நேற்று (அக். 05) அமெரிக்காவின் புளோரிடாவிலிருந்து புறப்பட்ட விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையம் சென்றுள்ள நான்கு விண்வெளி வீரர்களில் நிக்கோல் மானும் ஒருவர்.
இவர்களை ஏற்றிக்கொண்டு சென்ற ஸ்பேஸ்எக்ஸ் ஃபால்கன் விண்கலம் சுமார் 29 மணி நேரத்தில் உரிய சுற்றுவட்டப்பாதையை அடைந்தது.
பிபிசியிடம் பேசிய நிக்கோல் மான், இந்த விண்வெளி திட்டம் வருங்கால பூர்வீக அமெரிக்கர்களுக்கு உத்வேகம் அளிக்கும் என நம்புவதாக தெரிவித்தார்.
"பூர்வகுடி அமெரிக்க குழந்தைகள் தங்கள் கனவுகளை நோக்கி பயணிக்கவும், ஏற்கனவே உள்ள தடைகள் தகர்த்தெறியப்படும் என்பதை உணர்வதற்கும் இது உத்வேகம் அளிக்கும் என நம்புகிறேன்," என நிக்கோல் மான் தெரிவித்துள்ளார்.
"எந்த நேரத்திலும் முதன்முறையாகவோ அல்லது கடந்த காலத்தில் யாரும் செய்யாத ஒன்றையோ நம்மால் செய்ய முடிந்தால் அந்த தருணம் மிக முக்கியமானது," எனவும் அவர் தெரிவித்துள்ளார். "அவர்களுக்கு இத்தகைய வாய்ப்புகள் உள்ளன" என அவர் தெரிவித்தார்.
அமெரிக்க கடற்படையின் பல்வேறு விமானங்களை இயக்குவதில் மிகுந்த அனுபவம் கொண்டவரான நிக்கோல் மான், ரவுன்ட் பள்ளத்தாக்கு செவ்விந்திய பூர்வகுடி இனங்களில் ஒன்றான வைலாகி இனத்தின் பதிவு செய்யப்பட்ட உறுப்பினர் ஆவார்.
இதுவரை தமது பணிக்காக ஆறு பதக்கங்களை பெற்றுள்ள அவர், ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானிலும் பணியாற்றியுள்ளார்.
பூர்வகுடி இந்தியர்கள் எதிர்கொள்ளும் கல்வி, பொருளாதார சவால்கள்
பொருளாதார சிக்கல்கள், தங்கள் பள்ளிகளுக்கு போதிய நிதி ஒதுக்கீடு இல்லாதது போன்ற சமூக பாகுபாடுகளை இந்த அமெரிக்கப் பூர்வகுடிகள் எதிர்கொண்டு வருகின்றனர். 2017ம் ஆண்டில் 27% பூர்வகுடி அமெரிக்கர்கள் மட்டுமே அசோசியேட் பட்டம் அல்லது அதற்கு மேலான படிப்பை நிறைவு செய்துள்ள நிலையில், அதே காலகட்டத்தில் 54% வெள்ளையின மாணவர்கள் மேல்படிப்பை நிறைவு செய்துள்ளனர் என, கல்வி புள்ளிவிவரங்களுக்கான அமெரிக்க தேசிய மையம் தெரிவித்துள்ளது.
2015ல் விண்வெளி பயிற்சியை நிறைவு செய்திருந்தாலும், விண்வெளிக்கு முதன்முறையாக செல்வதற்கு நிக்கோல் மான் 7 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது.
அவர் முன்பு போயிங்கின் ஸ்டார்லைனர் விண்கலத்தில் பணிக்கு நியமிக்கப்பட்டார், ஆனால் அது செயல்பாட்டுக்கு வருவதற்கு மிகவும் தாமதமானதால், நாசா நிக்கோல் மானை ஸ்பேஸ் எக்ஸ் - "க்ரூ 5" ஏவுதல் திட்டத்தில் நியமித்தது.
விண்வெளியில் அவர் என்ன செய்வார்?
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றதும் சுமார் 250 அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்ள தங்கள் குழு திட்டமிட்டுள்ளதாக நிக்கோல் மான் தெரிவித்தார். முப்பரிமாண அச்சு மனித செல்கள் முதல் தக்காளிகளை வளர்ப்பது, விண்வெளி நடைபயிற்சிகளை நடத்துதல் உள்ளிட்டவையும் இவற்றுள் அடங்கும்.
தன்னுடைய திருமண மோதிரம் மற்றும் புகைப்படங்கள் போன்ற குறைந்த எண்ணிக்கையிலான தனிப்பட்ட உடைமைகளை கொண்டு வர மட்டுமே அவர் அனுமதிக்கப்பட்டிருந்தாலும், தன்னுடைய குடும்பத்தின் பூர்வகுடி அமெரிக்க வேர்களை தன் பயணத்தில் நினைவுபடுத்த தான் திட்டமிட்டுள்ளதாக நிக்கோல் மான் பிபிசியிடம் கூறினார்.
"எனது அம்மா எனக்குக் கொடுத்த சிறப்பான ட்ரீம்கேட்சர் ஒன்றையும் என்னுடன் எடுத்துச் செல்கிறேன்," என அவர் தெரிவித்தார். ட்ரீம்கேட்சர் என்பது அமெரிக்க பூர்வகுடி அலங்காரப் பொருளாகும்.
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 'க்ரூ 5' செல்வதன் மூலம், அங்கு உள்ளவர்களின் எண்ணிக்கை 14ஆக உயரும்.
இந்த குழுவில் மற்றொரு அமெரிக்கரான ஜான் கசாடா, ஜப்பானின் கோய்ச்சி வாகடா மற்றும் ரஷ்யாவின் அன்னா கிகினா ஆகியோர் உள்ளனர்.
தொடரும் அமெரிக்க - ரஷ்ய ஒப்பந்தம்
தற்போது ரஷ்ய விண்வெளி ஏஜென்சியின் விண்வெளிப் படையில் உள்ள ஒரே பெண்மணியான கிகினாவின் பங்கேற்பு, ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே தற்போதுள்ள ஒப்பந்தம் தொடர்வதை காட்டுகிறது.
யுக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பால் பதற்றம் நிலவிய போதிலும், இரு நாடுகளும் பரஸ்பரம் விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சுமந்து செல்வதாக உறுதியளித்துள்ளன.
நிக்கோல் மான், கிகினா, கசாடா மூவரும் இதற்கு முன்பு விண்வெளிக்கு செல்லாத நிலையில், ஜப்பானின் வாகடா விண்வெளி பயணத்தில் மிகுந்த அனுபவம் கொண்டவராவார், ஏற்கனவே நான்கு முறை சுற்றுப்பாதைக்கு சென்றுள்ளார்.
இவர்கள் நால்வரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆறு மாதங்கள் தங்கியிருக்க திட்டமிட்டுள்ளனர்.
ஏற்கனவே அங்குள்ள 'குழு 4'-ல் உள்ள வீரர்கள், முதல் வாரத்தில் புதிய அணியிடம் பணிகளை ஒப்படைப்பர். பின்னர், குழு 4-ல் உள்ளவர்கள் அக்டோபர் 12 அன்று பூமிக்குத் திரும்புவர்.
பூமிக்குத் திரும்பும் விண்வெளி வீரர்களுள், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான ஐரோப்பாவின் முதல் பெண் கமாண்டர் சமந்தா கிறிஸ்டோஃபொரேட்டியும் ஒருவர்.