ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடியில் மீண்டும் திறக்கக் கோரும் வழக்கு: இன்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

Webdunia
செவ்வாய், 18 ஆகஸ்ட் 2020 (08:23 IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டுவந்த ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை செயல்படுத்த அனுமதிக்கக் கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.

இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதிகள் டி.எஸ். சிவஞானம், பவானி சுப்பராயன் அடங்கிய அமர்வு, வழக்கின் தீர்ப்பை கடந்த ஜனவரி 8ஆம் தேதி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தது.

முன்னதாக, தூத்துக்குடி மாவட்டத்தில் வேதாந்தா நிறுவனத்தால் நடத்தப்பட்ட ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை மூடக் கோரி அப்பகுதி மக்கள் போராட்டங்களை நடத்திவந்தனர். இது தொடர்பாக கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த போராட்டம் பெரும் கலவரத்தில் முடிவடைந்தது. இதில் காவல்துறையால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பலர் உயிரிழந்தனர்.

இதற்குப் பிறகு அந்த ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. 2018 மே 28ஆம் தேதி அந்த ஆலை மூடி சீல்வைக்கப்பட்டது.

இதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் முறையிட்டது. தேசிய பசுமை தீர்ப்பாயம் ஒரு நிபுணர் குழுவை அமைத்தது. நிபுணர் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் ஆலையை திறக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.


இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அரசின் கொள்கை முடிவுகள் குறித்து விசாரிக்க பசுமைத் தீர்ப்பாயத்திற்கு அதிகாரமில்லையெனக் கூறிய உச்ச நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெறலாம் எனத் தெரிவித்தது.

இந்த வழக்கின் வாதங்கள் 39 நாட்கள் நடைபெற்றன. இதற்குப் பிறகு இந்த வழக்கில் எழுத்து மூலமான வாதங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. ஜனவரி 8ஆம் தேதியன்று தீர்ப்பிற்காக வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை டி.எஸ். சிவஞானம், வி. பவானி சுப்பராயன் அடங்கிய அமர்வு இன்று (ஆகஸ்டு 17) அளிக்கிறது.

ஸ்டெர்லைட் ஆலை எப்போது தொடங்கப்பட்டது?

`வேதாந்தா` உலகின் மிகப்பெரிய உலோகம் மற்றும் சுரங்கத் தொழில் நிறுவனம். அதன் உரிமையாளர் அனில் அகர்வால். பாட்னாவில் பிறந்த இவர், பள்ளிப்படிப்பை முடித்ததும், 1972 ஆம் ஆண்டு தந்தையுடன் அலுமினிய தொழிலில் ஈடுப்பட்டார். பின் மும்பைக்கு சென்றவர், வேதாந்தா நிறுவனத்தை தொடங்கினார். லண்டன் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட முதல் இந்திய நிறுவனம் இது.



வேதாந்தாவின் துணை நிறுவனம்தான் ஸ்டர்லைட், இது குஜராத்தின் சில்வஸா மற்றும் தமிழ்நாட்டின் தூத்துக்குடி ஆகிய இரு பகுதிகளில் இயங்குகிறது. தூத்துக்குடியில் உள்ள ஆலை ஓர் ஆண்டுக்கு 4 லட்சம் மெட்ரிக் டன் தாமிரத்தை உற்பத்தி செய்தது. 2017 ஆம் நிதியாண்டில் அதன் வர்த்தகம் 11.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.

மகாராஷ்டிரா தொழில் வளர்ச்சி நிறுவனம், முதலில் 1992ஆம் ஆண்டு, ஸ்டர்லைட் நிறுவனத்துக்கு கடலோர பகுதியான ரத்னகிரியில் 500 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியது.

ஆனால், உள்ளூர் மக்கள் போராட்டத்தை முன்னெடுத்ததை அடுத்து, மகாராஷ்டிர ஆரசு இதற்கான ஒரு ஆய்வு குழுவை அமைத்தது. அவர்கள் அளித்த பரிந்துரையின்படி, 1993 ஆம் ஆண்டு கட்டுமான பணிகளை நிறுத்தும்படி ஆட்சியர் ஸ்டர்லைட் நிறுவனத்துக்கு கடிதம் அனுப்பினார்.

1994ஆம் ஆண்டு தமிழ்நாடு மாசுக் கட்டுபாட்டு வாரியம் இந்நிறுவனத்துக்கு தடையில்லா சான்றிதழ் அளித்தது. சூழலியல் மாசை கருத்தில் கொண்டு மன்னார் வளைகுடாவிலிருந்து 25 கி.மீ தொலைவில்தான் இந்நிறுவனம் அமைக்கப்பட வேண்டும் என்றது. ஆனால், இந்நிறுவனம் மன்னார் வளைகுடாவிலிருந்து 14 கி.மீ தொலைவிலேயே அமைக்கப்பட்டது.

போராட்டங்கள் மற்றும் வழக்குகள்

ஸ்டெர்லைட் நிறுவனம் சூழலியல் மாசை உண்டாக்குவதாக குற்றஞ்சாட்டி, நேஷனல் ட்ரஸ்ட் ஆஃப் க்ளீன் என்விரான்மென்ட், உள்ளிட்ட பல்வேறு தரப்புகளில் இருந்து வழக்குகள் பதியப்பட்டன.

1997-2012 ஆம் ஆண்டு காலத்தில் சில ஆண்டுகள் முறையான அரசு ஒப்புதல்களை புதுப்பிக்காமலும் ஆலையை நடத்தியதுதான் இந்த நிறுவனத்தின் மீதான பிரதான குற்றச்சாட்டு.

1996ன் பிற்பகுதியில் ஸ்டெர்லைட் ஆலை இயங்க ஆரம்பித்ததிலிருந்தே சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் இதனை எதிர்த்து அவ்வப்போது போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 2013 மார்ச் 23ஆம் தேதியன்று ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசித்தவர்களுக்கு மூச்சுத் திணறலும் கண் எரிச்சலும் ஏற்பட்டது.

இதையடுத்து தொழிற்சாலை மூடப்பட்டது. அப்போதும் போராட்டங்கள் நடைபெற்றன. தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அமைத்த குழுவின் ஒப்புதலையடுத்து மீண்டும் இந்தத் தொழிற்சாலை இயங்க ஆரம்பித்தது.

2018-ஆம் ஆண்டு இந்த ஆலையை மூட கோரி ஏராளமான போராட்டங்கள் நடந்தன. மார்ச் மாதத்தில் நடந்த போராட்டம் நாடு முழுவதிலும் பலரின் கவனத்தை ஈர்த்தது.

மிகவும் முக்கிய நிகழ்வாக மே மாதம் நடந்த போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியது. அதில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து தமிழக அரசால் ஆலை மூடப்பட்டது.

2018 மே மாதம் 28ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூடு தொடர்பாக ஏராளமான கண்டனங்கள் மற்றும் கேள்விகள் எழுந்தன. நீதிமன்றமும் துப்பாக்கிசூடு தொடர்பாக வினவியது.

அதேவேளையில் போராட்டத்தின்போது கலவரத்தில் ஈடுபட்டதாகவும், கலவரத்திற்கு காரணமாக இருந்ததாகவும், சட்டத்திற்கு புறம்பாக அரசு சொத்துக்களை சேதப்படுத்தியதாகவும் 200க்கும் மேற்பட்ட வழக்குகளை போலீசார் பதிவு செய்தனர். பலர் கைது செய்யப்பட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்