன்னைச் சார்ந்தவர்களுக்கு வேலுமணி ஆதாயம் தேடிக் கொடுத்ததாக கூறப்பட்டுள்ளது.
இவர்களின் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் கொடுப்பதற்காக, பெயர் தெரியாத அதிகாரிகள் சிலர், வேலுமணியின் செல்வாக்கால் சட்டத்தை மீறியுள்ளனர் எனவும் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எந்தெந்த நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது என்ற விவரங்களும் அதில் விரிவாக இடம்பெற்றுள்ளன. அதிலும், 2014 முதல் 2018ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் நடந்ததாக கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாகவே இந்த முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.எஸ்.பி.வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்த `அறப்போர்' இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேஷிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.
"நாங்கள் அளித்த புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. எஸ்.பி.வேலுமணி, தனது சகோதரர் அன்பரசன் மற்றும் அ.தி.மு.கவின் `நமது அம்மா' நாளிதழின் வெளியீட்டாளரான சந்திரசேகருக்குச் சொந்தமான கே.சி.பி இன்ஜீனியர்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் இந்த நிறுவனத்தில் இன்னொரு இயக்குநராக உள்ள சந்திரபிரகாஷ், அவருக்கு நெருக்கமாக உள்ள சில நிறுவனங்களுக்கு நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தங்களை முறைகேடாக வழங்கியுள்ளனர். குறிப்பாக, ஒரே ஐ.பி முகவரியில் டெண்டர் போட்டது, அடுத்தடுத்து டெண்டர்களை எப்படியெல்லாம் கோரினர் என்பதையும் புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தோம்" என்றார் ஜெயராம் வெங்கடேஷ்.
800 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தங்கள்
அவரிடம், ``என்னென்ன பணிகளில் முறைகேடு நடந்ததாக கூறியுள்ளீர்கள்," என கேட்டோம்.
``சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் சாலைப் பணிகள், மழைநீர் வடிகால் வாய்க்கால்கள், திடக்கழிவு மேலாண்மை, நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்கள் ஆகியவற்றுக்கான ஒப்பந்தங்களில் முறைகேடுகள் நடந்தன. குறிப்பாக, 2015 ஆம் ஆண்டு சென்னை மாநகர பேருந்துத் தடத்தில் சாலைகளை அமைத்தது, 2014 முதல் 17 வரையில் கோவை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை, மழைநீர் வடிகால், சாலைகள் அமைத்தது உள்ளிட்டவை. இதனால் மக்களுக்கு எந்தளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்பதை விவரித்துள்ளோம்.
வேலுமணி தனக்கு நெருக்கமான நிறுவனங்களுக்கு பணிகள் கொடுத்ததன் மூலம் டெண்டர் மதிப்பை விட 50 முதல் 100 சதவிகித தொகை அதிகமாக பெற்றுள்ளனர். இதனால் எவ்வளவு இழப்பு ஏற்பட்டுள்ளது என்பது லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணையில்தான் தெரியவரும்.
ஆனால், நாங்கள் கொடுத்த சாம்பிள் ஒப்பந்தங்களை வைத்துப் பார்க்கும்போது 800 கோடி ரூபாய் அளவுக்கு இவர்களுக்கு ஒப்பந்தங்களைக் கொடுத்துள்ளனர். இதில் 25 சதவிகிதம் அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக அறிகிறோம். 2018 ஆம் ஆண்டுக்குப் பிறகு பிறகு நடந்த முறைகேடுகள் தொடர்பான புகார்களுக்கு இன்னமும் எஃப்.ஐ.ஆர் போடப்படவில்லை.
ரூ. 500 கோடியை கடந்த வருமானம்
உதாரணமாக, 18 கோடி ரூபாய்க்கான டெண்டர் இருக்கிறது என்றால், அதில் மூன்றரை கோடி ரூபாய் அளவுக்கு இழப்பை ஏற்படுத்தியுள்ளனர். எங்களது புகார் மனுவில் சென்னை மாநகராட்சி மற்றும் கோவை மாநகராட்சியில் கே.சி.பி நிறுவனங்கள் 140 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் எடுத்துள்ளதற்கான ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளோம்.
