''நீட் தேர்வு அரசாங்க மருத்துவர்களின் எண்ணிக்கையை குறைக்கும்''
செவ்வாய், 5 நவம்பர் 2019 (20:19 IST)
மருத்துவப் படிப்பிற்கான கட்டாய நுழைவுத் தேர்வான நீட் தேர்வு ஏழை மாணவர்களுக்கு எதிரானதாக உள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளதை அடுத்து, தமிழக அரசு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறவேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் வலுவாக ஒலிக்கிறது.
நீட் தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தனியார் கல்லூரிகள் மருத்துவ சீட்டுகளை விற்று பெரும் லாபம் சம்பாதிப்பதைத் தடுக்க வேண்டும் என்றும், ஏழை மாணவர்கள் சமமான போட்டியில் பங்குபெறவேண்டும் எனபதற்காக கொண்டுவரப்பட்ட நீட் தேர்வு தற்போது தனியார் பயிற்சி மையங்கள் லாபம் ஈட்ட வழிவகுத்துவிட்டது என்றும் கூறியது.
பயிற்சி மையங்கள் செல்லாத மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றிபெறுவதில் கடும் சவால் இருப்பதை சுட்டிக்காட்டிய நீதிமன்றம், இந்த கட்டாயத் தேர்வை ஏன் திரும்பப்பெறக்கூடாது என கேள்வி எழுப்பியுள்ளது.
நீதிமன்றத்தின் கருத்துக்கள் நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் என்ற கோரிக்கைக்கு வலுசேர்த்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் கருத்துக்களை அனுபவம் மிக்க மருத்துவர்கள் பலரிடம் பிபிசி தமிழ் முன்வைத்தது. இந்த கட்டாய தேர்வின் அடிப்படையில் மாணவர்களை தேர்வு செய்வதால் பயனில்லை என்றும், ஏழை மாணவர்களின் மருத்துவ கனவைக் குலைப்பதாக நீட் தேர்வு இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
24 ஆண்டுகள் தமிழக அரசின் சுகாதாரதுறையில் பல்வேறு மட்டங்களில் பணியாற்றியவர் மருத்துவர். த.ஜெயக்குமார். பணியில் இருந்து ஒய்வு பெறும்போது, பொது சுகாதார பிரிவின் இணை இயக்குனராக இருந்தவர்.
மாணவனாக இருந்த காலத்தில், குடும்பச்சூழல் காரணமாக முதலாமாண்டு மருத்துவ படிப்பில் தான் தேர்ச்சி பெறவில்லை என்றும் ஆனால் படிக்க வாய்ப்பிருந்ததால், சிறந்த மருத்துவராக மாற முடிந்தது என்றும் கூறுகிறார் ஜெயக்குமார்.
''தேர்வுக்கு ஒரு மாதத்திற்கு முன்னர் என் தந்தை இறந்துவிட்டார். நான் படிப்பை விட்டு மளிகை கடையில் வேலைசெய்தேன். என்னைப் பற்றி கேள்விப்பட்ட ஆசிரியர்கள் மீண்டும் என்னை கல்லூரிக்கு அழைத்துவந்தனர். ஆனால் முதலாமாண்டு தேர்ச்சி பெறவில்லை. எனக்கு அவர்கள் கொடுத்த ஊக்கம் காரணமாக அடுத்தடுத்த ஆண்டுகளில் சிறந்த மாணவனாக தேர்ச்சி பெற்றேன். அரசாங்க வேலையும் கிடைத்தது,''என்கிறார் ஜெயக்குமார்.
''நீட் தேர்வு சரியான அளவுகோல் இல்லை''
''மருத்துவராகப் பணியாற்ற வேண்டும் என எண்ணுபவர்களுக்கு அர்ப்பணிப்பு உணர்வும், எல்லா உயிர்களுக்கும் உதவவேண்டும் என எண்ணமும்தான் தேவை. அதனை நீட் தேர்வு என்ற அளவுகோலால் அளக்க முடியாது. நீட் போன்ற தேர்வு முறை சிறந்த மருத்துவரை உருவாக்க முடியாது. தேர்வு மதிப்பெண்ணை கொண்டு அலுவலக வேலைகளுக்கு ஆட்களை தேர்வு செய்வது போன்ற துறை மருத்துவத் துறை அல்ல,''என்கிறார் ஜெயக்குமார்.
''நான்கு ஆண்டுகளுக்கு மேல் மருத்துவப் படிப்பு முடித்து, ஓர் ஆண்டு பயிற்சி பெற்ற ஒருவர்தான் மருத்துவராக வேலையை தொடங்குகிறார். அந்த நபர் ஒரு நுழைவுத் தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்து, அவர் அந்த துறைக்கு ஏற்றவர் என தேர்வு செய்வது சரியல்ல,''என்கிறார்.
