பி.வி. சிந்து: தாயகம் திரும்பியவருக்கு உற்சாக வரவேற்பு

Webdunia
செவ்வாய், 3 ஆகஸ்ட் 2021 (18:45 IST)
டோக்யோ ஒலிம்பிக் பேட்மின்டன் மகளிர் ஒற்றையர் போட்டியில் வெண்கலம் வென்று விட்டு தாயகம் திரும்பிய பி.வி. சிந்துவுக்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.

ஒலிம்பிக் போட்டியில் இரண்டு முறை பதக்கங்கள் வென்ற ஒரே இந்திய வீராங்கனை என்ற புகழும் சிந்துவுக்கு சேர்ந்திருக்கிறது.
 
இதற்கு முன்பு 2012ஆம் ஆண்டில் பெய்ஜிங் போட்டியில் வெண்கல பதக்கத்தையும், 2012இல் நடந்த லண்டன் ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கத்தையும் இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமார் பெற்றிருந்தார்.
 
டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பி.வி. சிந்து, "நான் மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறேன். என்னை ஆதரித்து ஊக்குவித்த பேட்மின்டன் சங்கம் உட்பட அனைவருக்கும் நன்றி கூறுகிறேன். டோக்யோ ஒலிம்பிக், அதிக அழுத்தமும் மிகுந்த எதிர்பார்ப்பும் கொண்டதாக இருந்தது. ஒலிம்பிக் போட்டிகளில் அடுத்தடுத்து பதக்கங்கள் வெல்வது எளிதான விஷயமல்ல. 2016ல் ரியோவில் நடந்த ஒலிம்பிக் வித்தியாசமாக இருந்தது. அதை விட வித்தியாசமானதாக டோக்யோ ஒலிம்பிக் இருந்தது," என்று தெரிவித்தார்.
 
ஒரு இந்திய வீராங்கனையாக இரண்டு ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற செயல்பாடு, எனக்கு ஊக்கமும் அதிகமாக மேலும் உழைக்க வேண்டும் என்ற உற்சாகத்தையும் கொடுத்துள்ளது என்றும் பி.வி. சிந்து தெரிவித்தார்.
 
முன்பு இந்திய பிரதமர் ஒலிம்பிக் புறப்படும் இந்திய விளையாட்டு வீரர், வீராங்கனைகளுடன் கலந்துரையாடியபோது, போட்டியில் வென்று திரும்பியவுடன் அவருடன் ஐஸ் கிரீம் சாப்பிடுவேன் என்று கூறியிருந்தார். அது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, பிரதமரை ஆகஸ்ட் 15ஆம் தேதி சந்திக்கவிருக்கிறேன் என்று சிந்து பதிலளித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்