இதுதவிர, வேலுமணியின் சகோதரர் அன்பரசன் எந்தவகையில் 47 டெண்டர்களை 15 கோடி ரூபாய்க்கு எடுத்தார் என்பதையும் குறிப்பிட்டுள்ளோம். இதன்மூலம், 2014 முதல் 2018 காலகட்டங்களில் இந்தக் கம்பெனிகளின் டர்ன் ஓவர் மட்டும் 500 கோடி ரூபாய் அளவுக்குச் சென்றுள்ளது. இதற்கான ஆதாரங்களைக் கொடுத்துள்ளோம். கே.சி.பி இன்ஜீனியர்ஸ், வரதன் இன்ஃபிரா ஸ்ட்ரக்சர் உள்பட சில நிறுவனங்கள் மட்டுமே இவற்றைச் செய்துள்ளன" என்கிறார்.
`கடந்த ஆட்சிக்காலத்திலேயே நீங்கள் கொடுத்த புகார்கள்தானே இவையெல்லாம்?" என்றோம்.
``ஆமாம். ஆனால், `இந்த வழக்கில் முகாந்திரம் இல்லை' என அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்தது. ஆனால், நீதிமன்றமோ இந்த வழக்கை எங்களால் மூட முடியாது எனக் கூறிவிட்டது. கடந்த மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, `இதன் ஆழம் வரையில் சென்று யார் யாரெல்லாம் தவறு செய்தார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என நீதிபதி தெரிவித்தார்.
அதிகாரிகள் பெயர் ஏன் இல்லை?
எஸ்.பி.வேலுமணி விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் அட்வகேட் ஜெனரலும், `இந்த வழக்கில் மறு விசாரணை நடத்த உள்ளோம்' எனக் கூறியிருந்தார். நாங்கள் தெரிவித்த புகார்களை மையமாக வைத்தே கணக்கு தணிக்கையாளர் அலுவலகமும் (சி.ஏ.ஜி) சில விவகாரங்களைக் கண்டறிந்துள்ளது என்பதையும் நீதிமன்றத்தில் குறிப்பிட்டிருந்தோம். அதன் அடிப்படையில் மறுவிசாரணை செய்ய உள்ளதாக அரசு தெரிவித்திருந்தது," என்றார்.
``இந்த விவகாரத்தைக் கையில் எடுத்த பிறகு நீங்கள் எதிர்கொண்ட பிரச்னைகள் என்ன?" என்றோம்.
``எங்கள் மீது சிவில், கிரிமினல் பிரிவுகளில் 30 வழக்குகளை பதிவு செய்தனர். இதற்காக அவரது (வேலுமணி) ஆதரவாளர்கள் மற்றும் காவல்துறையைப் பயன்படுத்தினர். எங்களது அமைப்பின் கூட்டங்களை நடத்தவிடாமல் சிக்கலை ஏற்படுத்தினர். காவல்துறையைப் பயன்படுத்தி அச்சுறுத்தினர். தன்னிடம் அதிகாரம் உள்ளதால் எந்தத் தவற்றையும் செய்வோம் என்ற தொனியில்தான் அனைத்தையும் வேலுமணி தரப்பினர் செய்தனர். இந்த விவகாரத்தில் விசாரணை சரியாக நடத்தப்பட்டால், இவர்கள் நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள். அரசும் துரித விசாரணையை மேற்கொள்ள வேண்டும்.
மாநகராட்சிகளில் நடைபெற்ற முறைகேடுகளுக்கு முன்னாள் அமைச்சர் வேலுமணி, அதிகாரிகள் மற்றும் ஒப்பந்தாரர்கள் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல் தகவல் அறிக்கையில் தவறு செய்ததாக கருதப்படும் அதிகாரிகளின் பெயர் குறிப்பிடப்படவில்லை. அவர்களையும் இந்த வழக்கில் சேர்த்து 90 நாள்களுக்குள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும். ஒரு வருட காலத்துக்குள் விசாரணையை முடித்து இவர்களுக்குத் தண்டணையை பெற்றுத் தந்தால்தான் தவறு செய்கிறவர்களுக்கு ஒரு பாடமாக அமையும்" என்கிறார்.