"முன்னர் இருந்த நடைமுறையில்12ம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறந்த மதிப்பெண் எடுப்பவர்களுக்குத்தான் மருத்துவ சீட் கொடுக்கப்படும் என்பதில் எந்த குழப்பமும் இல்லை. ஆனால் நீட் தேர்வில் சிபிஸ்இ முறையில் கேள்விகள் இருப்பதால், மாநில பாடத்திட்டத்தைப் படிக்கும் மாணவர்களுக்கு சிக்கல் உள்ளது" என்கிறார் அவர்.
''முதலில் ஒரே விதமான பாடத்திட்டத்தை நாடு முழுவதும் கொண்டுவரவேண்டும். வெவ்வேறு பாடத்திட்டங்களை படிக்கும் மாணவர்களுக்கு ஒரு தேர்வை அடிப்படையாகக் கொண்டு மருத்துவ சீட் வழங்குவது நியாயமற்றது,''என்கிறார் ஜெயக்குமார்.
''ஆரோக்கியமான சூழலை கெடுக்கிறார்கள்''
15 ஆண்டுகளாக மருத்துவராக பணிபுரியும் எழிலன், நீட் தேர்வு தொடர்ந்தால் அரசு மருத்துவர்களின் எண்ணிக்கையை அது குறைக்கும் என்கிறார்.
''நீட் தேர்வில் மூன்று முறை தேர்வு எழுதலாம் என்பதால், அதற்கு தனியார் பயிற்சி மையத்தில் பெரிய தொகையை கட்டி படிக்கிறார்கள். இப்படி படிப்பவர்கள் குறைந்தபட்சம் மூன்று லட்சம் வரை ஒரு ஆண்டுக்கு செலவு செய்ய நேரிடும். ஏழை மாணவர்களுக்கு இது சாத்தியமில்லாதது. முதல் முறை தேர்வு எழுதுபவர்களோடு, இரண்டு, மூன்றாவது முறை தேர்வு எழுதுபவர்கள் போட்டியிடுவதால், நீட் தேர்வு சமமான போட்டி இல்லை,''என்கிறார்.
''இவ்வளவு அதிகமான பணத்தை செலவு செய்து படிப்பவர்கள் அரசு வேலைக்கு சேருவதற்கான சாத்தியம் எப்படி இருக்கும்? தனியார் மருத்துவர்களாக பலரும் வேலை செய்யத் தொடங்கிவிட்டால், விரைவில், அரசாங்க மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கு தட்டப்பாடு நிலவும். இதனால் வட மாநிலங்களைப் போல தமிழக மருத்துவமனைகளில் மருத்துவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் சூழல் உருவாகும். தமிழகத்தின் இலவச மதிய உணவு திட்டத்தை சுமார் 50 ஆண்டுகளுக்கு பின்புதான் வடமாநிலங்கள் புரிந்துகொண்டு தற்போது பின்பற்றுகிறார்கள். அதே போல மருத்துவத் துறையில் மத்திய அரசு நீட் தேர்வை கொண்டுவந்து தவறாக நடந்துகொள்கிறது,''என்கிறார்.
"இந்திய அளவில் மருத்துவத் துறையில்சிறந்துவிளங்கும் தமிழக மாடலை பின்பற்றாமல், நீட் தேர்வை கொண்டுவந்து இங்குள்ள ஆரோக்கியமான சூழலை கெடுக்கிறார்கள்" என விமர்சிக்கிறார் மருத்துவர் எழிலன்.
''மருத்துவ படிப்பிற்காக தமிழக அரசு நடத்திய நுழைவுத் தேர்வில் நான் எடுத்த மதிப்பெண் குறைவாக இருந்ததால், சந்தேகம் வந்தது. மதிப்பெண்ணை மீண்டும் கணக்கிட விண்ணப்பித்தேன். ஒன்பது மதிப்பெண்கள் கணக்கிடாமல் இருந்தது சரி செய்யப்பட்டது. இதுபோன்ற குளறுபடிகள் காரணமாக,தமிழக அளவிலான மருத்துவ இடங்களுக்கான பட்டியல் திருத்தி வெளியிடப்பட்டது. இதுபோன்ற திருத்தம் நீட் தேர்வில் சாத்தியம் இல்லை. நீட் தேர்வில் கேள்விகளில் பிழைகள் இருந்தபோதும் அதற்கான மதிப்பெண்கள் கொடுக்கப்படவில்லை. தவறான தேர்வு முறையை கொண்டு சிறப்பான மருத்துவர்களை எப்படி உருவாக்கமுடியும்?''என கேள்வி எழுப்புகிறார் எழிலன்.