பேருக்கு பேச்சுவார்த்தை, உள்ளுக்குள் விரோதம்: அமெரிக்காவை சாடிய வட கொரியா!

Webdunia
வியாழன், 4 ஜூலை 2019 (10:51 IST)
பேச்சுவார்த்தை நடத்தினாலும் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நோக்கத்தோடு அமெரிக்கா உள்ளதாக வட கொரியா குற்றஞ்சாட்டியுள்ளது.
 
பொருளாதார தடைகள் விதிக்க வேண்டும் என்ற எண்ணம்தான் அமெரிக்காவுக்கு உள்ளதாக ஐ.நாவுக்கான வட கொரிய தூதர் தெரிவித்தார். மேலும், கொரிய தீபகற்பத்தில் நிலவும் அமைதியை குலைக்க அமெரிக்கா முயற்சிப்பதாவகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
 
இருநாட்டு தலைவர்களும் சமீபத்தில் சந்தித்த வரலாற்று நிகழ்வு நடந்த சில நாட்களுக்கு பிறகு இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. வட கொரியா கோபமாக வெளியிட்டுள்ள இந்த அறிக்கை இரு நாடுகளுக்கு இடையே உள்ள உறவை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது.
வடகொரியா மீது மேலும் தடைகள் விதிக்க கேட்டு அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் கூட்டாக ஐநா உறுப்பினர் நாடுகளுக்கு எழுதிய கடிதத்துக்கு பதிலளிக்கும் விதமாகவே இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக அந்த நாடு தெரிவித்துள்ளது.
 
அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, அதிபர் டிரம்ப் உச்சிமாநாட்டிற்கு அழைப்பு விடுத்திருந்த அதேநாளில் இந்த நாடுகள் கூட்டாக எழுதிய கடிதமும் வெளியாகி இருக்கும் உண்மையை கவனிக்க வேண்டும்.
 
வட கொரியாவுடன் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நோக்கத்தோடு அமெரிக்கா உள்ளது. அதுவே நிதர்சனம். மேலும், நாடுகளில் உள்ள புலம்பெயர்ந்து வாழும் வடகொரிய தொழிலாளர்களை மீண்டும் அவர்களின் தாய்நாட்டிற்கே அனுப்ப வேண்டும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்