அ.தி.மு.கவின் பதில் என்ன?
அறப்போர் இயக்கத்தின் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, அ.தி.மு.கவின் தேர்தல் பிரிவு இணைச் செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான வழக்கறிஞர் இன்பதுரையிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.
``எஸ்.பி.வேலுமணி மீதான நடவடிக்கை என்பது முழுக்க முழுக்க பழிவாங்கும் நடவடிக்கையாகத்தான் பார்க்கிறோம். சட்டமன்ற தேர்தலில் கோவை மாவட்டத்தில் ஒரு தொகுதியில்கூட தி.மு.க வெற்றி பெறவில்லை. அந்த மாவட்டத்தில் தி.மு.கவை முழுமையாக வேலுமணி துடைத்தெறிந்து விட்டார். அந்த வன்மத்தை மனதில் வைத்துக் கொண்டு ரெய்டு நடவடிக்கையை அரங்கேற்றியுள்ளனர். நேற்று வெள்ளை அறிக்கை என்ற பெயரில் பொய் மூட்டையை தி.மு.க அவிழ்த்தது. அதனை மறைக்கும் வகையில் இந்தச் சோதனையை நடத்துகின்றனர்" என்கிறார் இன்பதுரை.
மேலும், `` சட்டமன்ற உறுப்பினர் விடுதிக்குப் போலீஸார் வந்தபோது நான் அங்குதான் இருந்தேன். சபாநாயகரின் அனுமதியைப் பெறாமலேயே போலீஸார் வந்துள்ளனர். இன்று காலையில் ரெய்டு நடப்பதை அறிந்து வழக்கறிஞர் என்ற முறையில் அவரைச் சந்தித்தேன். சட்டமன்ற அலுவல் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சபாநாயகரின் உத்தரவின்படிதான் அவர் சென்னை வந்துள்ளார். சட்டமன்றத்தில் அ.தி.மு.க கொறடாவாக இருப்பதால், அ.தி.மு.கவை நசுக்கும் வகையில் இந்தச் சோதனையை தி.மு.க அரங்கேற்றியுள்ளது. அனைத்துக்கும் அவரிடம் முறையான கணக்குகள் உள்ளன. இந்த பொய் வழக்கை அவர் சட்டப்படியாக சந்திப்பார்" என்கிறார்.
ஜெயலலிதாவுக்கே 4 ஆண்டுகள்!
``இது ஒரு பொய் வழக்கு என வேலுமணி தரப்பினர் கூறுகிறார்களே?" என தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.
``நான்தான் வழக்கு போட்டேன். நான் கொடுத்த புகாரின் பேரில் சோதனை நடக்கிறது. அவர்களிடம் ஆதாரம் இருந்தால் அதனைக் காட்டட்டும். நாங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லையே. 66 கோடி ரூபாய்க்கே ஜெயலலிதாவுக்கு நான்கு வருடங்கள் தண்டனை கிடைத்தது. இது பல்லாயிரம் கோடி ரூபாய் முறைகேடு. எத்தனை வருடங்கள் கிடைக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்" என்றார்.
`எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு முன்னதாகவே எஸ்.பி.வேலுமணிக்கு சிக்கல் வரலாம்' எனப் பேசப்பட்டு வந்த நிலையில், இன்று லஞ்ச ஒழிப்புத்துறையினர் தீவிர சோதனையை நடத்தியிருக்கின்றனர். அதுவும் வேலுமணி சென்னைக்குச் சென்ற நேரத்தில் திடீர் சோதனை நடைபெற்று வருவது கோவை மாவட்டத்தில் உள்ள அ.தி.மு.க நிர்வாகிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. `ஆளும் தி.மு.க அரசின் அடுத்த இலக்கு யாராக இருக்கும்?' என அ.தி.மு.க வட்டாரத்தில் விவாதம் தீவிரமாகியிருக்கிறது.